மின்வேலியில் சிக்கி தம்பதி பலி: இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்:வெடி விபத்து: பலி உயர்வுமுசாபர் நகர்: உத்தர பிரதேசத்தில் ஷாம்லி மாவட்டத்தின் கைரானா நகரில் உள்ள பட்டாசு ஆலையில் சமீபத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த ஒருவர் மீரட் மருத்துவ மனையில் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.போதை பொருள்: மேலும் இருவர் கைதுமும்பை: மும்பை கடற்பகுதியில் போதைப்
Crime, Murder, arrest


இந்திய நிகழ்வுகள்:வெடி விபத்து: பலி உயர்வு


முசாபர் நகர்: உத்தர பிரதேசத்தில் ஷாம்லி மாவட்டத்தின் கைரானா நகரில் உள்ள பட்டாசு ஆலையில் சமீபத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த ஒருவர் மீரட் மருத்துவ மனையில் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.


போதை பொருள்: மேலும் இருவர் கைது


மும்பை: மும்பை கடற்பகுதியில் போதைப் பொருள் 'பார்ட்டி' நடத்தியதாக, பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுஉள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் இரண்டு பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.


புத்தக மோசடி: ஒருவர் கைது


புதுடில்லி: என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிடும் பள்ளி பாடப் புத்தகங்களை கள்ளத்தனமாக அச்சடித்து விற்றவர், டில்லியின் ஷாதராவில் கைது செய்யப்பட்டார். கொரோனாவால் வேலை இல்லாததால், கள்ளத்தனமாக இந்த பாடப் புத்தகங்களை அச்சடித்து விற்று வந்ததாக அவர் விசாரணையில் கூறியுள்ளார்.


காஷ்மீர் பண்டிட் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் உட்பட மூன்று பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர் இக்பால் பூங்காவில் மருந்தகம் நடத்தி வருபவர் மக்கன் லால் பிந்த்ரூ, 68. பிரபல தொழிலதிபர். காஷ்மீர் பண்டிட் இனத்தைச் சேர்ந்தவர். தன் உறவினர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறினாலும் இவர் மட்டும், தன் மனைவியுடன் ஸ்ரீநகரிலேயே இருந்தார். மருந்தகத்துக்கு வந்த பயங்கரவாதிகள், பிந்த்ரூவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவத்தை அடுத்து ஸ்ரீநகரில் வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் இருவர் உயிரிழந்தனர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக நிகழ்வுகள்:எஸ்.எஸ்.ஐ., துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


திருப்போரூர் : மேலக்கோட்டையூரில் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., ஒருவர், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூர் போலீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., கவுதம் 59. இவருக்கு மனைவி, 27, மற்றும் 16 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.கவுதம், அமைச்சர், நீதிபதி போன்றவர்களுக்கு பாதுகாப்பு பிரிவு பணியில் ஈடுபட்டு வந்தார். சில நாட்களாக சென்னையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 8:15 மணிக்கு, வீட்டில் தனியாக இருந்த கவுதம், தன் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு, தற்கொலை செய்துகொண்டார்.தகவல் கிடைத்ததும் தாழம்பூர் போலீசார் விரைந்து சென்றனர். அங்கிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


அ.தி.மு.க., வேட்பாளரிடம் ரூ.1.33 லட்சம் பறிமுதல்


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அ.தி.மு.க., வேட்பாளரிடம் இருந்து 1.33 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. திமிரி ஊராட்சி ஒன்றியத்தில், ஆறாவது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் விநாயகம், பழையனுார் பகுதியில் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக, தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரி வெங்கடாசலம் தலைமையில், பறக்கும் படையினர் அங்கு சென்றபோது, விநாயகம் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த 1 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைத்தனர். விநாயகம் மீது திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


latest tamil newsகருக்கலைப்பு செய்த பெண் சாவு


சின்னசேலம்: சின்னசேலம் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து, உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் இறந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த பாண்டியன்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி சந்திரலேகா, 29; இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் நான்கு மாத கர்ப்பமாக இருந்தார்.சின்னசேலம் தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றார்.

குழந்தை வளர்ச்சியில்லை எனக் கூறி, 30ம் தேதி கருக்கலைப்பு செய்துஉள்ளனர். ரத்தப் போக்கு ஏற்பட்டு, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், சின்னசேலம் தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர். 'தவறான சிகிச்சை அளித்த டாக்டரை கைது செய்ய வேண்டும். மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும்' எனக் கோரி, சாலை மறியல் செய்தனர். டி.ஆர்.ஓ., விஜய்பாபு உத்தரவின்படி, மருத்துவமனைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.


குளிர்பானத்தில் விஷம்: தாய், மகன் தற்கொலை


ப.வேலுார்: உடல்நிலை பாதிப்பால், குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த தாய், மகன் உயிரிழந்தனர். தந்தை சிகிச்சை பெற்று வருகிறார்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார், சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் சையது அக்பர், 60; மனைவி பாத்திமா, 55; மகன்கள் சிக்கந்தர் பாஷா, 35; பர்கத், 30. சிக்கந்தர் பாஷா திருமணமாகி, வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பர்கத், பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு கடிதம் கொடுத்து, பக்கத்து தெருவில் உள்ள தன் மைத்துனரிடம் கொடுத்து விடும்படி, சையது அக்பர் கூறியுள்ளார். கடிதத்தை பார்த்ததும், அதிர்ச்சியடைந்த மைத்துனர் மற்றும் உறவினர்கள் அலறியடித்து ஓடி வந்தனர்.அதற்குள், குளிர்பானத்தில் விஷம் கலந்து பாத்திமா, பர்கத் ஆகியோருடன், சையது அக்பரும் குடித்து, உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

அவர்களை மீட்டு, ப.வேலுாரில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாத்திமா, பர்கத் உயிரிழந்தனர். சையது அக்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.போலீஸ் விசாரணையில், சையது அக்பர், பாத்திமா இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். பர்கத் மனநிலையும் சரியில்லாததால், விரக்தியில் தற்கொலை முடிவு எடுத்தது தெரியவந்தது.


மின்வேலியில் சிக்கி தம்பதி பலி


வேலுார்: மின் வேலியில் சிக்கி கணவர் மற்றும் கர்ப்பிணி மனைவி உயிரிழந்தனர்.

வேலுார் மாவட்டம், உள்ளிபுதுாரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 34. இவர், பொம்மசமுத்திரம் பகுதியில் மாட்டு தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அஸ்வினி 25; இரண்டு மாத கர்ப்பமாக இருந்தார். நேற்று முன்தினம் காலை இவர்களது பசு மாடு மேயச் சென்றது. இரவு 8:00 மணிக்கு பசு மாட்டை ஓட்டி வர ஜெயபிரகாஷ், அஸ்வினி சென்றுள்ளனர். பின், அவர்கள் வீடு திரும்பவில்லை. நேற்று காலை 9:00 மணிக்கு விவசாய நிலத்தில் ஜெயபிரகாஷ், அஸ்வினி இறந்து கிடந்தனர். அருகில் பசு மாடும் இறந்து கிடந்தது.

திருவலம் போலீசார் கூறியதாவது: ஜெயபிரகாஷ், அஸ்வினி கால்களில் மின்சாரம் தாக்கியதற்கான அடையாளம் உள்ளது. பசு மாட்டின் உடலிலும் மின்சாரம் பாய்ந்துள்ளது. காட்டுப் பன்றிகள் பயிர்களை அழிக்காமல் இருக்க, இந்த நிலத்தில் திருட்டுத்தனமாக சிலர் மின் வேலி அமைத்திருந்தனர். பசு மாட்டை ஓட்டி வரும்போது, அதில் சிக்கி இவர்கள் இறந்துள்ளனர். மின் வேலி அமைத்தவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


துபாயில் இருந்து தங்கம் கடத்தல்

திருச்சி: துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணியரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது கும்பகோணத்தை சேர்ந்த கண்ணன், 34, சூரிய பிரகாஷ், 29, ஆகியோரை சோதனையிட்டனர். அவர்கள் ஆசன வாயில் வைத்து, 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 200 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்தனர்.


உலக நிகழ்வு:


13 பேர் சுட்டுக்கொலை

கெய்ரோ: ஆப்கனில், சரணடைந்த முன்னாள் வீரர்கள் உட்பட 13 பேரை, தலிபான் அமைப்பினர் சுட்டுக் கொன்றதாக, சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானை இரு மாதங்களுக்கு முன் தலிபான் அமைப்பு கைப்பற்றியது. மக்கள் அச்சம்அடுத்த சில நாட்களில் டேகாண்டி மாகாணம் கஹோர் கிராமத்தில் தலிபான் படையினர் புகுந்தனர். அங்கு தங்கியிருந்த ஆப்கன் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 34 வீரர்கள், ஆயுதங்களை போட்டு, தலிபானிடம் சரண் அடைந்தனர்.

இந்நிலையில் ஆக., 30ல் தலிபான் படையைச் சேர்ந்த, 300 பேர் கஹோர் கிராமத்திற்கு வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்த மக்கள் அச்சத்தில் வெளியேற முயற்சித்து உள்ளனர். உடனே அவர்களை நோக்கி தலிபான்கள் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் பலியாயினர்.

ஆப்கன் முன்னாள் வீரர் ஒருவர் திருப்பி சுட்டதில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தலிபான்கள், சரண் அடைந்த ஆப்கன் முன்னாள் வீரர்கள் ஒன்பது பேரை அருகில் இருந்த ஆற்றங்கரைக்கு இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றுஉள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X