செய்திகள் சில வரிகளில்...| Dinamalar

செய்திகள் சில வரிகளில்...

Added : அக் 08, 2021
Share
விழிப்புணர்வு முகாமில் 'அட்வைஸ்'வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், 45 இடங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் துவங்கிய முகாமில், சட்ட பணிகள் குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான விஸ்வநாதன், பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினார்.அப்போது, மக்கள் தங்களுக்கு ஏற்படும் எந்த பிரச்னையானாலும், நீதிமன்றத்தில்

விழிப்புணர்வு முகாமில் 'அட்வைஸ்'
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், 45 இடங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் துவங்கிய முகாமில், சட்ட பணிகள் குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான விஸ்வநாதன், பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினார்.அப்போது, மக்கள் தங்களுக்கு ஏற்படும் எந்த பிரச்னையானாலும், நீதிமன்றத்தில் செயல்படும் சட்டப்பணிகள் குழுவிடம் மனுக்கள் வாயிலாக புகார் தெரிவிக்கலாம். எவ்வித கட்டணமும் இன்றி, பிரச்னைக்கு நீதிமன்றம் வாயிலாக தீர்வு காணப்படும்.
கொரோனாவின் பிடியிலிருந்து பாதுகாக்க, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம், என, அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், வக்கீல் பெருமாள், சட்ட தன்னார்வ பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தடுப்பூசி செலுத்தியதில் 'சென்டம்'கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாக இருப்பதால், பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில், 4 முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு 4 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள 228 கிராமங்களில், பெரும்பாலானவற்றில் 90 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை மாவட்டத்தில் மொத்தம், 34 லட்சத்து, 63 ஆயிரத்து, 395 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆறு கிராமங்களில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், ''கோவை மாவட்டத்தில், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கக்கடவு, வெள்ளருக்கம்பாளையம் மற்றும் ஆறு கிராமங்களில், நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
வலு துாக்கும் போட்டியில் சாதனை
கோவை அரசூர் கே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரியில், தமிழக வலுத்துாக்கும் சங்கம் சார்பில், மாநில அளவிலான ஜூனியர் வலுத்துாக்கும் போட்டி நடந்தது. இப்போட்டியில் பொள்ளாச்சி எஸ்.டி.சி., கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில், 120 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவில், 660 கிலோ எடை துாக்கி, அஸ்வல்ட் பிரவீன் ராஜ் முதலிடம் பிடித்தார். அடுத்து, 120 கிலோ எடைப்பிரிவில், 782 கிலோ எடை துாக்கி, சஞ்சய்குமார் முதலிடம் பிடித்தார்.மாணவர் கருப்புசாமி, 53 கிலோ எடைப்பிரிவில், 457.5 கிலோ எடை துாக்கி முதலிடத்தையும், கோகுல் மாணிக்கம், 74 கிலோ எடைப்பிரிவில், 622.5 கிலோ துாக்கி மூன்றாமிடத்தையும்; 105 கிலோ எடைப்பிரிவில், 757.5 கிலோ துாக்கி ரூபன் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
இவர்களில், முதலிடம் பிடித்த மாணவர்கள் மூவரும், வரும், 2022, ஜனவரியில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடக்கும் தேசிய வலுத்துாக்கும் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளனர்.மாணவர்களை, கல்லுாரியின் தலைவர் விஜயமோகன், துணைத்தலைவர் சேதுபதி, செயலர் வெங்கடேஷ், முதல்வர் சோமு, முதன்மை இயக்குனர் நந்தகோபால், உடற்கல்வி இயக்குனர் பாரதி உள்ளிட்டோர் பாராட்டினர்.
கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
உடுமலையில், இ.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் சவுந்தரராஜ் மீது, போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே, தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.இ.கம்யூ., ரணதேவ் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட செயலாளர் ரவி, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் பழனிசாமி, மா.கம்யூ., நிர்வாகிகள் தண்டபாணி, சுப்ரமணியம், கனகராஜ், காங்., ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், இ.கம்யூ., நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வலியுறுத்தி, பங்கேற்ற கட்சியினர் பேசினர்.
சந்திப்பு பகுதியில் விபத்து அபாயம்
உடுமலை - கணியூர், துங்காவி - மடத்துக்குளம் ரோடுகள் சந்திக்கும், நால்ரோடு சந்திப்பு செங்கண்டிபுதுாரில் உள்ளது. இப்பகுதியின் அருகே, நான்கு வழிச்சாலை பணிகள் நடக்கிறது; அருகிலேயே கல்குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன.இதனால், இரு ரோடுகளிலும், கனரக வாகனங்கள் மட்டுமல்லாது, 15க்கும் மேற்பட்ட கிராமங்களின் வாகனங்களும், கடந்து செல்கின்றன.

போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், நான்கு ரோடுகள் சந்திக்கும், பகுதியில், விபத்துகளை தவிர்க்க, போதிய அறிவிப்புகள் இல்லை.'விளைநிலங்களுக்கு மத்தியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில், இந்த ரோடு சந்திப்பு உள்ளது. இங்கு போதிய ஒளிரும் ஸ்டிக்கர் மற்றும் அறிவிப்பு பலகைகள் இல்லாத காரணத்தினால், டிரைவர்கள் நிலைதடுமாறி விபத்துக்கள் நடக்கிறது. இதற்குத் தீர்வாக நால் ரோடு சந்திப்பு குறித்து சாலை விதிகளின் அடிப்படையில், ஒளிரும் ஸ்டிக்கர் அமைக்க வேண்டும்,' என மக்கள் தெரிவிக்கின்றனர்.
சான்று வழங்க சிறப்பு முகாம்
குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் உள்ளிட்ட அரசு மானிய திட்டங்களில் பயன்பெறுவதற்கு, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று வழங்கும் சிறப்பு முகாம் மற்றும் மானிய திட்டங்களின் கீழ் பயன்பெற பதிவு செய்வதற்கான முகாம் இரு இடங்களில் நடக்கிறது.காலை, 10:00 மணிக்கு, குடிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், மதியம் கோட்டமங்கலத்திலும் நடக்கிறது. வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் இம்முகாமை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இடைத்தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்கள்
உடுமலை ஒன்றியம், ஆர்.வேலுார் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல், நாளை நடக்கிறது. கலாமணி, அன்னலட்சுமி, உமா ஆகிய மூன்று பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில், கலாமணி, தி.மு.க.,வையும், அன்னலட்சுமி அ.தி.மு.க.,வை சார்ந்தும் இருப்பதால், அக்கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், அவர்களுக்கு ஆதரவு திரட்டி வந்தனர்.தி.மு.க., சார்பில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெயராமகிருஷ்ணன் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ., மகேந்திரனும் பிரசாரம் செய்தார்.

முக்கிய கட்சிகளின், பிரசாரத்தின் போது, வேட்பாளர்களுக்கு ஆதரவாக சிறுவர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு உணவு, டீ, காபி வழங்கி, நீண்ட நேரம், பிரசாரத்தில் ஈடுபடச் செய்தனர். இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

கழிவுநீர் தேங்குவதால் பாதிப்பு
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், சின்னாம்பாளையம் ஊராட்சியின் நடுவே, கிழக்கில் இருந்து மேற்காக ஓடை செல்கிறது. இந்த ஓடை, பல கிராமங்களின் கழிவுநீர் செல்லும் வடிகாலாக பயன்படுகிறது. இந்த ஓடையை கடக்க, வெங்கடாசலம் பிள்ளை காலனி பகுதியில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
பாலம் கட்டுமானத்தின் போது, பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. அப்போது, சாக்கடை பகுதி சேதமடைந்து, மண் விழுந்து, நீரோட்டம் அடைத்துக் கொண்டது.அப்பகுதியில் உள்ள, 20 வீடுகளின் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியுள்ளது. கிழக்குப்பகுதியில் இருந்து வரும் ஆறு கிராமங்களின் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இது குறித்து, அப்பகுதி மக்கள் பி.டி.ஓ.,விடம் பல முறை புகார் அளித்தும், இரண்டு மாதங்களாக எவ்வித நடவடிக்கையும் இல்லை. துார்நாற்றத்திலும், கொசுத்தொல்லையிலும் அவதிப்படுவதாக குடியிருப்புவாசிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X