திருவனந்தபுரம்:கேரளாவில் 'பெட்ரோல் பங்க்'கில் பணிபுரியும் நபரின் மகள், கான்பூர் ஐ.ஐ.டி.,யில் இணைந்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கேரளாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் ராஜகோபாலன். இவரது மகள் ஆர்யா, நாட்டின் மிக உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான கான்பூர் ஐ.ஐ.டி.,யில் எம்.டெக்., பிரிவில் சமீபத்தில் சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா தன், 'டுவிட்டர்' பக்கத்தில் குறிப்பிட்டுஉள்ளதாவது:ஆர்யா ராஜகோபாலனின் எழுச்சியூட்டும் கதையை இதில் பகிர்கிறேன். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ராஜகோபாலனின் மகளான ஆர்யா, கான்பூர் ஐ.ஐ.டி.,யில் இணைந்துஉள்ளார். இது எங்களை பெருமைப்பட வைத்துஉள்ளது. ஆர்யாவுக்கு வாழ்த்துகள்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை, மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் கீழ் அவர், 'தன் தந்தை ராஜகோபாலை மட்டும் அல்லாமல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் துறையைச் சேர்ந்த அனைவரையும், ஆர்யா பெருமைப்பட வைத்து உள்ளார்' என, குறிப்பிட்டு உள்ளார்.