சென்னை : சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் சீமானை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபத்தில், தேர்தல் பிரசார கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ், சோனியா ஆகியோரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி, சீமான் பேசினார். தொடர்ந்து, வன்முறையை துாண்டும் வகையில் பேசி வருகிறார்.தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆதரவாக, நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து, போலீஸ் துறையினரிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

'துணிவிருந்தால் என் மீது வழக்கு தொடுக்கட்டும்; கைது செய்யட்டும். சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன்' என்று சவால் விட்டு வருகிறார். விடுதலை புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன், தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சற்குணனுக்கும், சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கிற முறையிலும் செயல்படும் சீமானை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.