மதம் என்பது மனிதனை, அன்பு, பாசம், நேசம் ஊட்டி, மனிதாபிமானியாய் ஆக்க வேண்டும். நேர்மை, நாணயம், ஈகை, உண்மை, பிறர் பொருள் மேல் ஆசை கொள்ளாமை; பொய்,
பித்தலாட்டம், பகை, வன்மம் தவிர்த்து, பிறரை துன்புறுத்தாது, சுயநலமின்றி, மாண்போடும், உயர் பண்போடும் வாழ வேண்டும் என்பதையே மதங்கள் வலியுறுத்துகின்றன.
தடையில்லை
எந்த மதமும் தீயவைகளை போதிப்பதில்லை. ஆனால் இங்கே நடப்பதென்ன? மதங்கள் சொல்லும் நற்பண்புகளை கடைப்பிடிக்காமல் அதற்கு நேர் மாறாக, பிற மதத்தினர் மேல், சிலருக்கு குரோதம், காழ்ப்புணர்ச்சி, அவரவர் தரத்துக்கு ஏற்ப வேண்டாத அருவருப்பான விமர்சனம். சும்மா பசப்பி, வேஷமிட்டு, தங்கள் மதத்துக்கு ஆள் பிடித்தல். இது என்ன அரசியல் கட்சியா, ஆள் பிடிக்க... ஒவ்வொருவரும் அவரவர் ஏற்றுக்கொண்ட மார்க்கங்கள்படி நடக்கலாம். தவறில்லை; தடையில்லை.
சிலருக்கு வேறு வேலையே இல்லை என்பது போல, எப்போதும் பிற மதங்கள் மேல் பாய்ச்சல். தேவையும், சம்பந்தமும் இல்லாமல் வாரி உமிழ, அங்கே பற்றிக் கொள்கிறது. அதிலும் சில அரசியல் அதிகபிரசங்கிகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. மதத்தை பிடித்து தொங்குவதையே வாடிக்கையாய் வைத்துஇருக்கின்றனர்.
மக்களுக்கு நல்ல குடிநீர், தொழில் வளர்ச்சி, சுத்தமான காற்று, உண்ண உணவு, இருக்க இருப்பிடம், இலவச - தரமான கல்வி, மருத்துவம், போக்குவரத்து, நீர்பாசனம், தடையில்லா மின்சாரம், ஊழல் - அராஜகமற்ற - வன்முறையற்ற நிர்வாகம் என எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. அவை கிடைக்க உழைக்காமல், அதற்கு மெனக்கெடாமல், எப்போதும் மதங்களைப் பற்றி பிதற்றல்...
சாதா பொதுஜனம் அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், மனிதாபிமானம் என இருக்கவே விரும்புகின்றனர். அவர்கள் ஒன்று பட்டு விட்டால் தங்கள் பிழைப்பு நடக்காது-- என்று ஜாதி-, மத துவேஷங்களை கிளப்பி- பெரிதாக்கி, தங்கள் 'பப்ளிசிட்டி'க்கு அவர்களை காவு கொடுத்து, குளிர் காயும் கயவர்களை, அப்பாவி மக்கள் அறிவதில்லை.
எங்கோ, எப்போதோ சொந்த காரணங்களால் நடக்கும் அசம்பாவித சம்பவங்களை தங்கள் விருப்பப்படி சாதகமாக்கி, ஜாதி, மத அரசியலாக ஜோடித்து, அவர்களிடையே பகை உண்டாக்கி, வன்மத்தையும், குரோதத்தையும் விதைக்கின்றனர். அவை குறைந்து விடக்கூடாது என்று
எப்போதும் உள்வேலை பார்க்கின்றனர். உண்மை எது, பொய் எது என அறியாது, இவர்களது பொய் -பித்தலாட்டத்தை உண்மை என நம்பி -கிளர்ந்து, பதற்றமடையும் பாமரர்கள் அதிகம்.
