ராமநாதபுரம் : ராமநாதபுரம் வாரச்சந்தை திடலில் கடைகளுக்கு நகராட்சி மூலம் கட்டணம் வசூல் செய்கின்றனர். ஆனால் வியாபாரம் செய்வதற்குரிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் பலர் வியாபாரம் செய்வதால்,அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ராமநாதபுரம் நகராட்சி சார்பில், ஒவ்வொரு வாரமும் புதன்தோறும் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வாரச்சந்தை நடக்கிறது. இங்கு வியாபாரம் செய்வதற்கு ராமநாதபுரம் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் வியாபாரிகள் பலர் வருகின்றனர். இவர்களிடம் கடைக்கு ஏற்றவாறு ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். ஆனால் சந்தைத்திடலில் கூரை வசதி இல்லை. மழைபெய்தால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது, இதனால் தற்காலிகமாக துணிப்பந்தல், கூரை அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு மழைபெய்த காரணத்தினால் சந்தை திடல் வளாகம் ஈரமாகியுள்ளது. இதனால் சந்தைக்கு வெளியே பஸ் ஸ்டாண்ட் ரோட்டை இருபுறமும் ஆக்கிரமித்து தள்ளுவண்டி, தரைக்கடைகள் வைத்திருந்தனர்.மேலும் பொருட்கள் வாங்க வந்தவர்களின் வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
சந்தை நடைபெறும் புதன் தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, அதன்பின் போலீசார் வந்து விரட்டி விடுவதும் வாடிக்கையாகியுள்ளது. ஆகையால் வாரச்சந்தை திடலில்கூடுதலாக கடைகள் வைக்க வசதியாக கூரை, தரைத்தளம் அமைத்து தர நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என வியாபாரிகள், பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE