கவலையில் சரத் பவார்| Dinamalar

கவலையில் சரத் பவார்

Updated : அக் 10, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (1)
Share
போதை பொருள் விவகாரத்தில் கைதாகியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யான் கான். இந்த விவகாரம் தினசரி வட மாநில ஊடகங்களில் அலசப்படுகிறது.இது குறித்து மஹாராஷ்டிராவில் ஆட்சி செய்யும் சிவசேனா வாயைத் திறக்கவில்லை. ஆனால் சிவசேனாவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளன.இந்த இரண்டு
 டில்லி உஷ்!

போதை பொருள் விவகாரத்தில் கைதாகியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யான் கான். இந்த விவகாரம் தினசரி வட மாநில ஊடகங்களில் அலசப்படுகிறது.இது குறித்து மஹாராஷ்டிராவில் ஆட்சி செய்யும் சிவசேனா வாயைத் திறக்கவில்லை. ஆனால் சிவசேனாவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்த இரண்டு கட்சிகளும் ஆர்யான் விவகாரத்தில் கலக்கம் அடைந்துள்ளன. குறிப்பாக சரத் பவார் பீதியில் உள்ளார். காரணம் இந்த விவகாரத்தால் தன் கட்சிக்கு பெரும் பிரச்னை வரும் என நினைக்கிறார். பவாருக்கு மிகவும் நெருக்கமானவர், அவரது கட்சியின் மூத்த தலைவரான நவாப் மாலிக். இவர் இப்போது மஹாராஷ்டிரா அரசில் அமைச்சர்.

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் நவாப் மாலிக்கின் மருமகன்சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். 'இதற்கும், ஆர்யான் கைதிற்கும் தொடர்பு உள்ளது. மிகப் பெரிய போதை பொருள் கடத்தும் வெளிநாட்டு கும்பலின் தொடர்பு உள்ளது' என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. விசாரணை வேகம் பிடித்தால், தன் கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் சிக்கலாம் என அஞ்சுகிறாராம் பவார்.இன்னொரு பக்கம் போதை தொடர்பான விவகாரத்தில் பவார் கட்சி அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித் துறையும் அதிரடிச் சோதனை நடத்தி வருகிறது.


காலிஸ்தான் பயங்கரவாதிகள்!
சமீபத்தில் தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபு, கவர்னர் ரவியைச் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்பட்டாலும், இதன் பின்னணியில் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன.தமிழகத்தில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் அந்த நகரத்தின் மீது அதிக கவனம் தேவை என, டி.ஜி.பி.,க்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாம். கனடா நாட்டிலிருந்து காலிஸ்தான் பயங்கரவாதிகள், இந்த நகரத்தில் உள்ள சீக்கியர் சிலருக்கு பணம் அனுப்பி, காலிஸ்தான் பிரிவினை தொடர்பாக உசுப்பேற்றி வருவதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தமிழக கவர்னரிடமும், தமிழக அரசிடமும் பேசியுள்ளார். இதனால் தான் கவர்னர், டி.ஜி.பி.,யை அழைத்து ஆலோசனை கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த போது காலிஸ்தான் தொடர்பாக பேசியுள்ளார்.

'கனடா நாட்டில் வசிக்கும் சீக்கியர்களில் ஒரு பிரிவினர், பஞ்சாபை காலிஸ்தானாக மாற்ற வேண்டும் என தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வருகின்றனர். 'இதற்காக சீக்கியர்கள் எங்கெங்கு வசித்து வருகின்றனரோ, அங்கு பணம் அனுப்பி வருகின்றனர்' என, அமரீந்தர் சிங் கூறியுள்ளார். இதனால் தான் தமிழகத்திற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாம்.உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் நடந்த வன்முறை சம்பவத்திலும் காலிஸ்தானுக்கு தொடர்புள்ளது என்கின்றனர்.


பதவி பறிபோகுமா?அந்த தமிழக எம்.பி., வேறொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதனால் தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, அவர் அந்த கட்சியைச் சார்ந்தவராகவே கருதப்படுவார். ஆனால் அந்த எம்.பி., தன் சொந்த கட்சியில் மிக முக்கிய பொறுப்பில் உள்ளார். இது சட்ட சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்சியின் எம்.பி., எப்படி இன்னொரு கட்சியில் பதவியை வகிக்க முடியும் என கேள்விகள் எழுந்துள்ளன. இந்த எம்.பி.,யை பதவி நீக்கம் செய்யக் கோரி ஜனாதிபதிக்கும், தமிழக கவர்னருக்கும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

வழக்கமாக இப்படி எம்.பி., பதவி நீக்க கோரும் புகார்களை, ஜனாதிபதி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி கருத்து கேட்பார். இரண்டு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து ஆணையம் விசாரணை நடத்தும். பின், தன் கருத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும். இதை வைத்து ஜனாதிபதி முடிவெடுப்பார்.இதற்காக இப்போதிருந்தே தயாராகி வருகிறாராம் அந்த எம்.பி., தன் பதவியை தக்க வைத்துக் கொள்ள சீனியர் வழக்கறிஞர் களை அணுகிஉள்ளாராம். இதற்கிடையே இதேபோல மற்றொரு கட்சி சின்னத்தில் வெற்றி பெற்ற இன்னொரு கட்சியின் எம்.பி.,யும் கலக்கத்தில் உள்ளார்.


அடித்தது அதிர்ஷ்டம்ஒரு பக்கம் மோடி அரசை எப்போதும் விமர்சித்து வந்தாலும், இன்னொரு பக்கம் மத்திய அரசால் தங்களுக்கு ஏதாவது ஒப்பந்தம் கிடைக்குமா என தமிழக ஆளும் கட்சி பிரமுகர்கள் முயற்சித்து வருகின்றனர்.ஒரு ஆளும் கட்சி பிரமுகருக்கு ஜம்மு - காஷ்மீரில் சில வேலைகளைச் செய்ய ஒப்பந்தம் கிடைத்துள்ளது. இது மிகவும் பெரிய ஒப்பந்தம்; மிகுதியாக பணம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

தி.மு.க., - எம்.பி., ஒருவர் தான், இதற்கு உதவி செய்ததாக பா.ஜ.,வினர் கூறுகின்றனர். தி.மு,க., - எம்.பி.,க்கள் சிலர், மத்திய அமைச்சர்களைச் அடிக்கடி சந்தித்து, தங்கள் கட்சிக்காரர்களுக்கு அது வேண்டும், இது வேண்டும் என நச்சரித்து வருகின்றனர். அரசியலில் இதெல்லாம் சகஜம் என புன்னகை செய்கின்றனர் பா.ஜ.,வினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X