வாஷிங்டன்: 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நேற்று முன்தினம் ஆறு மணி நேரம் முடங்கியதால், அந்த நிறுவனத்துக்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்த பேஸ்புக் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுகர்பெர்க் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். தொழில்நுட்ப பிரச்னையால் ஏற்பட்ட இந்த முடக்கத்துக்காக, பயனாளர்களிடம் பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கேட்டுஉள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் பேஸ்புக் நிறுவனம் சார்பில், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர்' என பல சமூக வலைதளங்கள் உள்ளன. உலகெங்கும் இந்த தளங்களை 350 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவில் இந்த சமூக வலைதளங்கள் திடீரென முடங்கின. உலகெங்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டது. ஆறு மணி நேரத்துக்குப் பின், நேற்று அதிகாலையில் இவை மீண்டும் செயல்படத் துவங்கின.
இது குறித்து, பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: எங்கள் தளங்களின் மென்பொருளின், 'கான்பிகரேஷன்' எனப்படும் வடிவமைப்பில் ஏற்பட்ட பிரச்னையை சீர்செய்யும்போது, அவை முடங்கிஉள்ளன. இந்த முடக்கத்தால் பயனாளிகளின் தகவல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பிரச்னை சீர்செய்யப்பட்டு தற்போது மீண்டும் அனைத்து தளங்களும் பயன்பாட்டுக்கு வந்துஉள்ளன. இந்த முடக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள தொழில்கள், தனிநபர்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். பிரச்னைக்கு காரணம் என்ன என்பதை ஆராய்ந்து, எதிர்காலத்தில் இது போன்ற சூழ்நிலை ஏற்படுவதை தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பல தகவல்கள்
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுகர்பெர்க்கும் இந்த முடக்கத்துக்கு மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார்.முன்னதாக இந்த முடக்கம் தொடர்பான தகவல்களை 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், பேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகியவை வெளியிட்டிருந்தன.உலகெங்கும் 350 கோடிக்கும் மேற்பட்டோர், பேஸ்புக் நிறுவனத்தின் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் அனைத்து தளங்களும் முடங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.
இழப்பு
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களை நம்பி பல நாடுகளில் தொழில்கள் இயங்கி வருகின்றன. மக்களும் கருத்து, தகவல் பரிமாற்றத்துக்கு பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றையே நம்பியுள்ளனர். இந்த தளங்கள் ஆறு மணி நேரம் முடங்கியதால், பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
அதைவிட, பேஸ்புக் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுகர்பெர்க் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆறு மணி நேரத்தில், 53 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்த அவர், ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இதைத் தவிர, இந்த முடக்கத்தினால் பங்கு சந்தையில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிவை சந்தித்தது.பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் இன்ஜினியரான பிரான்சஸ் ஹாகன், நிறுவனம் தொடர்பாக பல தகவல்களை சமீபத்தில் வெளியிட்டார். வரி ஏய்ப்பு செய்வது, பயனாளிகளின் தகவல் பாதுகாப்பதில் மெத்தனம் காட்டப்படுகிறது என, பல தகவல்களை அவர் ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அமெரிக்க பார்லிமென்ட் குழு முன் அவர் ஆஜராக இருந்தார். இந்நிலையில் இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE