விளாச்சேரி மண்ணில் விளையும் களிமண் பொம்மைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விளாச்சேரி மண்ணில் விளையும் களிமண் பொம்மைகள்

Added : அக் 05, 2021
Share
மதுரை : மதுரை மாவட்டம் விளாச்சேரியில் உற்பத்தியாகும் களிமண், பேப்பர் கூழ் பொம்மைகள் வெளிநாடு வாழ் தமிழர் வீட்டு கொலுக்களை அலங்கரிக்கின்றன.மதுரை குலாலர் கைவினைஞர்கள் நலச்சங்க மூத்த நிர்வாகி ராமலிங்கம் கூறியதாவது: மதுரையில் அந்த காலத்தில் திருநகரில் உள்ள சித்திரை கலா ஸ்டூடியோவில் வேதாள உலகம் என்ற படம் எடுக்கப்பட்டது. அதற்கு வித்தியாசமாக பொம்மை உருவங்கள்
 விளாச்சேரி மண்ணில் விளையும் களிமண் பொம்மைகள்

மதுரை : மதுரை மாவட்டம் விளாச்சேரியில் உற்பத்தியாகும் களிமண், பேப்பர் கூழ் பொம்மைகள் வெளிநாடு வாழ் தமிழர் வீட்டு கொலுக்களை அலங்கரிக்கின்றன.

மதுரை குலாலர் கைவினைஞர்கள் நலச்சங்க மூத்த நிர்வாகி ராமலிங்கம் கூறியதாவது: மதுரையில் அந்த காலத்தில் திருநகரில் உள்ள சித்திரை கலா ஸ்டூடியோவில் வேதாள உலகம் என்ற படம் எடுக்கப்பட்டது. அதற்கு வித்தியாசமாக பொம்மை உருவங்கள் செய்வதற்காக கடலுாரில் இருந்து கண்ணப்ப பத்தர், தங்கவேல் பத்தர் போன்ற டிசைனர்கள் மதுரை வந்து தங்கினர். நாளடைவில் படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டது.

ஆனால் இந்த இருவரும் திருமங்கலத்தில் தங்கி விட்டனர். அவர்களிடம் இருந்து எங்கள் உறவினர்கள் சதாசிவம், சூரன் இன்னும் சிலர் வித்தியாசமான பொம்மைகள் செய்ய கற்றுக் கொண்டனர். ஏழு வயதில் கற்றுக் கொண்டேன். 20 வயதில் இதுதான் தொழில் என முடிவு செய்தேன். ஆரம்பத்தில் விநாயகரில் 2, மீனாட்சியில் 2 என 10 வகை பொம்மைகள் தான் தயாரித்தோம். அவற்றை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள கடைகளில் விற்றோம். பின்னர் கதர் நிலையத்தில் விற்க ஆரம்பித்த போது தேவை அதிகரித்தது.

16 பேர் தொழிலில் ஈடுபட்ட போது சங்கமாக ஆரம்பித்தேன். இப்போது 100 குடும்பங்கள் சங்கத்தில் இணைந்துள்ளனர்.களிமண் பொம்மைகள் தான் அடிப்படை ஆதாரம். விளாச்சேரி கண்மாயில் பருவமழை காலத்தில் தண்ணீர் ததும்பி நிற்கும். தண்ணீர் வடியும் போது 2 அடி ஆழத்திற்கு வண்டல் மண் கிடைக்கும். அதைக் கொண்டு பொம்மைகள் தயாரிப்போம். இந்த மண் தான் களிமண் பொம்மை செய்வதற்கேற்ற பக்குவத்தில் இருக்கிறது.ஆண்டு தோறும் எங்களுக்கு இலவசமாக மணல் அள்ள அரசு அனுமதி தருகிறது.

அதை கொண்டு மற்ற பொருட்களை வாங்கி பொம்மைகள் தயாரிக்கிறோம். ஆரம்பத்தில் செம்மண், அவுரி செடி கொண்டு இயற்கை வர்ணம் பூசினோம். இப்போது எனாமல் பெயின்ட் பயன் படுத்துகிறோம்.எடை அதிகம்களிமண் பொம்மைகளை வெளிநாட்டினர் விரும்பினாலும் எடை அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். அதனால் காகிதக்கூழ் பொம்மைகளை தயாரிக்க ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் சிகைக்காய் அரைக்கும் இயந்திரத்தில் தான் பேப்பரை அரைத்து கிழங்கு மாவு சேர்த்தோம்.

தற்போது காகிதக்கூழ் பவுடர் தொழிற்பேட்டையிலிருந்தும் சாக்பீஸ் பவுடர் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்தும் சில நேரங்களில் இலவசமாக, குறைந்தவிலைக்கு கிடைக்கிறது. ஒரு பங்கு பவுடர், 3 பங்கு சாக்பீஸ் பவுடர், பசை கொண்டு சப்பாத்தி மாவு போல பிசைந்து மோல்டில் வைக்க வேண்டும்.

களிமண், காகிதக்கூழ் பொம்மை இரண்டுக்கும் ஒரே மோல்டு, பெயின்ட் தான். களிமண்ணை மோல்டில் வைக்கும் போது அதன் ஈரத்தை மோல்டு உறிஞ்சி விடும் என்பதால் ஒருநாளைக்கு 50 களிமண் பொம்மைகள் செய்யலாம். காகிதக்கூழ் பொம்மைகளை 4 - 5 மணி நேரம் வெயிலில் காயவைக்க வேண்டும். ஒரு நாளில் 3 - 5 பொம்மைகள் தான் செய்ய முடியும்.நவராத்திரி முடிந்த மறுநாளே அடுத்தாண்டிற்கான பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபடுவோம். இப்போது 100 வகை தனி சிலைகள், 100 வகை செட் கொலு பொம்மைகள் தயாரிக்கிறோம். ஆண்டுதோறும் புதிதாக கற்பனைக்கேற்ப பொம்மைகளை உருவாக்குவோம்.பிப்ரவரியில் வெயில் படும் போது சூளை அமைத்து பொம்மைகளை நெருப்பில் இடுவோம்.

மே, ஜூன் மாதங்களில் பெயின்டிங் பணி துவங்கும். மொத்த விற்பனை காலம் 4 மாதங்கள் தான். அதற்கு 8 மாதங்கள் வரை தொடர்ந்து உழைக்க வேண்டும். இப்போது ஆண்டுக்கு ரூ. 7 கோடி வரை களிமண், காகிதக்கூழ் பொம்மைகளை தயாரிக்கிறோம். ரூ.5 கோடி வரை விற்பனையாகும். மீதியுள்ளவை அடுத்தாண்டு விற்பனையுடன் சேர்ந்து விடும்.

வாடிக்கையாளர்களின் கற்பனைக்கேற்ப பொம்மை கொலு செட்களை தயாரிக்கிறோம். பிள்ளைகள் டாக்டராக, இன்ஜினியராக, போலீசாக வேண்டும் என வேண்டிக் கொள்ளும் பெற்றோர் வேண்டுதல் நிறைவேறியதும் போலீஸ், டாக்டர், இன்ஜினியர் பொம்மைகளை தயாரிக்க சொல்கின்றனர். திருமணம் ஆக வேண்டி கல்யாணசெட் வாங்கிச் செல்வோரும் அதிகம்.சீன தயாரிப்பு பொம்மைகளை நம்பியிருக்க வேண்டாம் என பிரதமர் மோடி அறிவித்தார்.

அதற்கு மாற்று தேடிய போது மதுரை விளாச்சேரி பொம்மைகள், பர் பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் கணக்கில் எடுக்கப்பட்டன.பிரதமர் மேம்பாட்டு நிதிதிருச்சி என்.ஐ.டி., விஞ்ஞானிகள் விளாச்சேரி பொம்மைகளை ஆய்வு செய்த போது மண்ணின் தரம் குறைந்து வருவது குறித்து தெரிவித்தோம். மண்ணை மேம்படுத்துவது குறித்தும் விளாச்சேரிக்கு அடுத்து மதுரையில் துவரிமான் கண்மாய் வண்டல் ஓரளவு தரமாக இருப்பதால் அந்த மண்ணையும் ஆய்வு செய்கின்றனர்.

பொம்மை தயாரிப்பு மேம்பாட்டுக்காக பிரதமர் மேம்பாட்டு நிதியில் ரூ.60 கோடி வரை உள்கட்டமைப்பு, உபகரணங்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டது. விளாச்சேரிக்கு மட்டும் ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டது. விளாச்சேரி பொம்மைகளின் தரத்தை குறிப்பதாக புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பித்துள்ளோம். விரைவில் கிடைத்து விடும். இதன் மூலம் எதிர்காலத்தில் இத்தொழிலில் ஈடுபடும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


இந்த ஆண்டின் புதுமை


இந்தாண்டு புதுமையாக நவ நரசிம்மர், அஷ்டதிக்கு பாலகர்கள், வேதமூர்த்தி ரிக், யசூர், சாம, அதர்வன வேத மூர்த்திகளை கொலு பொம்மைகளாக உருவாக்கியுள்ளோம். இதற்கு எங்கும் சிலைகள் இல்லை. கோயில் சிற்பம், ஓவியங்களைப் பார்த்து வேதமூர்த்தி, அஷ்டதிக்கு பாலகர்கள் சிலை செய்தோம்.தனி களிமண் பொம்மைகள் ரூ.20 முதல் ரூ.12ஆயிரம் வரையும் காகிதக்கூழ் பொம்மைகள் ரூ.500 முதல் ரூ.15ஆயிரம் என, எங்களின் உழைப்பு, மூலதனத்தை கணக்கிட்டு குறைந்தளவு லாபம் வைத்து விற்கிறோம், என்றார். தொடர்புக்கு: 98949 25744.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X