சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

கொஞ்சம் விரைவு வேண்டும்!

Added : அக் 09, 2021
Share
Advertisement
ஏ.அப்துல் மாலிக், வேல்வார்கோட்டை, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., கலை, இலக்கியப் பிரிவு செயலராக உள்ள இந்திர குமாரி, 1991 -- 1996ல், அ.தி.மு.க., ஆட்சியில் தமிழக சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர், 15 லட்சம் ரூபாய் ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.இப்போது, அதாவது 26 ஆண்டுகள் கழித்து அவருக்கு தண்டனை கிடைத்துள்ளது. இது, மிகவும்


ஏ.அப்துல் மாலிக், வேல்வார்கோட்டை, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தி.மு.க., கலை, இலக்கியப் பிரிவு செயலராக உள்ள இந்திர குமாரி, 1991 -- 1996ல், அ.தி.மு.க., ஆட்சியில் தமிழக சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர், 15 லட்சம் ரூபாய் ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.இப்போது, அதாவது 26 ஆண்டுகள் கழித்து அவருக்கு தண்டனை கிடைத்துள்ளது. இது, மிகவும் காலம் கடந்த தீர்ப்பு.அன்றைய காலத்தில் 15 லட்சம் ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. இன்று அது, வார்டு கவுன்சிலரிடம் கூட சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் லஞ்சத் தொகை. இன்றைய நிலவரப்படி, பல 100 கோடி ரூபாயில் ஊழலே நடக்கிறது.நாட்டில் லஞ்சமும், ஊழலும் புரையோடி உள்ளது. அதில் திளைக்கும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் தண்டித்தால், சிறையில் இடம் இருக்காது.மிகத் தாமதமாக கிடைக்கும் தீர்ப்பால், குற்றவாளிகள் பயமின்றி உள்ளனர். விரைவாக தீர்ப்பு கிடைத்தால், குற்றங்கள் குறையும்.அவசரகதியான தீர்ப்பு வேண்டும் என சொல்லவில்லை; கொஞ்சம் விரைவாக தீர்ப்பு கிடைத்தால், அது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்!
ஒரு சிலையை கூட அகற்ற முடியாது!ஆர். கணேசன், புளியங்குடி, தென்காசி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொது இடம், சாலை, அரசு நிலத்தில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள சிலைகளை, மூன்று மாதங்களுக்குள் அடையாளம் கண்டு, ஆறு மாதத்திற்குள் அகற்றி சீர் செய்யும்படி தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக பார்க்கும் போது, உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் தமிழகத்தில் உள்ள அத்தனை சிலைகளும் ஒட்டு மொத்தமாக அகற்றப்பட்டு விடும் என, பெரும்பாலான மக்கள் நினைக்க கூடும்.ஆனால், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், ஒரு சிலை கூட அகற்றப்பட மாட்டாது என்பதே நெஞ்சை சுடும் நிதர்சனம்.உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பாருங்கள்.'அனுமதியின்றி, சட்டவிரோதமாக' என்று ஆரம்பிக்கிறதல்லவா?அந்த இரண்டு வார்த்தைகளில் தான் இருக்கிறது சூட்சுமம்.அடுத்த மூன்று மாதங்களில் தமிழக அரசு, 'இதற்காக அமைக்கப்பட்ட குழு ஆராய்ந்து பார்த்ததில், தமிழகத்தில் உள்ள அத்தனை சிலைகளும் அனுமதி பெற்றும், சட்டப்படியும் தான் நிறுவப்பட்டுள்ளன. எனவே எந்த சிலையையும் அகற்ற வேண்டிய அவசியமில்லை' என, உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்.
உயர் நீதிமன்றம், அந்த அறிக்கையை மேலும் கீழும் பார்த்து, செய்வதறியாது திகைத்துபோய் விடும்.ஒருவேளை, 'தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனைத்து சிலைகளையும் அடுத்த ஆறு மாதங்களில் அகற்ற வேண்டும்' என, உயர் நீதிமன்ற உத்தரவிட்டிருந்தால்... அப்போதும் ஒரு சிலை கூட அகற்றப்படாது!
நம் நாட்டிலுள்ள நீதி துறையின் நடைமுறையே, அப்படி எந்த சிலையையும் அகற்றி விடாமல் பாதுகாக்கும்.உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக அரசு, உச்ச நீதிமன்றம் சென்று அதற்கு உடனடியாக ஒரு தடை உத்தரவு வாங்கும். அதை தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்.
இந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்க ஐந்து ஆண்டுகளும் ஆகலாம்... 50 ஆண்டுகளும் ஆகலாம். தீர்ப்பு வரும் வரை, தமிழகத்தில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் எந்த சிலைக்கும் பிரச்னை வரவே வராது.


எதற்காக விசாரணை கமிஷன்?புலவர் சுப்பு.லட்சுமணன், மாவட்டக் கல்வி அலுவலர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: நாட்டில் நிகழ்ந்த கலவரம், ஊழல், சர்ச்சைக்குரிய விஷயம் குறித்து ஆய்வு செய்ய அல்லது கருத்து தெரிவிக்க, அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது.
ஓய்வு பெற்ற நீதிபதி, உயர் அரசு அலுவலர், கல்வியாளர் என யாரோ ஒருவரை, அக்குழுவின் தலைவராக பணி அமர்த்துகிறது. இது ஒரு நபர் கமிஷன் அல்லது தலைவர் ஒருவரின் கீழ் உறுப்பினர்கள் பலர் பணியாற்றும் குழுவாகவும் இருக்கலாம்.அக்கமிஷன் ஆய்வு நடத்துவதற்கு தேவையான வசதிகளும், காலக்கெடுவும் வழங்கப்படும்.விசாரணை கமிஷன் தலைவர், அரசுடன் ஒத்த கருத்துடையவராக இருப்பார். அதனால், விசாரணை கமிஷன் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கும்.
அரசால் நியமிக்கப்படும் தலைவர் நடுநிலையாளரா... அவரின் அறிக்கை முடிவை அப்படியே ஏற்று, அரசு செயல்படுமா...அந்த அறிக்கையை, நீதிமன்ற தீர்ப்பு போல கருத முடியுமா... அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்று கொள்ளுமா...எந்த கமிஷன் அறிக்கையாவது, அப்படியே அரசால் ஏற்று கொள்ளப்பட்டிருக்கிறதா... நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதா...அப்படி ஏதும் நடக்காது எனும் போது, கமிஷன் அமைப்பது எதற்காக? வெறும் கண்துடைப்புத் தானே?விசாரணை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு மாத ஊதியம், அலுவலக செலவு, வாகனம் வசதி என, பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவிடப்படுகிறது.விசாரணை கமிஷன் அறிக்கையால் எந்த பலனும் இல்லாத போது, அரசுக்கு அது வீண் செலவு தானே!முன்னாள் முதல்வர் ஜெயலலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் அமைத்து, ஆறு மாதம் காலகெடு வழங்கப்பட்டது. ஆனால் விசாரணை, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஆட்சியே மாறி விட்டது. விசாரணை கமிஷனுக்கு தான் ஒரு முடிவு கிடைக்கவில்லை.
தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் பெருந்தன்மையால், அந்த கமிஷன் கலைக்கப்படவில்லை. மாதம்தோறும் சம்பளம், அலுவலகச் செலவு எல்லாம் வழங்கப்பட்டு வருகிறது; அதில் குறை ஒன்றும் இல்லை!அவ்வகையில், நீதிபதி ஏ.எஸ்.ராஜன் தலைமையிலான 'நீட்' தேர்வு குறித்த விசாரணை கமிஷன், காலகெடுவிற்குள் ஆய்வு நடத்தி, அறிக்கையும் சமர்பித்து விட்டது. அதற்காக, பாராட்டுக்கள்!ஆனால் விசாரணை கமிஷன் அறிக்கையால் பலன் ஒன்றும் இல்லை.


எதுக்காக இந்த விளம்பரம்?கு.நாகராஜ், ஆண்டிபட்டி, தேனி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொடுத்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், 200 சொச்ச வாக்குறுதிகளை நான்கு மாதத்தில் நிறைவேற்றியது, நாட்டிலேயே... ஏன் இந்த உலகத்திலேயே தான் ஒருவர் தான் என, முதல்வர்
ஸ்டாலின் தன்னைத் தானே மெச்சி கொள்கிறார்.இப்படி தன்னை தானே புகழ்ந்து புளகாங்கிதம் அடையும் அதே நேரம் மறைமுகமாக ஓர் உண்மையை ஒப்பு கொள்கின்றனர், அனைத்து அரசியல்வாதிகளும்.அதாவது ஒவ்வொரு தேர்தலுக்கும் 100க்கணக்கான வாக்குறுதி கொடுக்கும் நிலையில் தான் மக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. இத்தனை ஆண்டு கால ஆட்சியில், தமிழக மக்கள் இன்னும் கையேந்தும் நிலையிலேயே இருக்கின்றனர்.மக்களாட்சி மலர்ந்த நாளிலிருந்து இன்று வரை, நாட்டில் வறுமை ஒழியவில்லை. அதாவது ஆட்சி நடத்தியோர் இதுவரை உருப்படியாய் எதுவும் செய்யவில்லை என்ற ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றனர், நம்
அரசியல்வாதிகள்.திருவள்ளுவர் தன்னை, 'பேரறிஞர்' என பறைசாற்றவில்லை; கம்பன் தன்னை, 'முத்தமிழறிஞர்' என்று பெருமையாக சொல்லி கொள்ளவில்லை. கல்லணை கட்டிய கரிகாலனும், பாறைகளெல்லாம் கலையழகு மிளிரச் செய்த பல்லவனும், பெரிய கோவில் கட்டிய ராஜராஜனும் தங்களை போற்றி, விளம்பரம் செய்து கொள்ளவில்லை.மக்கள் வரி பணத்தில் இருந்து, 10 ரூபாய்க்கு ஒரு திட்டம் போட்டு, அதில் 7 ரூபாயை அமுக்கும் அரசியல்வாதிகள் தான், தங்களுக்கு தாங்களே விளம்பரம் செய்து கொள்கின்றனர்.
இந்த கொடுமையை என்னவென்று சொல்வது!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X