மதுரை ;'நீட்' தேர்வு ரத்து என்ற தவறான வாக்குறுதியால் மன அழுத்தத்திற்கு ஆளாகி, தற்கொலை செய்த மாணவர்கள் குடும்பத்திற்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக அரசு, தி.மு.க.,விற்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
மாணவர்கள் அதிர்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என, மத்திய அரசு 2012ல் அறிவித்தது. நீட் நடத்துவதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.நீட் ரத்து செய்யப்படும் என சட்டசபை தேர்தலின்போது தி.மு.க., தவறான வாக்குறுதி அளித்தது; அக்கட்சி ஆட்சியைப் பிடித்தது. நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய, நிபுணர் குழுவை அரசு அமைத்தது.
நீட் தேர்வை ரத்து செய்வதில் அரசு உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.ஜூலையில் அரசு தரப்பில், 'நீட் தேர்வை ரத்து செய்ய நீதிமன்றத்தில் போராடுகிறோம். இருப்பினும், மாணவர்கள் நீட் தேர்விற்குரிய பாடங்களை கற்க வேண்டும்' என தெரிவித்தது.இவ்வாறு அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, நீட் தேர்விற்கு தயாராகுமாறு திடீரென கேட்டுக் கொண்டதால் மாணவர்கள் அதிர்ச்சி, குழப்பம் அடைந்தனர். குறுகிய காலத்தில் தேர்வுக்குத் தயாராகும் மன வலிமை மாணவர்களுக்கு இல்லை.
மூன்று பேர் தற்கொலை
செப்., 12ல் நீட் தேர்வு நடந்தது. அரசின் தவறான வாக்குறுதியால் மன அழுத்தம், குழப்பத்தை மாணவர்கள் எதிர்கொண்டனர்; மூன்று மாணவர்கள் தற்கொலை செய்தனர். இதற்கு, தற்போதைய தமிழக அரசு மற்றும் தி.மு.க.,வினர் தான் பொறுப்பு.
இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் மற்றும் தவறான வாக்குறுதியால் மன அழுத்தத்திற்கு ஆளான ஒவ்வொரு மாணவருக்கும் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக தலைமைச் செயலர், உயர் கல்வி, சுகாதாரத் துறை செயலர்கள் மற்றும் தி.மு.க., பொதுச் செயலருக்கு உத்தரவிட வேண்டும்.நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்க தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய - மாநில அரசுகளுக்கு அனுப்பிய மனுவைபரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளார்.விரைவில் விசாரணைக்கு வரும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE