கொரோனா தாக்கத்திற்கு பின், திரையரங்கிற்கு மக்களை வரவழைக்க பெரும் முயற்சியாக திரைத் துறையினர் கருதும், டாக்டர் படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
டாக்டர் படத்தில் என்ன சிறப்பு?
வழக்கமாக படபடவென பேசுவேன். இப்படத்தில் வித்தியாசமான சிவகார்த்திகேயனை பார்ப்பீர். என் கேரக்டரை, இயக்குனர் நெல்சன் வித்தியாசமாக உருவாக்கியுள்ளார்.
இயக்குனர் எப்படி?
இருவருக்குமே, ஒன்றாக சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்பது ஆசை. கடற்கரையில் அவர் கதை சொல்ல, நான் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பேன். வேட்டை மன்னன் படத்தை நெல்சன் இயக்கிய போது, உதவி இயக்குனராகவும், நடிக்கவும் செய்தேன். ஆனால், அப்படம் வெளியாகவில்லை; எங்களின் நட்பு மட்டும் தொடர்ந்தது. 'கோலமாவு கோகிலா' படத்துக்கு பின், அவரது இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அந்த கனவு நிறைவேறி உள்ளது.
டாக்டர் படத்தில் ஏன் இவ்வளவு வன்முறை?
நடித்த படத்திலேயே 'டாக்டர்' படத்திற்கு தான் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. கதை அந்த மாதிரி. ஆனாலும், குடும்பத்துடன் சிரித்துக் கொண்டே படத்தை பார்க்கலாம். ராணுவ மருத்துவராக நடித்து உள்ளேன்.
தயாரிப்பாளர் ஆனதில் வருத்தம் ஏற்பட்டதா?
தயாரிப்பாளர் ஆனதற்கு வருத்தப்படவில்லை. தெரிந்து எடுத்த முடிவு தான். கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும். ஒரே தயாரிப்பு நிறுவனத்தில், நான்கு படம் நடிப்பதாக வெளியான தகவல் பொய்.
அயலான் படம்?
இந்த படத்தில் நிறைய 'கிராபிக்ஸ்' காட்சிகள் உண்டு. நான் நடித்ததில் பெரிய பட்ஜெட். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 'பான்' இந்தியா படமாக உருவாகிறது.அந்த மாதிரி கதைக்களம்.
நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியரை தாண்டி இயக்குனராகவும் ஆவீர்களா?
இயக்குனராகும் ஆசை இருந்தது. வேலையின் பளுவை பார்த்த பின் பயம் வந்துவிட்டது. அதற்கு இன்னும் தயாராக வேண்டும். நான் எழுதி வைத்திருந்த கதை, ஒன்று கூட கைவசம் இல்லை. ஆனாலும், ஆசை இருக்கு; எதிர்காலத்தில் பார்க்கலாம்.
இடையில் அதிக இடைவெளி ஏன்?
நானா இடைவெளி விட்டேன். சைனாக்காரன் விட்ட இடைவெளி இது. ஆகஸ்ட் 2020ல், டாக்டர் படம் வெளியாக வேண்டியது. கொரோனா காரணமாக தாமதம் ஆனது. அடுத்த நான்கு மாதங்களில், டான், அயலான் படங்கள் வெளியாகும்.
பாடல் ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்கலாமா?
ஒரு ஜாலிக்காக தான் பாடல் எழுதினேன். 'இவன் என்ன எழுதியிருப்பான்' என, மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று தான் சும்மா எழுதினேன். நெல்சன் தான், கோலமாவு கோகிலா படத்தில் இதை ஆரம்பித்து வைத்தார்.
விலங்குகளை தத்தெடுத்தது குறித்து?
விலங்குகள் இருந்தால் தான் மனிதர்கள் வாழ முடியும். காடு உருவாக யானை மிகவும் முக்கியம். வெள்ளைப்புலி அழிவதாக சொன்னார்கள். எனக்கு விலங்குகள் மிகவும் பிடிக்கும். என் தாய், விலங்குகளின் பெயரை வைத்தே தாலாட்டு பாடுவார். இப்போது, நானும் யானை வளர்க்கிறேன் என சொல்வது சந்தோஷமாக இருக்கிறது.அடுத்த தலைமுறைக்கு, விலங்குகளை பற்றி சொல்ல கொஞ்சமாவது இருக்க வேண்டும்.
கொரோனா காலத்தில் கற்றவை?
அத்தியாவசியம் எது? ஆடம்பரம் எது? என்பதை தெரிந்து கொண்டேன். வாழ்க்கை முறை எவ்வளவு மாறியுள்ளது என்பதை அறிந்தேன்.சிறு வயதில், வாரத்திற்கு ஒரு முறை தான் அசைவ உணவு; பின் தினமும் அசைவம் என்றாகிவிட்டது.கொரோனாவால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. என்ன தேவை; தேவையில்லை என்பதையும், குடும்பத்தாருடன் நேரத்தை செலவழிக்கவும் சொல்லி கொடுத்துள்ளது. வீட்டில் உள்ளவர்களுக்கு எவ்வளவு வேலை என்பதை கண்கூடாக பார்த்து, அவர்களுக்கு உதவியாக நானும் பாத்திரம் கழுவவும், வீட்டை துடைத்து சுத்தப்படுத்தவும் கற்றுக்கொண்டேன். தனிப்பட்ட இழப்புகளும் இருந்தன. அப்போது தான் உடன் இருந்தோரை பாராட்டுவதை விட கொண்டாட வேண்டும் என்பது தெரிந்தது. சின்ன பிளஸ் இருந்தால் கூட, அதை அவர்களுடன் பகிர்ந்து, கொண்டாட வேண்டும். இயக்குனர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா, கொரோனாவால் இறந்தது ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது. அவர் சொல்லிக் கொடுத்ததை நிறைய செய்ய வேண்டும். அவசியமின்றி கூடுதலாக இருந்த ஒரு காரை விற்று விட்டேன்.
நடித்த படத்திலேயே பிடித்தது?
எதிர்நீச்சல், ரெமோ பிடித்தது. நிறைய நிறை, குறைகளை அலச முடிந்தது.
நடித்த படங்களில் இரண்டாம் பாகம்?
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கக்கூடாது என, நான் தான் ஒற்றைக்காலில் நிற்கிறேன். அது ஒரு 'எபிக்!' அதை தொடவே கூடாது. எங்களையே அறியாமல் அனைவரும் சேர்ந்து வாழ்ந்த படம் அது. ரெமோ கதையை தவிர்த்து, அந்த நர்ஸ் பாத்திரத்தை வைத்து இரண்டாம் பாகம் எடுக்கலாம்.
'ரீமேக்' திட்டம் ஏதாவது?
அந்த மாதிரி தவறையெல்லாம் செய்ய நினைக்கவில்லை. 'ரீமேக்' செய்வது ஈசியாக இருக்கும். வியாபாரமும் ஆகும். ஆனால், பெரிய அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். 'புட்டபொம்மா' பாடல் போல் நம்மால் ஆட முடியுமா!
தந்தையாக எப்படி?
இரண்டு குழந்தைகளையும் மனைவி தான் சிரமப்பட்டு கவனிக்கிறார். மகனுக்கு 'டயாப்பர்' மாற்றுவது மட்டுமே அவ்வப்போது என் பணி. மூத்த மகள் ஆராதனா, தம்பி குகன்தாசை நன்றாக கவனிக்கிறார். மகன் பிறப்பதற்கு முன், ஆராதனாவை மன ரீதியாக தயார்படுத்தி விட்டோம்.
- -நமது நிருபர்- -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE