ஒகேனக்கல்: ஒகேனக்கல், காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு, 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணைகளின் பாதுகாப்பு கருதி, கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதியை ஒட்டிய பிலிகுண்டுலு, அஞ்செட்டி, கேரிட்டி, தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல்லில் குளிக்க தடை: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தலத்துக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின், பல்வேறு நிபந்தனைகளுடன் தற்போது ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் நிபந்தனையுடன் கடந்த, 27ல் அனுமதியளித்தது. ஒகேனக்கல்லில் நேற்று, சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. அவர்கள் பரிசல் துறையிலிருந்து, ஐந்தருவி வரை பரிசலில் சென்று அருவிகளின் இயற்கை எழில்மிகு அழகை கண்டு ரசித்தனர். மேலும் மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். கடந்த, 1ல் இருந்து ஒகேனக்கல்லில் குளிக்க அனுமதி என, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்த நிலையில், தொடர்ந்து குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE