நிலக்கரி தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கரி தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

Added : அக் 06, 2021
Share
கரூர்: ''அனல் மின்நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை,'' என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.கரூர் நகராட்சிக்குட்பட்ட கொளந்தாகவுண்டனூரில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பழுதடைந்த நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பின், பசுபதிபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தங்க

கரூர்: ''அனல் மின்நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை,'' என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.


கரூர் நகராட்சிக்குட்பட்ட கொளந்தாகவுண்டனூரில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பழுதடைந்த நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பின், பசுபதிபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பத்தினருக்கு வேட்டி, சேலை, அரிசி, பாய், போர்வை மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா, 5,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் மின்தேவை நாள் ஒன்றுக்கு, 16 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. அதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தி, 22 சதவீதம், மீதமுள்ளவை மத்திய அரசின் பங்கீடு மற்றும் தனியாரிடம் கொள்முதல் மூலம் பூர்த்தி செய்து வருகிறோம். அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்யும் நிலையை மாற்றி, உற்பத்தி செலவை குறைத்து தரமான சேவை செய்ய வேண்டும் என்பதற்காக, பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிப்புகளாக கொடுக்கப்படும். மேலும், அந்தந்த மாவட்டங்களிலேயே சூரிய மின்சக்தி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு, 4,000 மெகாவாட் அளவிற்கு சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கட்டமைப்புகளை மேம்படுத்துவதை பொறுத்தவரை, 204 புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கும், 12 துணை மின்நிலையங்களை தரம் உயர்த்துவதற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 216 துணை மின் நிலையங்களின் கட்டமைப்பு, ஒரே நேரத்தில் மேம்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. தமிழகத்தில் உள்ள, 3.63 லட்சம் மின்மாற்றிகளிலும் டி.டி.மீட்டர் பொருத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, 1,270 கோடி ரூபாய் செலவாகும் என, திட்ட மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 8,905 மின்மாற்றிகளில் உயர் மின் அழுத்தம் அல்லது குறைவான மின் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால், அடிக்கடி பழுது ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இதில், 2,500க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மின்மாற்றிகளை மாற்றியமைக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, அனல் மின்நிலையங்களின் மின் உற்பத்தி, 2006 - 2011 ஆண்டுகளில், 85 சதவீதமாக இருந்தது. 2011- 2016ல், 78 சதவீதம், 2016 - 2021ல், 58 சதவீதமாக குறைந்துள்ளது. தனியாரிடமிருந்து, அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த நடவடிக்கை இருந்து வந்தது. இந்நிலையை முற்றிலும் மாற்றி, மின் நிர்வாகத்தை சீர்படு த்தி நம்முடைய உற்பத்தி திறனை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திடம், முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு நிலக்கரி இருப்பு இருக்கிறது. எனவே, அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. எந்தவித இடையூறும் இன்றி மின் உற்பத்தி நடக்கும். மேலும், 100வது நாள் வரை வரப்பெற்ற, 3.53 லட்சம் புகார்களில், 99 சதவீதம் வரை உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X