பழநி: 'ரூபாய் 10 லட்சம் கோடிக்கு மேல் கோயில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன' என, பழநியில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார்.
வார இறுதி நாட்களில் கோயில்களை திறக்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பாத விநாயகர் கோயில் முன்பு பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் எச்.ராஜா பேசியது: ஹிந்து கோயில்களின் சாவி மட்டும் அரசிடம் உள்ளதால் வெள்ளி, சனி, ஞாயிறு கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதில்லை. மற்ற மதத்தலங்களில் அவ்வாறு இல்லை. நேற்று (அக்.7) தினமலர் நாளிதழின் முதல் பக்கத்தில் தனுஷ்கோடியில் "அமாவாசைக்கு தடை; படப்பிடிப்புக்கு அனுமதி" என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறு அரசு செயல்படுவது வெட்கக்கேடானது.
கோயில் நிலங்கள் அரசு நிலங்கள் அல்ல. கடந்த 55 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கோயில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. பெரியாரிஸ்ட்களின் குறிக்கோள் கோயிலை அழிப்பது. பா.ஜ., வினர் மாவட்டம் வாரியாக கோயில்களை காக்க குழு அமைக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.
![]()
|
சிறுபான்மையின பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் பேசுகையில்,''வி.சி.க., தலைவர் திருமாவளவன் ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசினால் அவருக்கு சேலை கட்டும் போராட்டத்தை நடத்துவேன்'', என்றார்.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் எச்.ராஜா தெரிவித்தது,''பழநி உட்பட பல கோயில்களில் பாலாலயம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்படாமல் உள்ளது. காஸ், பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி., க்குள் கொண்டு வராமல் இருப்பதற்கு தமிழக அரசே காரணம்'', என்றார்.