பொது செய்தி

தமிழ்நாடு

சந்தோஷமா சிரிக்கலாம் நீங்க! இன்று சிரிப்பரங்கம் வாங்க...

Added : அக் 10, 2021
Share
Advertisement
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்' என்பது பழமொழி. அதை மெய்ப்பிக்கும் வகையில், நாமும் சிரித்து, மற்றவர்களையும் சிரிக்க வைக்க முடியும் என்ற மன நிலையை, சென்னை, அம்பத்துாரில் மாதம்தோறும் நடக்கும் சிரிப்பரங்கம் உருவாக்குகிறது.அங்குள்ள வெங்கடாபுரம், சத் சங்கத்தில், ஒவ்வொரு மாதமும், இரண்டாவது ஞாயிறன்று மாலை 4:30 மணி முதல் 7:00 மணி வரை, சிரிப்பரங்கம் நிகழ்ச்சி நடக்கிறது.
 சந்தோஷமா சிரிக்கலாம் நீங்க! இன்று சிரிப்பரங்கம் வாங்க...

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்' என்பது பழமொழி. அதை மெய்ப்பிக்கும் வகையில், நாமும் சிரித்து, மற்றவர்களையும் சிரிக்க வைக்க முடியும் என்ற மன நிலையை, சென்னை, அம்பத்துாரில் மாதம்தோறும் நடக்கும் சிரிப்பரங்கம் உருவாக்குகிறது.

அங்குள்ள வெங்கடாபுரம், சத் சங்கத்தில், ஒவ்வொரு மாதமும், இரண்டாவது ஞாயிறன்று மாலை 4:30 மணி முதல் 7:00 மணி வரை, சிரிப்பரங்கம் நிகழ்ச்சி நடக்கிறது. அந்த நேரத்தில், அங்கு பேச்சு சத்தத்தை விட, சிரிப்பொலியே அதிகம் கேட்கும். சிரிப்பு என்பது மனிதர்களுக்கு கிடைத்த உணர்ச்சிகளின் வரம். ஆனால், இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில், அதை யாரும் பயன்படுத்தவில்லை என்பது தான் யதார்த்தம்.அம்பத்துார் சிரிப்பரங்கத்தில், அந்த வரம் தாராளமாய் கிடைக்கிறது. இந்த நிகழ்ச்சியில், ஜோக்குகள் வண்ணத்துப்பூச்சிகளாய் வலம் வருகிறது.

காரணம், திருமுல்லைவாயலைச் சேர்ந்த சிரிப்பரங்க நிறுவனர் சம்பத் என்கிற 'ஹாஹோ' சிரிப்பானந்தா, 51. அவர், தொழில் முதலீட்டு ஆலோசனை நிறுவனம் நடத்தி வருகிறார். ஆனாலும், தன்னுடன் பணியாற்றுவோர், நண்பர்கள் மற்றும் தனது வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிக்காக, சிரிப்பரங்கத்தை, 2003 செப்., 14ம் தேதி துவக்கினார்.அதில், ஜோக்குகள் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை பகிர்ந்து, மற்றவர்களையும் பங்கு பெற செய்து, சிரிப்பரங்கத்தை வளர்த்துள்ளார். அம்பத்துாரில் ஒவ்வொரு மாதமும், 2வது ஞாயிறன்று மாலை சிரிப்பரங்கம் நடக்கும். அனைவருக்கும் அனுமதி இலவசம்.கொரோனா ஊரடங்கால், நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலையில், தற்போது தளர்வுகளால் மீண்டும் துவங்கி இருக்கிறார்.அதன்படி, இன்று, 218வது மாத நிகழ்ச்சி, அம்பத்துார் சத் சங்கத்தில் நடக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், கல்வியாளர்கள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இடம் பெறுவர். அவர்களது அனுபவம், நகைச்சுவையாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.சிரிப்பரங்கத்தில், பார்வையாளர்களும் ஜோக்குகளை கூறி, மற்றவர்களை மகிழ வைக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அன்றைய நிகழ்வில், சிறந்த நகைச்சுவை வழங்கிய மூவரை தேர்ந்தெடுத்து, நினைவு பரிசும் வழங்கப்படுகிறது. இது தவிர, வாசித்தல் பழக்கத்தை அனைவரும் தொடரும் வகையில், புத்தகங்களின் வெளியீடும், நிகழ்ச்சியின் இடையே நடத்தப்படுகிறது.சிரிப்பரங்கத்தில், ஜோக்குகள் மட்டுமின்றி, சிரிப்பு யோகாவும் இடம் பெறுகிறது. அதில், உடலுக்கும், மனதுக்கும் இணைந்து பயிற்சி கிடைக்கிறது. அதனால் தான், சிரிப்பரங்கம் என்று பெயர் வைத்துள்ளதாக, பெருமிதப்படுகிறார் சிரிப்பானந்தா. இந்த சிரிப்பரங்கத்திற்கு, நிர்வாக குழுவும் உள்ளது. அதில், தலைவராக வெங்கட்ராமன், செயலராக சத் சங்கம் ராமதுரை, தொகுப்பாளர் லட்சுமி பிரியா, நடத்துனர் நரசிம்மன் ஆகியோர் உள்ளனர்.'எனது, 19 வயது வயதில், தனியார் தொழில் முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். பொதுவாகவே சிரிப்பில் ஈடுபாடு இல்லாத நான், பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், 25 வயதில், சர்க்கரை நோய்க்கு ஆளானேன்.

அதற்காக சிகிச்சை பெற மருத்துவரிடம் சென்றேன். எனது உடல் நிலையை பரிசோதித்த அவர், 'ஏன் இவ்வளவு சீரியசாக இருக்கிறீர்கள்; மனம் விட்டு சிரித்து பழகி, ரிலாக்சாக இருங்கள். உங்கள் பணி சுமையாக இருக்காது; சுகமாக இருக்கும்' என்றார். அதை தொடர்ந்து, சென்னையில் உள்ள, ஹியூமர் கிளப்புகளுக்கு சென்றேன். நாளடைவில் மாற்றம் கிடைத்தது. உடல் நலம் பெற்றேன். என் தொழில் அனுபவத்தை வைத்து, சொந்தமாக நிறுவனம் துவங்கினேன். சிரிப்பை முதலீடாக்கினேன். எனது பணிகள் யாவும் எளிதானது' என்கிறார் சிரிப்பானந்தா.மேலும், 19ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள சிரிப்பரங்கம், 2010ம் ஆண்டு முதல் சிரிப்பு யோகாவை நடத்தி வருகிறது.அதில், மாணவ - மாணவியர், அரசு அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள், சிறை கைதிகள் ஆகியோர் பயிற்சி பெற்றுள்ளனர்.

அதற்காக, மும்பையில் டாக்டர் மதன் கட்டாரியாவிடம் பயிற்சி பெற்றுள்ளார் சிரிப்பானந்தா.இதுவரை, இந்தியா மற்றும் வெளிநாடுகளில், 3,900 சிரிப்பு யோகா நிகழ்ச்சிகள் நடத்தி, அதன் மூலம், 13 லட்சம் பேரை சந்தித்துள்ளதாக கூறும் அவர், அமெரிக்காவில், வாடிகன் நகர் சர்ச், உலகின் உயரமான கட்டடமான, துபாயில் 165 தளம் கொண்ட புர்ஜ் கலீபாவின், 125 தளத்திலும், பார்வையாளர்களுக்காக சிரிப்பு யோகாவை நடத்தி உள்ளார்.'ஹா ஹோ' என சிரிக்கும் போது, நுரையீரலின் இயக்கத்திற்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. கார்பன் - டை ஆக்சைடு அதிக அளவில் வெளியேறி, உடல் நலத்திற்கு உதவுகிறது. அதனால், மனம் திறந்த சிரிப்பும், மகிழ்ச்சியும் மட்டுமே, ஒவ்வொருவரின் மாற்றம், முன்னேற்றத்திற்கான எளிய வழி.அதனால், 'சிரிப்பரங்கம் வாங்க, சிரிச்சிக்கிட்டே போங்க' என, சிரித்தபடி சொல்கிறார் இந்த சிரிப்பானந்தா. நீங்களும் 90030 34503 என்ற எண்ணில் சிரிப்பானந்தாவை அழைத்து பேசி, சிரித்து மகிழலாம்.
- நமது நிருபர் -'

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X