மதுரை : ''ஹிந்துக்கள் வழிபாட்டுக்கு உகந்த வெள்ளிக்கிழமை வழிபட தடை விதித்ததன் மூலம் தி.மு.க.,விற்கு சனி பிடித்து விட்டது,'' என அனைத்து நாட்களிலும் கோயில்களில் வழிபாடு நடத்த அனுமதிக்க கோரி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் முன் பா.ஜ., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்தியமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.
அவர் பேசியதாவது: தி.மு.க.,வில் ஹிந்துக்கள் இருப்பதாக கூறுகிறீர்கள். தி.மு.க., அமைச்சர்கள் கோயிலுக்கு செல்வது சந்தோஷம் தான். திருச்செந்துார் கோயிலுக்கு அதிகம் செல்வோர் தி.மு.க.,வினர் தான். செய்த பாவங்கள் தீர நீங்கள்(தி.மு.க.,வினர்) கோயிலுக்கு சென்று சாஷ்டாங்கமாக விழுவீர்கள். நீங்கள் செய்த பாவம் கோடிக்கணக்கான பக்தர்களை கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கவில்லை என்பது தான்.

வெள்ளிக்கிழமை ஹிந்துக்கள் கோயிலுக்கு சென்று வழிபட அனுமதித்து உத்தரவு பிறப்பியுங்கள். அப்படி பிறப்பிக்கவில்லை என்றால் பாவத்தை தீர்க்க தி.மு.க.,வினர் திருச்செந்துார், காசிக்கு சென்றாலும் தீராது. சனி பிடித்தே தீரும். இது அரசுக்கும் நல்லதல்ல. தமிழகத்திற்கும் நல்லதல்ல.
பா.ஜ., தமிழக மக்கள் உரிமைகளுக்காக போராடி வருகிறது. அதில் ஹிந்துக்கள் உரிமைகளை பேசக்கூடாது, அப்படி பேசினால் மதசார்பற்ற தன்மையாக இருக்காது என நீங்கள் கூறினால் உங்களுடைய போலி மதசார்பின்மையை தீயிட்டு கொளுத்த கூறுவோம். ஹிந்துக்களுக்கு முதலில் எல்லா நாட்களிலும் கோயிலுக்கு சென்று வழிபடும் உரிமையை தாருங்கள். உரிமை மறுக்கப்பட்டால் வரும்காலங்களில் கோயிலுக்குள் நுழைந்தே தீருவோம், என்றார்.
மாநில துணை தலைவர் மகாலட்சுமி, ஓ.பி.சி., மாநில தலைவர் லோகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், மாவட்ட தலைவர்கள் சீனிவாசன், சுசீந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சசிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE