இது உங்கள் இடம்: சட்டத்தின் ஓட்டையால் வருத்தம்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: சட்டத்தின் ஓட்டையால் வருத்தம்!

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (35)
Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:வழக்கறிஞர் அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதிகள் மீது போடப்படும் ஊழல் வழக்குகள் அனைத்தும் அரசியல் பழி வாங்குவதற்காக போடப்படுவதாகவும், அவர்களை கைது செய்யும் போது மகிழ்ச்சியுடன் கை அசைத்தபடியே சிறைக்கு செல்வதையும் பார்த்து
misappropriation, government funds, Indira Kumari, Former TN minister


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


வழக்கறிஞர் அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதிகள் மீது போடப்படும் ஊழல் வழக்குகள் அனைத்தும் அரசியல் பழி வாங்குவதற்காக போடப்படுவதாகவும், அவர்களை கைது செய்யும் போது மகிழ்ச்சியுடன் கை அசைத்தபடியே சிறைக்கு செல்வதையும் பார்த்து வருகிறோம்.

சமீபத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர் வீட்டில், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், 'ரெய்டு' நடத்தினர். அப்போது அவர் வீட்டுக்கு முன் கூடிய கட்சியினருக்கு மூன்று வேளையும் சாப்பாடு போட்ட கூத்தையும் பார்த்தோம்.ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து திரும்பி வந்த சசிகலாவை, தியாகி போல சித்தரித்து கொடுக்கப்பட்ட வரவேற்பு, ஒவ்வொரு தமிழனையும் வெட்கித் தலைகுனிவு அடையச் செய்தது.

தற்போதைய தி.மு.க., அரசு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து ரெய்டு நடத்தினாலும், அவர்கள் யாரும் பயப்படுவதாக தெரியவில்லை. தி.மு.க., அமைச்சரவையில் உள்ள, 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் இருக்கின்றன. இரு திராவிட கட்சிகளும் ஊழல் செய்வதில், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். கடந்த 1991- - 1996ல் ஊழல் செய்த, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சமூக நலத் துறை முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி, நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பின், தற்போது தான் ஐந்து ஆண்டுகள் சிறை என, தண்டிக்கப்பட்டு உள்ளார்.


latest tamil newsஇந்த இந்திர குமாரி, தற்போது தி.மு.க.,வின் இலக்கிய அணி செயலராக உள்ளாராம். அதனால், இவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனைக்காக தி.மு.க.,வினர் மகிழ்ச்சி அடைய முடியாது. இவ்வழக்கில், இந்திர குமாரியின் கணவர் பாபுவும் தண்டிக்கப்பட்டுள்ளார். குடும்பத்தில் ஒருவர் தவறான வழியில் சொத்து வாங்கி குவித்தால், அதை தடுக்காத அவரின் குடும்ப உறவுகளும் தண்டிக்கப்படுவது உறுதி என்பதை, அந்த தீர்ப்பின் வாயிலாக அறிய முடிகிறது. மேலும் இந்த வழக்கில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சண்முகம் மூன்றாண்டுகள் தண்டிக்கப்பட்டுள்ளது, ஊழல் அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.

கால தாமதமான தீர்ப்பு என்றாலும், இந்திர குமாரிக்கு தண்டனை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறைக்கு செல்லும்போது மட்டும் அரசியல்வாதிகள் மயக்க நாடகம் அரங்கேற்றுவர். குற்றவாளி நாடகம் போடுகிறார் என தெரிந்தாலும், சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லையே! இப்போதே 70 வயதைக் கடந்து விட்ட இந்திர குமாரி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மேல் முறையீடு செய்து, தன் ஆயுள் காலம் வரையில் வழக்கை இழுத்தடிக்க வாய்ப்பு உண்டு. ஊழல்வாதிகளுக்கு தண்டனை கிடைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள், சட்டத்தில் உள்ள ஓட்டையில் தப்பிக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X