சென்னை : தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பாடல்கள் காப்பி சர்ச்சை அதிகமாகி வருகிறது. அந்தவகையில் நேற்று வெளியான ரஜினியின் அண்ணாத்த பாடல், ரஜினியின் முந்தைய படமான படையப்பா பாடலை சுட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது.
சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்படத்தில் இமான் இசையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‛அண்ணாத்த அண்ணாத்த' பாடலை நேற்று வெளியிட்டனர். ரசிகர்களை இந்த பாடல் கவர்ந்துள்ளது. வெளியான 16மணிநேரத்தில் 28 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.

அதேசமயம் இந்த பாடல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரஜினி நடித்த படையப்பா படத்தில் வரும் ‛‛என் பேரு படையப்பா...'' பாடலை சுட்டு, மெட்டுகளை கம்யூட்டரில் கொஞ்சம் மெருகேற்றி இமான் கொடுத்துள்ளதாக சமூகவலைளதங்களில் சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டு பாடல்களின் பின்னணியில் வரும் மெட்டு ஒரே மாதிரியாக இருக்கிறது. இதில் வேடிக்கையான விஷயம் இரண்டு பாடல்களையும் பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இமான் இதற்கு முன்னரும் இதுபோன்று காப்பி சர்ச்சையில் சிக்கினார். அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் வரும் வேட்டி கட்டு பாடல், அரசன் சோப் விளம்பரத்தை சுட்டு எடுக்கப்பட்டதாக அப்போது அந்த பாடல் வெளியான போது ஒரு சர்ச்சை ஓடியது. அதேப்போன்று ரஜினிக்கும் இதுமாதிரி காப்பி சர்ச்சை புதிதல்ல. இதற்கு முன் அனிருத் இசையில் ரஜினி நடிப்பில் வெளியான நான் தாண்டா இனி மேலு தர்பார் பாடல் ஐயப்பன் சுவாமி பாடலை தழுவி எடுக்கப்பட்டதாக அப்போது நெட்டிசன்கள் மத்தியில் அப்போது அதிகமாக டிரோல் ஆனது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE