லக்னோ ;உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் நடந்த வன்முறையில், நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்த சம்பவத்தில், காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் மற்றும் அவருடைய சகோதரியும், பொதுச் செயலருமான பிரியங்கா தொடர்ந்து நாடகம் ஆடி வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'எட்டு பேர் பலி விவகாரத்திலும் பொய் தகவல்களை பரப்பி அரசியல் நாடகமாடுகின்றனர்' என, அவர்கள் மீது பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், லக்கிம்பூரில் நடந்த பா.ஜ., கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார், கூட்டத்துக்குள் புகுந்தது. மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா அந்தக் காரில் இருந்ததாக கூறப்படுகிறது.அதையடுத்து அங்கு நடந்த வன்முறையில், நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். அதில், ஒரு பத்திரிகையாளர், பா.ஜ.,வைச் சேர்ந்த மூவரும் அடங்குவர்.இந்த சம்பவம் நடந்ததும், லக்கிம்பூருக்கு செல்வதற்கு காங்., உள்ளிட்ட கட்சியினர் முயன்றனர்; அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அனுமதி
காங்., பொதுச் செயலர் பிரியங்கா, சீதாபுரில் தடுத்து நிறுத்தப்பட்டு, 'கெஸ்ட் ஹவுசில்' தங்க வைக்கப்பட்டார். அவர் மீது, தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த இரண்டு நாட்களாக காங்., மூத்த தலைவர்கள் பலரும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து, உ.பி., அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், லக்கிம்பூருக்கு சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தாரை சந்திக்க உள்ளதாக, காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறியிருந்தார். நேற்று காலையில் அதற்கு அனுமதி மறுத்த உத்தர பிரதேச அரசு, ராகுல் உடபட ஐந்து பேருக்கு அனுமதி அளிப்பதாக பின்னர் அறிவித்தது.
அதையடுத்து, டில்லியில் இருந்து தனி விமானத்தில் லக்னோவுக்கு பயணம் மேற்கொண்டார் ராகுல். லக்னோவில் இருந்து லக்கிம்பூர் செல்லும் வழியில், சீதாபுரில் சிறை வைக்கப்பட்டுள்ள தன் சகோதரி பிரியங்காவை சந்திக்கப் போவதாக அவர் கூறினார்.பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸ் வாகனத்தில் செல்லும்படி ராகுலுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தன் சொந்த வாகனத்தில் தான் பயணிப்பேன் என்றும், அதற்கு அனுமதி வழங்கும் வரை தர்ணாவில் ஈடுபடுவதாக, விமான நிலையத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டார்.
காங்., ஆளும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாஹெல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்டோரும் அவருடன் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் செல்வதற்கு அனுமதிக்கப் பட்டது.
சீதாபுருக்கு ராகுல் செல்வதற்கு முன், காவலில் வைக்கப்பட்டிருந்த பிரியங்கா விடுவிக்கப்பட்டார். அங்கு வந்த ராகுலுடன், பிரியங்காவும் லக்கிம்பூருக்கு பயணம் மேற்கொண்டார். மூத்த தலைவர்கள் ரன்தீப் சுர்ஜேவாலா, திபிந்தர் ஹூடா மற்றொரு வாகனத்திலும், பூபேஷ் பாஹெல் மற்றும் சரண்ஜித் சிங் சன்னி மற்றொரு வாகனத்திலும் பயணம் மேற்கொண்டனர்.லக்னோ விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ''என்னையோ, பிரிங்காவையோ சிறையில் அடைத்தாலும் கவலையில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தாரை சந்திக்க விடாமல் தடுப்பதை ஏற்க முடியாது,'' என, ராகுல் குறிப்பிட்டார்.
அரசியல் நாடகம்
மாநில அரசுக்கும், விவசாயிகள் சங்கங்களுக் கும் இடையே சுமுக பேச்சு நடந்து, பிரச்னை தீவிரமாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தை காங்., கையில் எடுத்துள்ளது, அடுத்தாண்டு தேர்தலுக்கான நாடகம் என, பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.இது குறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளதாவது:லக்கிம்பூரில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. மாநில அரசு திறம்பட செயல்பட்டு, பிரச்னை தீவிரமாகாமல் தடுத்துள்ளது.ஆனால், பிரச்னையை தணிய விடாமல் இருப்பதற்காக, காங்., தொடர்ந்து முயன்று வருகிறது; பொய் தகவல்களை பரப்பி வருகிறது.
எட்டு பேர் மரணத்தை தன் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தி வருகிறது. மக்களிடையே வன்முறையை துாண்டிவிட்டு வருகிறது. அதனால் தான், லக்கிம்பூருக்கு செல்வதற்கு எந்த அரசியல் கட்சியினருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.நாட்டில் ஜனநாயகம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அவருடைய கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கபில் சிபல் பேசியபோது, அவர் மீது தக்காளி உள்ளிட்டவற்றை அவருடைய கட்சியினர் வீசியது தான் ஜனநாயகமா. இந்த நாட்டில் ஜனநாயகம் இருப்பதால் தான், ராகுல் பேட்டி அளிக்க முடிகிறது.ராகுல் குடும்பத்தினர் தங்களுடைய சொந்த அரசியல் நலனுக்காகவே இது போன்ற நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
ராஜினாமா இல்லை!
லக்கிம்பூர் சம்பவ விவகாரத்தில் மத்திய இணையமைச்சர் பதவியில் இருந்து அஜய் குமார் மிஸ்ராவை நீக்க வேண்டும் என, காங்., உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், அவருடைய மகனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி வருகின்றன.இந்நிலையில், தன் அலுவலகத்துக்கு நேற்று சென்ற அஜய் குமார் மிஸ்ரா, சிறிது நேரம் கோப்புகளை பார்வையிட்டார். பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து அவர் பேசினார். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் மிஸ்ராவை ராஜினாமா செய்யும்படி மத்திய அரசு அறிவுறுத்தாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE