தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் பகீர்...படம் பார்க்கப்போனால் பர்ஸ் கிழிஞ்சிரும்! உணவுப் பொருட்கள் விலை விர்ர்...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் பகீர்...படம் பார்க்கப்போனால் பர்ஸ் கிழிஞ்சிரும்! உணவுப் பொருட்கள் விலை 'விர்ர்...'

Added : அக் 08, 2021
Share
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக, கோவையிலுள்ள தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம், உணவுப் பொருட்கள் விலை அனைத்தும் இரட்டிப்பாகியுள்ளது. அதனால் வசதி படைத்தவர்கள் மட்டுமே, தியேட்டருக்குப் போய் படம் பார்க்க முடியுமென்ற நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் பல மாதங்கள் மூடப்பட்டிருந்தன. கடந்த ஆக.,23லிருந்து இவற்றைத் திறக்க மத்திய

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக, கோவையிலுள்ள தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம், உணவுப் பொருட்கள் விலை அனைத்தும் இரட்டிப்பாகியுள்ளது. அதனால் வசதி படைத்தவர்கள் மட்டுமே, தியேட்டருக்குப் போய் படம் பார்க்க முடியுமென்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் பல மாதங்கள் மூடப்பட்டிருந்தன. கடந்த ஆக.,23லிருந்து இவற்றைத் திறக்க மத்திய அரசு அனுமதியளித்தது. அதிலும் ஒரு சீட் விட்டு ஒரு சீட் என்ற அளவில், 50 சதவீதப் பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்று நிபந்தனையும் விதிக்கப்பட்டது. ஆனால் கோவையிலுள்ள பல தியேட்டர்களில், இந்த நிபந்தனை பகிரங்கமாக மீறப்படுகிறது.சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 50 சதவீதத்தைத் தாண்டி, 70-75 சதவீதம் பேருக்கு டிக்கெட் தரப்படுகிறது. இதனால் இடைவெளியின்றி பார்வையாளர்கள் அமர வேண்டியுள்ளது. அதேபோன்று 60 ரூபாய் டிக்கெட், ஆன்லைனில் காட்டப்படுவதே இல்லை. கவுன்டரிலும் தரப்படுவதில்லை.முன்பு 115 ரூபாய்க்கு தரப்பட்ட டிக்கெட்டும், இப்போது 135 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் நடக்கும் விதிமீறலைத் தாண்டி, பார்க்கிங் கட்டணமும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சினிமா கட்டுப்பாட்டு விதிகள் 1957ன் படி, தியேட்டர்களில் 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கவே அனுமதி கிடையாது. ஆனாலும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டதை எதிர்த்து, ஐகோர்ட்டில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டதே கோவையிலிருந்துதான். அதன் அடிப்படையில், பல்வேறு அரசாணைகள் போடப்பட்டன. அவை நடைமுறைக்கு வரவில்லை. குளறுபடிகள் ஏற்பட்டன.
இறுதியாக, ஐகோர்ட் தீர்ப்பின்படி, 2017ம் ஆண்டில், தியேட்டர்களுக்கு பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தி, அரசாணை (எண்: 891 தேதி: 30-11-2017) வெளியிடப்பட்டது. மாநகராட்சிப்பகுதிகளில் டூ வீலருக்கு 10 ரூபாய், கார்களுக்கு 20 ரூபாய் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. கொரோனாவுக்கு முன்பு வரையிலும், இந்தக் கட்டணமே கோவை தியேட்டர்களில் வசூலிக்கப்பட்டது. சில தியேட்டர்களில் காருக்கு மட்டும் அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இப்போது டூ வீலருக்கு 20 ரூபாயும், காருக்கு 50 ரூபாயும் (3 மணி நேரத்துக்கு) பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இன்னும் சில தியேட்டர்களில் காருக்கு 60 ரூபாயும் வாங்கப்படுகிறது.உணவுப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பக்கெட் பாப்கார்ன் 200 ரூபாயாக இரண்டு மடங்கு விலைக்கு விற்கப்படுகிறது. முட்டை பப்ஸ் 50 ரூபாய், பெப்சி 80 ரூபாய் என்று விலை எகிறியுள்ளது.கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதால், இந்த விலைக்கு விற்க வேண்டியிருப்பதாக தியேட்டர் ஊழியர்கள் கூறுகின்றனர்.
பல தியேட்டர்களில் தண்ணீர் வைக்கப்படுவதேயில்லை. 30 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் விற்கப்படுகிறது. அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தால் காண்பிப்பதற்காக, வேண்டுமென்றே டாய்லெட்டுக்கு அருகில் வாட்டர் டேப் வைக்கப்பட்டுள்ளது.இவற்றை எல்லாம் ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள், எட்டியே பார்ப்பதில்லை. கலெக்டரும் கண்டுகொள்வதே இல்லை. எப்போது நடவடிக்கை எடுப்பாரென்றும் தெரியவில்லை.அதுவரை, தியேட்டருக்குப் போக நினைப்பவர்கள் கவனத்திற்கு...பர்ஸ் பத்திரம்!-நமது நிருபர்-

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X