பொது செய்தி

தமிழ்நாடு

மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணி முடக்கம்: அரைகுறை ரோடுகளால் மக்கள் அதிருப்திமுதல்வரே... நிதி ஒதுக்குங்க!

Added : அக் 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை பணி, அரசு நிதி ஒதுக்கீடு இல்லாததால், மூன்று மாதங்களாக முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. இதனால், ரோடு அமையும் பகுதி மக்கள், வழித்தடம் இன்றி, அரைகுறையாக அமைத்த ரோடுகளில் போராட்டத்துடன் பயணிக்கின்றனர்.பொள்ளாச்சி நகரின் வாகன நெரிசலை குறைக்கும் திட்டமாக, 50.35 கோடி ரூபாய் மதிப்பில், மேற்கு

பொள்ளாச்சி:மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை பணி, அரசு நிதி ஒதுக்கீடு இல்லாததால், மூன்று மாதங்களாக முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. இதனால், ரோடு அமையும் பகுதி மக்கள், வழித்தடம் இன்றி, அரைகுறையாக அமைத்த ரோடுகளில் போராட்டத்துடன் பயணிக்கின்றனர்.
பொள்ளாச்சி நகரின் வாகன நெரிசலை குறைக்கும் திட்டமாக, 50.35 கோடி ரூபாய் மதிப்பில், மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டம், கடந்த ஜனவரியில் துவங்கப்பட்டது.இந்த புறவழிச்சாலை, ஜமீன் ஊத்துக்குளியில் மீன்கரை ரோடு, நல்லுார் அருகே பாலக்காடு ரோடு, நடுப்புணி ரோடு மற்றும் சக்தி மில் அருகே கோவை ரோடு ஆகிய பிரதான ரோடுகளை நகருக்கு வெளியே இணைத்து, வாகன போக்குவரத்தை திசை மாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, ஏற்கனவே இருந்த நெடுஞ்சாலை, ஒன்றிய ரோடுகளை இணைத்து, அகலப்படுத்தி, தேவையான இடங்களில் சிறு பாலங்களுடன் அமைக்கப்படுகிறது. மொத்தம், 8.9 கி.மீ., தொலைவில் அமையவுள்ள இந்த ரோட்டின் அகலம், 10 மீட்டராக அமைக்கப்படுகிறது.ரோட்டின் இருபக்கமும், மூன்று மீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புறவழிச்சாலை பணிக்காக, விவசாயிகள் உள்ளிட்ட தனியாரிடம் இருந்து, 34,718 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது.திட்டப் பணிகள் துவங்கி, நான்கு மாதங்கள் சுறுசுறுப்பாக நடந்த நிலையில், பணியின் திட்ட மதிப்பு, 50.55 கோடியில் இருந்து, 73 கோடியாக உயர்த்த வேண்டிய நிலை உருவானது. அதில், நிலம் கையகப்படுத்த, 20 கோடி ரூபாய் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியிருந்தது. இதற்கான நிதியில், நான்கு கோடி ரூபாய் மட்டும் அரசு, வருவாய் துறை வாயிலாக விடுவித்தது. மீதமுள்ள, 16 கோடி ரூபாய் நிதியை விடுவிக்காமல் இருப்பதால், கடந்த மூன்று மாதங்களாக பணி முற்றிலும் முடங்கியுள்ளது.
ஒப்பந்ததாரர், பணியை அப்படியே விட்டு விட்டு, வேறு திட்டப்பணியை மேற்கொள்ளச் சென்று விட்டார். இதனால், புறவழிச்சாலை அமையும் வழித்தடத்தில் உள்ள பல்வேறு கிராம மக்கள், விவசாயிகள் நகருக்கு வந்து செல்ல அரைகுறையாக அமைக்கப்பட்ட கல்மயமான ரோட்டில், மழைக்காலத்தில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே பயணித்து அவதிக்குள்ளாகின்றனர்.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'நிதிக்காக தலைமைச் செயலகத்தை அணுகி, தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. அரசு நிதியை விடுவித்தால், திட்டமிட்டபடி அடுத்தாண்டுக்குள் பணிகள் முழுமை பெறும்,' என்றனர்.
ஆட்சி மாற்றம் காரணமா?மேற்கு புறவழிச்சாலை திட்டம், அ.தி.மு.க., அரசு அறிவித்து, தேர்தலுக்கு முன் துவங்கப்பட்டது. அதையடுத்து, சட்டசபை தேர்தல் நடந்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. ஆட்சி மாறியதால், எதிர்கட்சி கொண்டு வந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்க, தி.மு.க., அரசு மெத்தனம் காட்டுவதாக மக்களிடையே கருத்து பரவியுள்ளது.
மேலும், பொள்ளாச்சி தொகுதியில், அ.தி.மு.க., விடம் தோற்றதால், தொகுதி மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் தி.மு.க., அரசுக்கு விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது. அரசியல் காரணங்கள் ஏதும் இருந்தால், அதை மக்களுக்கான திட்டங்களில் நுழைத்து, பொதுமக்களின் அதிருப்தியை தேடிக் கொள்வது அரசுக்கும், தி.மு.க., கட்சிக்கும் நல்லதல்ல.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X