புதுடில்லி: காங்கிரஸ் கட்சிக்கு எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் 'அரசியல் சுற்றுலா' செல்கிறார் ராகுல் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சித்துள்ளார்.
உ.பி.,யில் உள்ள லக்கிம்பூரில் சமீபத்தில் பா.ஜ., கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார், கூட்டத்துக்குள் புகுந்தது. மத்திய உள்துறை இணைஅமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, அந்தக் காரில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா உட்பட சிலர் மீது, போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை காங்கிரஸ் எம்.பி., ராகுல், பொதுச்செயலர் பிரியங்கா ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

இச்சம்பவம் குறித்து மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சரான கிரிராஜ் சிங் கூறியதாவது: லக்கிம்பூருக்கு ராகுலின் வருகை அரசியல் சுற்றுலாவின் ஒரு எடுத்துக்காட்டு. ராகுலுக்கு உண்மையில் அனுதாபம், இறக்கம் என எதுவும் இல்லை. எங்கெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் அரசியல் சுற்றுலா செல்கிறார் ராகுல். நான் ராகுலிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்தினரையோ, காஷ்மீரில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரையோ நீங்கள் ஏன் பார்க்கவில்லை?. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE