லக்னோ: உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கேரி அருகே போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை மோதச் செய்து பலர் உயிரிழக்க காரணமான சம்பவத்தில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆகியோர் கூட்டுச் சதி செய்து ஜீப்பை ஏற்றியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஞாயிறன்று மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் சொந்த கிராமத்திற்கு நிகழ்ச்சி ஒன்றிற்காக துணை முதல்வர் கேசவ் மவுரியா வருகை தர இருந்தார். அவருக்கு கருப்பு கொடி காட்ட விவசாயிகள் திரண்டு இருந்தனர். அப்போது அவர்கள் பின்னாலிருந்து வந்த ஜீப் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் பலர் படுகாயமடைந்தனர். சிலர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் கலவரம் மூண்டது. ஜீப் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
விவசாயிகள் மீது ஜீப்பை விட்டு ஏற்றிக் கொன்றது உள்துறை இணை அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா என்ற கூறினர். இதனை அமைச்சர் தரப்பு மறுத்துள்ளது. கார் மட்டும் தங்களுக்கு சொந்தமானது. ஆனால் சம்பவ இடத்தில் நாங்கள் இல்லை என அமைச்சர் கூறியுள்ளார். விவசாயிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, போலீசார் இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பிரேத பரிசோதனையில் காயம், மூளையில் ரத்தக் கசிவு, அதிர்ச்சியால் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் தந்த புகாரின் அடிப்படையில் மத்திய இணை அமைச்சர் மற்றும் அவரது மகனின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. விவசாயிகளை இடித்து தள்ளியப்படி சென்ற செயல் இருவரின் நன்கு திட்டமிடப்பட்ட சதிச் செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அமைச்சரின் மகன் துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கிச் சுட்டதாகவும், அதில் விவசாயி சுக்விந்தர் சிங்கின் 22 வயது மகன் குர்விந்தர் இறந்தார் என கூறியுள்ளனர். இதனால், எப்போது வேண்டுமானாலும் அமைச்சர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்படலாம்.