கொச்சி-பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறாத கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கேட்டு தொடரப்பட்டுள்ள வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் படமும், அவர் கூறும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கா, இந்தோனேஷியா, இஸ்ரேல், ஜெர்மனி உட்பட பல நாடுகளில் கொரோனா சான்றிதழில் அந்தந்த நாட்டின் தலைவர்கள் படம் இடம்பெறவில்லை.அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவது என்பது அரசின் கடமை.

இந்நிலையில் சான்றிதழில் பிரதமரின் படம் இடம்பெற வேண்டிய அவசியம் என்ன. பல நாடுகளும் நான் பயணம் மேற்கொள்கிறேன். பிரதமரின் படத்துடன் கூடிய சான்றிதழ் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தனிமனித உரிமையை மீறும் செயல். அதனால் தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் படத்தை நீக்க வேண்டும் அல்லது அவருடைய படம் இல்லாத சான்றிதழ் எடுத்துச் செல்லும் வாய்ப்பை வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE