லகிம்பூர் கெரி: பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் போராட்டம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக உத்திரபிரதேசம், ஹரியானா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
உ.பி.,யில் சர்ச்சைக்குள்ளான மூன்று விவசாய மசோதாக்களை நீக்கக்கோரி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகள் மீது மோதியது. இந்த கார் மோதலில் 4 விவசாயிகள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய கார்கள் விவசாயிகளால் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இச்சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை அடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதேநேரத்தில், லகிம்பூர் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்காவை நேற்று அதிகாலை 4:30 மணியளவில் போலீசார் தடுத்து நிறுத்தி விருந்தினர் மாளிகையில் தடுப்பு காவலில் வைத்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். மேலும் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த விவசாயிகள் குறித்த வீடியோ ஒன்றையும் அவர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 25 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவை தனது ஸ்மார்ட் போனில் பிளே செய்து அதனை டுவிட்டரில் பதிவிட்டு ‛இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள் பிரதமர் அவர்களே?' என்று அவர் எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவில், ‛எந்த உத்தரவும் எப்.ஐ. ஆரும் இன்றி கடந்த 28 மணி நேரமாக உங்கள் அரசு (பிரதமர் மோடி) என்னை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. லகிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றிய நபரை இதுவரை ஏன் கைது செய்யவில்லை?' என்று பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், பிரியங்காவை போலீசார் முறைப்படி கைது செய்தனர். மேலும், ஹர்கான் போலீஸ் ஸ்டேசனில், பிரியங்கா உள்ளிட்ட 11 பேர் மீது 151 மற்றும் 107 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE