புதுடில்லி: நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்கும் ஏலத்தில், டாடா நிறுவனம் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. இதனால், அந்நிறுவனத்தை விற்க, கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால், அந்நிறுவனத்தின் கடன் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய விற்பனை நடவடிக்கை கோவிட் தொற்று காரணமாக தாமதமானது. பின், கடந்த ஏப்ரல் மாதம் இந்த பணிகளை முடுக்கிவிட்ட மத்திய அரசு, இதற்கான இறுதி ஏல விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது. இதற்கு செப்., 15ம் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஏலத்தில் டாடா நிறுவனம் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த நிறுவனம் தாக்கல் செய்த ஏல விவரத்தை அமித்ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையிலான அமைச்சரவை குழு ஏற்று கொண்டது.

ஏர் இந்தியாவை ரூ.18 ஆயிரம் கோடிக்கு டாடா நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளதாகவும், வரும் டிச., இறுதிக்குள் விற்பதற்கான அனைத்து நடைமுறைகளையும் நிறைவு பெறும். இதன் மூலம் 68 ஆண்டுகளுக்கு பின்னர், ஏர் இந்தியா மீண்டும் டாடா வசம் செல்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE