சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

மாதம் ரூ.6 லட்சம் கல்லா கட்டும் போலீஸ் அதிகாரி!

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
மாதம் ரூ.6 லட்சம் கல்லா கட்டும் போலீஸ் அதிகாரி!டீக்கு ஆர்டர் தந்தபடியே, ''தனி அறை இல்லாம தவிக்கிறாரு பா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''தலைமைச் செயலகத்துல, இட நெருக்கடி அதிகமா இருக்குது... தலைமைச் செயலக பி.ஆர்.ஓ.,வுக்கு தனி அறை இருந்துச்சு பா...''இப்ப, அந்த அறையை முதல்வரின் அறிக்கை மற்றும் செய்திகளை,
டீ கடை பெஞ்ச்


மாதம் ரூ.6 லட்சம் கல்லா கட்டும் போலீஸ் அதிகாரி!


டீக்கு ஆர்டர் தந்தபடியே, ''தனி அறை இல்லாம தவிக்கிறாரு பா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தலைமைச் செயலகத்துல, இட நெருக்கடி அதிகமா இருக்குது... தலைமைச் செயலக பி.ஆர்.ஓ.,வுக்கு தனி அறை இருந்துச்சு பா...

''இப்ப, அந்த அறையை முதல்வரின் அறிக்கை மற்றும் செய்திகளை, சமூக வலை தளங்கள்ல உடனுக்குடன் வெளியிடுறதுக்காக நியமிக்கப்பட்டவங்களுக்கு ஒதுக்கிட்டாங்க... அப்படின்னா, பி.ஆர்.ஓ.,வுக்கு மாற்று அறை ஒதுக்கணும்ல...

''ஆனா, அவரை அம்போன்னு விட்டுட்டாங்க... இதனால, பி.ஆர்.ஓ.,வை பார்க்க வர்ற பலர், அவர் எங்க இருக்கார்னே தெரியாம கோட்டையை சுத்தி சுத்தி வர்றாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

கோவை மாநகராட்சியில நடந்த டெண்டர் முறைகேடுல ரெண்டு அதிகாரிகளை, பணியில இருந்து விடுவிச்சாளே... மூணு பேரை, வேற ஊர்களுக்கு துாக்கி அடிச்சாளோல்லியோ...'' எனக் கேட்டு நிறுத்தினார்,
குப்பண்ணா.

''ஆமாம்... மேல சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''அந்த குரூப்ல ஒரு பெண் அதிகாரி மட்டும் சாமர்த்தியமா தப்பிச்சிட்டாங்க... அந்தம்மா 1994ல 'டிராப்ட்ஸ்மேனா' வேலைக்கு சேர்ந்து, படிப்படியா உயர்ந்திருக்காங்க ஓய்...

''போன ஆட்சியில, அ.தி.மு.க., 'மாஜி'யின் பினாமி நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவியாளரா இருந்திருக்காங்க... இதுக்கு பிரதிபலனா அவங்களை, 'டவுன் பிளானிங்' ஆபீசரா நியமிச்சா ஓய்...

''அப்ரூவல் கேட்டு வரவாள்ட்ட, கட்சி நிதி 'கலெக்ட்' பண்ணி தந்திருக்காங்க... இப்படி, போன ஆட்சிக்கு விசுவாசமா இருந்தவங்களை, இன்னும் மாத்தலை ஓய்... ஏன்னா, இந்த ஆட்சியிலயும், மேலிடத்துக்கு நெருக்கமா இருக்கறவாளை பிடிச்சு, பதவியை தக்க வச்சுண்டு இருக்காங்க...'' என்ற குப்பண்ணாவே, ''என் ஆத்துக்காரியோட 'பிரண்ட்' சசிப்பிரியா வீட்டுல ஒரு விசேஷம்... கிளம்பறேன் ஓய்...'' என்றபடியே எழுந்தார்.

உடனே, ''மாசம் 6 லட்சம் ரூபாய் கல்லா கட்டுதாருல்லா...'' என, கடைசி தகவலுக்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''திருவண்ணாமலை மாவட்டம், துாசி காவல் நிலைய எல்லையில, ராத்திரி ரோந்து பணியில ஈடுபடுற போலீசார், மணல் கடத்தல் மற்றும் அதிக பாரம் ஏத்திட்டு வர்ற லாரிகளை மடக்கி சோதனை செய்தாவ...

''லாரி டிரைவர்கள், உடனே தங்களது ஓனருக்கு போன் போட்டு, போலீசாரிடம் கொடுத்துடுதாவ...

''எதிர் முனையில பேசுறவங்க, 'சார்... மாசா மாசம், உங்க அய்யாவை 'கவனிச்சிட்டு' தான் இருக்கோம்... மணல் வண்டிக்காக மட்டும், முன் பணமா 1.40 லட்சம் கொடுத்து இருக்கோம்'னு தெனாவட்டா சொல்லிட்டு வச்சிடுதாவ வே...

''ஒரு நாள், அந்த அய்யாவே 'ஸ்பாட்'டுக்கு வந்து, 'ஓவர் லோடு' லாரியை மடக்குன போலீசாரை ஏக வசனத்துல திட்டியிருக்காரு... அய்யாவுக்கு ஓவர் லோடு, மணல் கடத்தல் மாமூல் மட்டும் மாசம் 6 லட்சம் ரூபாய் சுளையா போயிடுது வே...'' என முடித்தார் அண்ணாச்சி.

''அண்ணாதுரை பிறந்த நாள் போன மாசம்தானே வந்தது பா...'' என சந்தேகம் கேட்டபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் நடையை கட்டினர்.
***********


'மாஜி' எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளிலும் 'ரெய்டு?'''முதல்வரின் கருணை பார்வைக்காக காத்துண்டு இருக்கா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் குப்பண்ணா.

''யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''திருவள்ளூர் மாவட்டம், நசரத்பேட்டையில, சாலை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றினா... அதுல, ஒன்பது குடிசை வீடுகளையும் இடிச்சு தரைமட்டமாக்கிட்டா ஓய்...

''வீடு, வாசலை இழந்த ஒன்பது குடும்பமும், 10 மாசத்துக்கும் மேலா சமூகநலக் கூடத்துல குழந்தை, குட்டிகளோட தங்கியிருக்கா... தங்களுக்கு மாற்று இடம் கேட்டு, குடிசை மாற்று வாரியத்திடம் முறையிட்டிருக்கா ஓய்...

''சட்டசபை தேர்தலுக்கு முன்னாடி, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பயணத்துல வச்சிருந்த புகார் பெட்டியில, மனு எழுதி போட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை...

''கலெக்டர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்னு எல்லா அதிகார மட்டத்துல முறையிட்டும், யாரும் இவங்களை கண்டுக்கலை... கோட்டைக்கு போய் முதல்வரை பார்த்தாலாவது, தங்களுக்கு விடிவு பிறக்குமான்னு யோஜனை பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என்றார்
குப்பண்ணா.

''செஞ்ச வேலைக்கு ஊதியம் வராம தவிக்கிறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''தவிக்கிறது யாரு வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''சேலம் பெரியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள்ல, கொரோனா தொற்று காரணமாக, நேரடித் தேர்வு நடத்தாம, இணையவழியில தான் தேர்வுகளை நடத்துனாங்க... இந்த தேர்வுகள் போன பிப்ரவரி, ஏப்ரல், ஜூலையில மூணு முறை
நடந்துச்சு பா...

''இணையவழி தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் தொகை மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு போன தனியார் கல்லுாரி பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்களுக்கு இன்னும் ஊதியம் தரலை பா...

''மாணவர்களிடம் முழு தேர்வுக் கட்டணத்தையும் வசூல் செய்துட்ட பல்கலை நிர்வாகம், ஆசிரியர்களுக்கு மட்டும் தேர்வு பணிக்கான ஊதியம் வழங்காம இழுத்தடிக்குது... கொரோனா காரணமா, ஏற்கனவே கம்மி சம்பளம் வாங்கிட்டு இருக்கிற தனியார் கல்லுாரி பேராசிரியர்கள், இந்த தொகை கிடைச்சா பெரிய உதவியா இருக்கும்னு புலம்பிட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''எம்.எல்.ஏ.,க்கள் பக்கமும் பார்வையை திருப்புங்கன்னு சொல்லியிருக்காங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''அ.தி.மு.க., ஆட்சியில, ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அடக்கி வாசித்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், பழனிசாமி முதல்வரானதும், இஷ்டத்துக்கு கல்லா கட்டுனாங்க... அதுலயும், சென்னையில இருந்த சில எம்.எல்.ஏ.,க்கள், பழனிசாமிக்கு நெருக்கமா இருந்து, அமைச்சர்களை விட அதிக செல்வாக்கா வலம் வந்தாங்க... அமைச்சர்கள் அளவுக்கு சம்பாதிக்கவும் செய்தாங்க...

''ஆட்சி மாறிட்ட சூழல்ல, முன்னாள் அமைச்சர்கள் வீடுகள்ல அப்பப்ப லஞ்ச ஒழிப்பு சோதனை நடக்குதுல்ல...

''அதே மாதிரி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வீடுகள்லயும் 'ரெய்டு' நடத்தணும்னு, சென்னையில இருக்கிற தி.மு.க., நிர்வாகிகள் பலர், கட்சி தலைமைக்கு கோரிக்கை வச்சிருக்காங்க... அதனால, சீக்கிரமே, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வீடுகள்லயும் சோதனை நடக்கும்னு சொல்றாங்க...'' என்றார்
அந்தோணிசாமி.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
09-அக்-202112:06:57 IST Report Abuse
கல்யாணராமன் சு. தமிழ்நாட்டிலே ஒரு நல்ல யுக்தி கண்டுபிடிச்சிருக்காங்க.. முதல்லே பொறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்கணும்.... யாரும் அங்கே வராதவரைக்கும் அத அனுபவிக்கணும்.. தப்பி தவறி அரசாங்கம் அதை எடுத்துக்கிட்டா, அரசாங்கம் வழியா இன்னொரு ஓசி இடத்தை ஆட்டையை போடணும்.... நல்ல டெக்னீக்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X