சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 29 பதவிக்கான உள்ளாட்சி தேர்தல் அக்.9ல் நடக்கும் நிலையில், இதற்கான பூத் ஸ்லிப் வீடுகளுக்கு சென்று வழங்காததால் வாக்காளர்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர்.
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதமாக தேர்தல் அலுவலர்களே வீட்டிற்கு சென்று பூத் சிலிப் வழங்கும் நடைமுறை கடந்த சில தேர்தல்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் இப்பணியை செய்து வருகின்றனர். இம் முறை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட நிலையில் இடைத்தேர்தலில் வாக்காளர்களின் பெயர் பட்டியல் சீராக இல்லாமலும், ஒரு குடும்பத்தை சேர்ந்த வாக்காளர்கள் பெயர் பல வார்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்களும் பூத் சிலிப் வாங்க அலைமோதுகின்றனர்.
பூத் சிலிப்பில் வாக்காளர் புகைப்படம் இடம்பெறாத நிலையில், இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களும் திணறும் நிலை உள்ளது. வார்டு மறுவரையறை செய்யப்பட்டால் உடனடியாக கதவுகளில் வார்டு எண் மாற்றி எழுதப்பட வேண்டும்.பல ஊராட்சி பகுதியில் இப்பணி நடைபெறாததால் வாக்காளர்கள் பாதிக்கின்றனர். தேர்தல் நடத்தும் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.