சென்னை : வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில், அனைத்து கோவில்களையும் திறக்கக்கோரி, வரும், 7ம் தேதி, பா.ஜ., சார்பில், கோவில்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக அரசு கொரோனாவை காரணம் காட்டி, வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில், அனைத்து கோவில்களையும் மூடி, பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்துள்ளது. பஸ், ரயில், தியேட்டர், டாஸ்மாக் கடைகள், மால்கள் என அனைத்தும் இயங்குகின்றன. கோவில்களையும், சர்ச்சுகளையும், மசூதிகளையும் மட்டும் மூடிவைத்து, பக்தர்களின் வழிபாட்டிற்கு இடையூறாக, அரசு நிற்பது ஆச்சரியம் அளிக்கிறது.
இனியும் காலம் தாழ்த்தாமல், உடனே அனைத்து வித கோவில்களையும் திறக்குமாறு, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல, 7ம் தேதி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.சென்னை காளிகாம்பாள் கோவில் முன் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு, நான் தலைமை ஏற்கிறேன். திருவண்ணாமலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சரஸ்வதி எம்.எல்.ஏ.,வும்; ராமேஸ்வரத்தில் முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜாவும் பங்கேற்கின்றனர்.
பழனியில் முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்; திருச்செந்துாரில் சட்டசபை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்; கோவை கோனியம்மன் கோவிலில், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., - பொது செயலர் செல்வகுமார் பங்கேற்கின்றனர். நாகர்கோவில் ஸ்ரீ நாகராஜா கோவிலில் காந்தி எம்.எல்.ஏ.,வும், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மாநில துணை தலைவரான வி.பி.துரைசாமியும் பங்கேற்கின்றனர்.
கிறிஸ்துவ தேவாலங்கள், இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் அருகே, பா.ஜ.,வின் சிறுபான்மையினர் அணி தலைவர்கள் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இவ்வாறு அண்ணாலை தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE