பள்ளி சிறுவன் மாயம்; போலீஸ் விசாரணை; இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : அக் 05, 2021 | Added : அக் 05, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்'நீட்' வழக்கு: ரூ. 5 லட்சம் அபராதம்?புதுடில்லி: மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு செப்., 12ல் நடந்தது. 'ஆள்மாறாட்டம், வினாத்தாள் வெளியானது உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, அதில் பங்கேற்ற சலோனி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அவரது கருத்தை ஏற்க
இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்'நீட்' வழக்கு: ரூ. 5 லட்சம் அபராதம்?

புதுடில்லி: மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு செப்., 12ல் நடந்தது. 'ஆள்மாறாட்டம், வினாத்தாள் வெளியானது உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, அதில் பங்கேற்ற சலோனி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அவரது கருத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'தேர்வு ரத்தானால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர்' என்றனர். மேலும், இந்த மனுவை தாக்கல் செய்ததற்காக மனுதாரருக்கு ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் போவதாக தெரிவித்த நீதிபதிகள், பின், எச்சரிக்கை மட்டும் விடுத்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

நடிகை கணவர் மீது வழக்கு

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த திரைப்பட பாடலாசிரியரும், நடிகை ஷபானா ஆஸ்மியின் கணவருமான ஜாவேத் அக்தர், 76, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினருக்கு எதிரான கருத்துகளை, 'டிவி'யில் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு மன்னிப்பு கோரும்படி வழக்கறிஞர் சந்தோஷ் துபே 'நோட்டீஸ்' அனுப்பினார். அக்தர் அதை ஏற்கவில்லை. இதற்கிடையே, சந்தோஷ் அளித்த புகாரின் அடிப்படையில் அக்தர் மீது போலீசார் நேற்று, கைது செய்ய அவசியமற்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்

எம்.எல்.ஏ., 'சஸ்பெண்ட்'

கவுகாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமின் தர்ராங் மாவட்டத்தில், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றியது தொடர்பாக வகுப்புவாத மோதல்களை துாண்டும் கருத்துகளை, பதிவிட்டதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஷெர்மன் அலி அகமது மீது தேச துரோக வழக்கு பதிவு செய்த போலீசார், சமீபத்தில் அவரை கைது செய்தனர். இந்நிலையில் கட்சி விதிகளை தொடர்ந்து மீறியதாக அவர், காங்.,கில் இருந்து நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

சிறுமிக்கு சூடு: சித்தி கைது

துவாரகா: குஜராத்தின் துவாரகா மாவட்டத்தில், 6 வயது சிறுமியின் தாய் இறந்ததால், தந்தை மற்றொரு திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் லட்டு சாப்பிட்டாக கூறி, அந்த சிறுமிக்கு, சித்தி உடல் முழுதும் சூடு வைத்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி விவரிக்கும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த போலீசார், கொடுமைக்கார சித்தியை நேற்று கைது செய்தனர்.


தமிழக நிகழ்வுகள்

பேச்சை கேட்காத மனைவி: கணவன் தூக்கிட்டு தற்கொலை

மதுரவாயல் : கணவனின் பேச்சை கேட்காமல், மனைவி தன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றதால், விரக்தியடைந்தவர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

மதுரவாயல், சக்கரபாணி நகர் 14வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 31. இவர், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவரது மனைவி ரம்யா.தம்பதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் ரம்யா, அரக்கோணத்தில் உள்ள உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என, கணவரிடம் கேட்டுள்ளார்.அதற்கு, சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், கணவரின் பேச்சை கேட்காத ரம்யா, உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு, குழந்தைகளையும் அழைத்து அரக்கோணம் சென்றார்.இதனால் விரக்தியடைந்த சந்திரசேகர், நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிலேயே இருந்துள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, சந்திரசேகர் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


latest tamil news


போதை பவுடர் கடத்தல்காரர்கள் கைது

சென்னை : சென்னை மற்றும் கேரளாவில் இருந்து, வெளிநாடுகளுக்கு போதை பவுடர், கஞ்சா எண்ணெய் கடத்த முயன்றவர்களை, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து, கூரியரில் பஹ்ரைன் நாட்டிற்கு போதை பொருள் கடத்தப்படுவதாக, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, செப்.,12ல், போலீசார் சந்தேகப்படும்படி செயல்பட்ட கூரியர் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்து கூரியரில் மூலிகை பொருள் போல, பெங்களூரில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு, 3.5 கிலோ கஞ்சா எண்ணெய் கடத்தப்பட இருந்தது தெரிய வந்தது.அதன்பின், பெங்களூரில் பதுங்கி இருந்த போதை பொருள் கடத்தல் ஆசாமி கைது செய்யப்பட்டார். கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில், அவரது கூட்டாளி நேற்று கைதானார்.முன்னதாக, செப்., 22ல், ஆஸ்திரேலியாவுக்கு வீட்டு உபயோக பொருட்களுடன் கடத்த இருந்த, 11.6 கிலோ எடையுள்ள 'சூடோஎபிட்ரின்' போதை பவுடர், எர்ணாகுளத்தில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

செப்., 25, 26ல், சென்னை விமான நிலையத்தில், கார்கோ பிரிவில், 8 கிலோ சூடோஎபிட்ரின் போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது. போதை பவுடரை பார்சலில் அனுப்பிய, காரைக்காலைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு, 4 கிலோ சூடோஎபிட்ரின் போதை பவுடர் கடத்தியது தெரியவந்தது.உடனடியாக ஆஸ்திரேலிய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு பார்சலில் கடத்தப்பட்ட சூடோஎபிட்ரின் போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்று வாரத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா எண்ணெய், போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், பிரபல போதை பவுடர் கடத்தல் கும்பல் சிக்கி உள்ளதாகவும், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