புகைச்சல்
சமீபத்தில் ருத்ரதாண்டவம் எனும் திரைப்படம் வந்துள்ளது. ஜாதி மோதல்களுக்கு காரணம் என்ன என்பது பற்றி பட்டவர்த்தனமாக கூறும் அந்த படம் பற்றி புகைச்சல் கிளம்ப, அப்படி அதில் என்ன தான் இருக்கிறது என்று பார்க்கப் போனேன். முன் பாதி டைரக்டர் ஹரி படம் போல விறுவிறு. பின் பாதி 'சென்டிமென்ட்!' ஒரு ஜனரஞ்சக வெற்றிப் படம். அங்கங்கே வரும் சில சம்பவங்கள் குற்றமுள்ளவர்களுக்கு வலிக்கவே செய்யும். ஆனாலும், இது தமிழக போலீசுக்கு பெருமை சேர்க்கும் படம். இளைஞர்களை பலவித போதைகளிலிருந்து விடுவிக்கும். ஒரு நேர்மையான போலீஸ், தன் நேர்மையை நிரூபிக்க வேறு வழியில்லாமல் மத அடிப்படையில் நடக்கும் ஒரு தவறான செயலை தனக்கு சாட்சியாக ஆஜர்படுத்துகிறான். அதற்கு வெளியே இத்தனை புகைச்சல்.
குற்றவாளிகளை ஜாதி, மதம், அரசியல் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் என்பது தான் பொதுஜனத்தின் எதிர்பார்ப்பு. படமும் கூட அதைத் தான் வலியுறுத்துகிறது.
இந்த கயவர்களின் நோக்கம் இது தான். ---ஒரு இனத்தை அசிங்கப்படுத்தினால் அடுத்தவர்கள் மகிழ்வர்; அவர்களது ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்ற இவர்களது வக்கிர தந்திரத்துக்கு எவரும் இரையாகி விடக்கூடாது.
மக்களிடையே பிளவு உண்டாக்கும் இந்த சாக்கடைகளை ஒதுக்கினாலே, நாட்டில் முக்கால்வாசி பிரச்னைகள் தீர்ந்து விடும். இந்த அரசியல் அவியல்களை இனம் கண்டு கொள்வோம்.மதங்கள் அதுஅது பாட்டுக்கு புனிதமாக இயங்கட்டும்; மதங்களை சுயமாக செயல்பட விட்டு வெளியேறுங்கள். அது போல, நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்க, இந்த தேச விரோதிகள், பண்டிகைகளையும் விட்டு வைப்பதில்லை. அங்கும் பூந்து குட்டி கலாட்டா...
வீண் செலவு
பண்டிகை என்றாலே ஒரு சுகம், குதுாகலம். சுற்றமும், நட்புமாக ஒரு கோலாகாலம். பண்டிகைகள் என்பது பக்திக்காக மட்டுமல்ல. சிலரின் அசிங்க-, -அநாகரிக அருவருப்பு பேச்சுகளுக்கு அப்பாற்பட்டு, உள்ளம் மற்றும் உடல் சுத்தி, ஆத்மார்த்தம். அதன் மூலம் கிடைக்கும் மன திருப்தி தான் இறை மகிமை. எந்த விசேஷத்தையும் அதை அதை அந்தந்த முறையில் அனுபவிக்கணும், ரசிக்கணும் என்பதில் நான் விடாப்பிடி. இது தவிர, பட்டாசு, கொழுக்கட்டை, சீடை, முறுக்கு, சுண்டல், புத்தாடை, பொங்கல், கேக், பிரியாணி, கரும்பு, பஞ்சாமிர்தம், லட்டு, ஜிலேபி, புளியோதரை, பொரி--, பொட்டுக்கடலை என எதுவானாலும் விசேஷங்களுக்கு ஏற்ப எல்லாவற்றையும் ருசிக்கணும். இந்த விமர்சையை வீண் செலவு என ஒதுக்கும் கஞ்ச பிசினாரிகளும் இல்லாமலில்லை.