ஐ.டி., ஊழியருக்கு கத்திகுத்து: போதை ஆசாமிகள் கைது

சூளைமேடு, : ஐ.டி., ஊழியரை கத்தியால் குத்திய போதை ஆசாமிகள் மூவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

சூளைமேடு, பஜனை கோவில், 4வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 25; ஐ.டி., ஊழியர். நேற்று முன்தினம் இரவு, கில்நகர் பூங்காவில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது மதுகுடிக்கவும், கஞ்சா புகைக்கவும் வந்த மூவரை, மணிகண்டன் விரட்டி அடித்து உள்ளார். அந்த மூவரும் கத்தியுடன் மீண்டும் மைதானத்திற்கு வந்து, அங்கு விளையாடிக் கொண்டிருந்த மணிகண்டனை கத்தியால் முதுகிலும், கால்களிலும் குத்திவிட்டு, தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயம்அடைந்த மணிகண்டன், சிகிச்சைக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சூளைமேடு போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட, மேற்கு நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த தினேஷ், 24, சுரேஷ், 25, சுப்பிரமணி, 24 ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர்.


latest tamil news


மூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது

பீர்க்கன்கரணை : மூதாட்டியை தாக்கி நகை, பணம் பறித்த வழக்கில் ஒருவரை, பீர்க்கன்கரணை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேற்கு தாம்பரம், கடப்பேரி தெற்கு குளக்கரை தெரு, முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கெங்கம்மாள், 51; கட்டட தொழிலாளி.இவர், கடந்த மாதம் 25ம் தேதி இரவு, தன்னுடன் பணிபுரிந்த ஒருவர் தன்னை கட்டையால் தாக்கி, நான்கு சவரன் செயின், அரை சவரன் கம்மல், வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறித்துச் சென்றதாக, பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் விசாரித்து, நேற்று முன்தினம்

இரவு, காஞ்சிபுரம் செட்டியார்பேட்டையைச் சேர்ந்த ஏகாம்பரம், 40, என்பவரை, மாங்காடு அருகே பிடித்தனர்.விசாரணையில், கெங்கம்மாளுக்கும் உடன் பணிபுரிந்த ஏகாம்பரத்திற்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், சம்பவத்தன்று கெங்கம்மாளிடம் அவர் பணம் கேட்டதாகவும், தர மறுத்ததால் கெங்கம்மாளை தாக்கி நகைகளை பறித்து தப்பியதாகவும் போலீசார் கூறினர்.நேற்று மாலை, ஏகாம்பரத்தை போலீசார் கைது செய்தனர்.

முதல்வர் வீட்டிறகு முன் தீக்குளித்தவர் உயிரிழப்பு

சென்னை : துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, ஜமீன் தேவர்குளம் காலனி தெருவைச் சேர்ந்தவர் வெற்றிமாறன், 48. இவர், சென்னை தேனாம்பேட்டை, சித்தரஞ்சன் தெருவில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு முன், செப்., 27ம் தேதி காலை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது, அங்கு பணியில் இருந்த போலீசார், அந்த நபர் மீது இரண்டு கேன் தண்ணீரை ஊற்றி, தீயை அணைத்தனர். விசாரணையில், ஜமீன் தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, வெற்றிமாறன் மனு தாக்கல் செய்திருந்ததும், மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள், விண்ணப்பத்தை நிராகரித்ததும், இதனால், விரக்தியில் இருந்தவர் தீக்குளித்ததும் தெரியவந்தது.வெற்றிமாறன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். உடல் முழுதும், 55 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று இறந்தார்.தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பள்ளி சிறுவன் மாயம்: போலீஸ் விசாரணை

பல்லடம்:பல்லடம் அருகே நடைபயிற்சி சென்ற சிறுவன் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அடுத்த பூராண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார், 42; 'கேபிள் டிவி' ஆபரேட்டர். மனைவி சீதாலட்சுமி, 36, மகன்கள் கவினேஷ், 18, சிவநேசன், 15 ஆகியோருடன் வசித்து வருகிறார்.சிவநேசன், லட்சுமிநாயக்கன்பாளையம் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். இரண்டு நாள் முன் நடைபயிற்சி சென்ற இவர் மாயமானார்.பெற்றோர் கூறுகையில், 'சிவநேசன் மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்வது வழக்கம். 3ம் தேதி மாலை நடைபயிற்சி சென்றவர் திரும்பி வரவில்லை. சுல்தான்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளோம்,' என்றனர்.'கடத்தப்பட்டாரா' என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

கருகிய நிலையில் சடலம்: போலீஸ் விசாரணை

பல்லடம்:குட்டைக்குள், கருகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பல்லடம் அருகே அருள்புரம் - பாச்சாங்காட்டுப்பாளையத்தில் உள்ள குட்டை ஒன்றில், நேற்று கருகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது.

சிலர், பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி., வெற்றிச்செல்வன் தலைமையில் விரைந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு விசாரணையில் ஈடுபட்டனர்.போலீசார் கூறுகையில், 'இறந்தது வட மாநில தொழிலாளியின் சடலம் போல் உள்ளது. தலைமீது எரிபொருள் ஊற்றி பற்ற வைத்ததில் உடல் கருகி எரிந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,' என்றனர்.

மோப்ப நாய் அர்ஜூன், சிறிது துாரம் சென்று மீண்டும் அதே இடத்துக்கு திரும்பியது. சடலத்தின் அருகே கிடந்த பாட்டில், மற்றும் தீப்பெட்டி உள்ளிட்டவற்றை தடய அறிவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X