எந்த மதமானாலும்-- பண்டிகை, திருவிழா, கோவில், குளம் என்பதை வைத்து எத்தனை எத்தனை தொழில்கள் வளர்கின்றன; --வளம் பெறுகின்றன... இவற்றை ஆதாரமாக கொண்டு எத்தனை குடும்பங்கள் பிழைக்கின்றன... நம் ஊரில் அப்படித் தான். எல்லாரும் எல்லா பண்டிகைகளையும், ஜாதி, மத வித்தியாசமின்றி -நமக்காக இல்லாவிட்டாலும், பிள்ளைகள்-, சுற்றம் - -நட்புக்காக கொண்டாடுகிறோம்.சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்-; பகிர்ந்து -கொள்கின்றனர்.
ஆனால்... இந்த அரசியல்-- போலி மதச்சார்பின்மை -சுயநல கொள்ளை கும்பல் வேஷம் போட்டு மீடியாக்களையும், பத்திரிகைகளையும் தங்கள் கையில் வைத்துக்கொண்டு, மக்களிடையே மத துவேஷத்தை கிளறி, துாண்டி, வன்மம்,-- பகை உண்டாக்கி, மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி, ஓட்டுக்காக துவேஷத்தை உண்டுபண்ணுவதை பொது ஜனம் புரிந்து கொள்வதில்லை. இதில் வினோதம் என்னவென்றால், கடவுள் இல்லை என்று ஊளையிடுபவர்கள் தான் கடவுளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். சதா, சர்வகாலமும் அவர்களுக்கு இதே சிந்தனை. அவர்களின் அலப்பரை பெரிய லோலாய். உங்களுக்கு தான் எதுவுமே, எந்த தராதரமுமே இல்லையே; எதுவுமே வேண்டாமே... கம்முன்னு இருக்கவேண்டியது தானே? பகுத்தறிவு, புண்ணாக்கு என்று வெளியே பிதற்றுவது. வீட்டில் பெண்டிர் -மற்றும் உறவுகளை அனுப்பி பிராத்தனை.
சொந்த தொலைக்காட்சிகளுக்கு பண்டிகைகள் மூலம் விளம்பர வருமானங்கள் வேண்டும். ஆனால், பக்தி கூடாது. விளங்கிடும்... தீபாவளி சமயம் எல்லா ஊர்களிலும், கடை வீதிகளில் நெரிசல் இருக்கும். இந்த நெருக்கடி நெரிசலில் ஆச்சரியம் தரும் காட்சி, இஸ்லாமியர்களும் குடும்பம் குடும்பமாக பிள்ளைகளோடு கடைகளில்...
விரட்டியடிப்போம்
சாதாரணமாக கடைக்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்றால் நிச்சயம் இவர்கள், கும்பல் கூடும் தீபாவளி நேரத்திற்கு வராமல் தீபாவளிக்கு முன்போ அல்லது பிறகோ செய்யலாம். மாறாக, இந்த கூட்டத்திலும் வருகின்றனர் என்பது அவர்களுக்கும் பண்டிகை கொண்டாட்டத்தில் உள்ள ஈடுபாட்டை காட்டுகிறது. அத்துடன் இஸ்லாமிய சகோதரர்களின் கடைகளில் தீபாவளி ஸ்பெஷல் பிரியாணி விளம்பர பேனர்களையும் பார்க்க முடியும்.வேண்டும் இந்த ஐக்கியம். இப்படியாக பொது ஜனம் இருக்க, பிரித்தாள முயலும் நரகாசுரர்களையும், நச்சாளர்களையும் இனம் கண்டு விரட்டிஅடிப்போம். மக்களின் தேவைகளை கவனிக்க வேண்டிய அரசியலுக்கு மதம் எதற்கு?
என்.சி.மோகன்தாஸ்
எழுத்தாளர்
தொடர்புக்கு:
இ - மெயில்: ncmohandoss@yahoo.com
WhatsApp: +96566099564
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE