மரணங்களும், திராவிட அரசியலும்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

மரணங்களும், திராவிட அரசியலும்!

Updated : அக் 12, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (23)
Share
இயற்கையாக நிகழ்ந்த மரணத்தையும், தங்களால் மூளைச் சலவை செய்யப்பட்டு நிகழ்ந்த தற்கொலைகளையும் வைத்து அரசியல் செய்வதில், தமிழக கழகங்களுக்கு நிகரான அரசியல் கட்சிகள் எதுவும் இந்தியாவில் இதுவரை இல்லை.'தேசிய கவி' ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய நம் தேசிய கீதத்தில், பஞ்சாப், சிந்து, குஜராத்த, மராட்டா... என்று ஒவ்வொரு மாநிலமாக வர்ணித்து வந்தவர், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும்
மரணங்களும், திராவிட அரசியலும்!

இயற்கையாக நிகழ்ந்த மரணத்தையும், தங்களால் மூளைச் சலவை செய்யப்பட்டு நிகழ்ந்த தற்கொலைகளையும் வைத்து அரசியல் செய்வதில், தமிழக கழகங்களுக்கு நிகரான அரசியல் கட்சிகள் எதுவும் இந்தியாவில் இதுவரை இல்லை.

'தேசிய கவி' ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய நம் தேசிய கீதத்தில், பஞ்சாப், சிந்து, குஜராத்த, மராட்டா... என்று ஒவ்வொரு மாநிலமாக வர்ணித்து வந்தவர், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் ஆகியவற்றை, ஒன்றாக குறிக்கும் வகையில், 'திராவிட' என்ற வார்த்தையையும் உபயோகித்து விட்டார்.இந்த 'திராவிட' என்ற ஒரு வார்த்தையே, பின்னாளில் பலவிதமான பிரச்னைகளுக்கும் வழி வகுக்கும் என்பது அப்போது அவருக்கு தெரியாது. தெரிந்திருந்தால், திராவிட என்ற வார்த்தையை விடுத்து, 'தட்சிண' என்றோ 'தென்னக' என்றோ வார்த்தையை பயன்படுத்தி இருப்பார்.

இந்த, திராவிட என்ற சமஸ்கிருத மொழி வார்த்தையை, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தவிர, ஆந்திரா கர்நாடகா, கேரளா எங்கும் உபயோகிப்பதில்லை; இனியும் அந்த மாநிலங்கள் உபயோகிக்காது.தற்போது, தமிழகத்தில் உள்ள திராவிட அரசியல் கட்சிகள், 'நீட்' எனும் மருத்துவ கல்லுாரி நுழைவு தேர்வை கையில் எடுத்து, அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. அரியலுார் அனிதா துவங்கி இதுவரை, 16 மாணவ - மாணவியர், நீட் தேர்வை காரணமாக வைத்து, தங்கள் இன்னுயிரை, தாங்களே மாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த தற்கொலைகளை வைத்து, தமிழகத்திலுள்ள திராவிட கட்சிகள் அரசியல் செய்ய ஆரம்பித்து உள்ளன. இப்படி மரணங்களை வைத்து அரசியல் செய்யும் பழக்கம், திராவிட அரசியல் கட்சிகளுக்கு இன்று, நேற்று வந்ததல்ல... 83 ஆண்டுகளுக்கு முன்னே, அதாவது 1939ம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டது.

கடந்த 1937 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜாஜி சென்னை மாகாண முதல்வரான போது,ஹிந்தி மொழியை, சென்னை மாகாண பள்ளிகளில் கட்டாய பாடமாக்கினார். இதை எதிர்த்து, அ.தா.பன்னீர்செல்வம் என்பவர் தலைமையில் நீதிக்கட்சியும், ஈ.வெ.ரா.,வின் பகுத்தறிவு இயக்கமும் போராட்டம் நடத்தின. போராட்டத்தில் பங்கேற்ற, 1,200 ஆண்களும், பெண்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்; ஏழரை மாதம் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


மறியல்

இந்நிலையில், 1938 டிசம்பர் 4ல், சென்னை சவுகார்பேட்டையில், ஹிந்து தியாலஜிகல் உயர்நிலைப் பள்ளி முன் மறியல் நடந்தது.அதற்காக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டு இருந்த, சென்னை ஜார்ஜ் டவுன் போர்ச்சுகீஸ் சர்ச் தெருவைச் சேர்ந்த லட்சுமணன்- - குப்பம்மாள் தம்பதியின் மகன் நடராசன், வயிற்று வலி காரணமாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சிகிச்சை பலனளிக்காமல், 1939 ஜனவரி 15ல் இறந்தார்.

அதுபோல, கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த தாளமுத்து என்பவரும் வயிற்று வலி காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 1939 மார்ச் 11ல் இறந்தார். இவர்களில் நடராசனுக்கு வயது 20; தாளமுத்துவுக்கு 24. இருவரும் மாணவர்களா, தொழிலாளர்களா அல்லது ஏதாவது அலுவலகம், கடையில் பணியாற்றினரா என்ற எந்த விபரமும் கிடைக்கவில்லை.இந்த இருவரின் அப்போதைய இறப்பை நீதிக் கட்சியோ, பகுத்தறிவு இயக்கங்களோ கண்டு கொள்ளவில்லை.

நாட்டில் அன்றாடம் நிகழும் ஆயிரக்கணக்கான மரணங்களில் இவையும் இரண்டு என்று விட்டு விட்டனர் போலும்.அப்போது, திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சி உதயமாகவும் இல்லை. 1949 செப்டம்பர் 17ல், ராயபுரம் ராபின்சன் பூங்காவில் 'திராவிட முன்னேற்ற கழகம்' என்ற அரசியல் கட்சி துவங்கப்பட்டது.அப்போதும், தாளமுத்து மற்றும் -நடராசன் ஆகியோரின் இயற்கை மரணத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை.இதற்கிடையே, '1965 குடியரசு தினம் முதல், மத்திய அரசின் அலுவல் மொழியாக ஹிந்தி இருக்கும்' என்ற சட்டம் நிறைவேற்றப்பட இருந்தது.

இதை எதிர்த்து, 1965 ஜனவரி 25ல், தமிழகம் முழுதும் கல்லுாரி மாணவர்கள் தீவிர போராட்டத்தில் இறங்கினர்.அப்போது, அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் - -தங்கம்மாள் தம்பதியின் மகனான கீழப்பழுவூர் சின்னசாமி (1915- - 1939) என்பவர், பெற்றோருக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் கழித்து பிறந்தவர்.

ஐந்தாம் வகுப்பு வரை படித்து விட்டு உழவு தொழிலை மேற்கொண்டிருந்தார். சுயமரியாதை நுால்களை ஈடுபாட்டுடன் படித்து வந்தார். மனைவி பெயர் கமலம். ஒரே மகளின் பெயர் திராவிடச் செல்வி.தீக்குளிப்பு கீழப்பழுவூர் சின்னசாமி, வயது 24 என்பவர், 1964 ஜனவரி 25ல், திருச்சி ரயில் நிலையத்தின் வாயிலில், அதிகாலை, 4:30 மணிக்கு, தனக்குத் தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு, 'தமிழ் வாழ்க, ஹிந்தி ஒழிக' என கத்தியவாறு, தீக்குளித்து இறந்தார்.

அந்த நாள் தான், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஐ, மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளாகத் தி.மு.க., - அ.தி.மு.க., - ம.தி.மு.க., போன்ற திராவிட கட்சிகள் கடைபிடித்து வருகின்றன. இந்த கீழப்பழுவூர் சின்னசாமி தீக்குளிப்பு மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

அது இருக்கட்டும்... அந்த போராட்டத்தை ஒட்டி, உயிரை மாய்த்துக் கொண்டவர்களில் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர், கல்லுாரி மாணவர் ஆகிய இருவரை தவிர, பிறருக்கும், ஹிந்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஆனால், கழகத் தலைவர்களின் அடுக்கு மொழி பேச்சுக்களும், முழக்கங்களும் இளைஞர்களின் சிந்தனை ஆற்றலை குறைத்து, மூளையை மழுங்கடித்து விட்டன.


பெயர்

கடந்த 1965ல் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக, 1967ல் நடந்த சட்டசபை தேர்தலில், மூதறிஞர் ராஜாஜி அமைத்த தேர்தல் கூட்டணியின் விளைவாக ஆட்சியில் அமர்ந்த, தி.மு.க., அதன் பின் தன் 'விளையாட்டை' துவக்கியது.கடந்த 1939ல் இறந்த தாளமுத்து மற்றும் நடராசன் ஆகிய இருவரது பெயர்களையும், சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் கட்டப்பட்டுள்ள, சி.எம்.டி.ஏ., அலுவலக கட்டடத்திற்கு, 'தாளமுத்து -நடராசன் மாளிகை' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது.

அந்த கட்டடத்திற்கு இவர்களது பெயர்களை சூட்டியதால், இறந்தவர்களது குடும்பத்திற்கு ஏதாவது பயன் கிடைத்ததா என்றால், இல்லை என்பது தான் பதில்.அதேபோலவே, மேற்கு மாம்பலத்தில் கட்டப்பட்ட சுரங்க நடைபாதைக்கு, 'அரங்கநாதன் சுரங்க பாலம்' என்று பெயர் சூட்டி குதுாகலித்தது.

இப்போது, நீட் தேர்வை எழுத அஞ்சி தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு லட்சக்கணக்கில் நிதியுதவி அளிக்கும் கழகங்கள், 1965ல் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தீக்குளித்தும், விஷம் அருந்தியும், துாக்கு மாட்டியும் இறந்தவர்களுக்கு நிதியுதவி செய்ததாக தகவல் இல்லை; பாலங்களுக்கும், கட்டடங்களுக்கும் பெயர் சூட்டியதோடு சரி.இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

எந்த ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்து, போராட்டம் நடத்தி, 'தமிழ் வாழ்க, ஹிந்தி ஒழிக' என்று கூறி, ஆட்சிக்கு வந்த அரசியல் கட்சித் தலைவர்களின் வாரிசுகளும், ஏனைய கழக முன்னோடிகளும் நடத்தி வரும் கல்வி நிலையங்களில், தமிழுக்கு இடம் கிடையாது.அங்கு, முதல் மொழி ஆங்கிலம்; இரண்டாம் மொழி ஹிந்தி. அந்த கல்வி நிலையங்களின் வளாகத்தில் கூட யாரும் தமிழில் பேசக் கூடாது; பேசினால், அபராதம், தண்டனை.மேலும், இந்த திராவிட கழகங்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி, தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்து கொண்டவர்கள் அனைவரும் அப்பாவி இளைஞர்களே தவிர, அந்த கட்சியின் பொறுப்பில் அதிகார தோரணையில் இருக்கும் பிரபலங்களோ அவர்களின் வாரிசுகளோ அல்ல.


சமஸ்கிருதம்தமிழக மக்களை தமிழ், தமிழ் என்று கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த கழக பிரபலங்களாவது, இனிய தமிழ் மொழியை பிழையில்லாமல், சரியாக, முறையாக எழுதவும், பேசவும், படிக்கவும் கற்று இருக்கின்றனரா... அதுவும் இல்லை.பிற மொழி கலப்புடன் தான் பேசுகின்றனர். தங்களுக்கும், சொந்த பந்தங்களுக்கும் சமஸ்கிருத மொழியில் இருந்து தான் பெயரையே வைக்கின்றனர்.

இப்போது, ம.தி.மு.க., பொதுச் செயலர் வை.கோபால்சாமியின் வரலாற்றுக்கு வருவோம். 'என்னை கொல்ல விடுதலைப் புலிகள் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம், கோபால்சாமி தான்' என கூறி, 1993 அக்டோபரில், தி.மு.க.,விலிருந்து அவரை நீக்கினார் கருணாநிதி.இதை கண்டித்து பலர் தீக்குளித்து உயிர் நீத்தனர். 'இந்த உடலில் உயிர் இருக்கும் வரை, தி.மு.க., பக்கம் செல்ல மாட்டேன்' என அப்போது மேடை தோறும் முழங்கிய வைகோ, இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை வாசகர் கருத்துக்கே விட்டு விடுகிறேன்.

அ.தி.மு.க.,வின் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தது. அ.தி.மு.க., கும்பல் தீ வைத்ததில், மூன்று மாணவியர் எரிந்தனர்; 16 பேர் படுகாயமடைந்தனர்.இப்படி, அரசியல் கட்சிகளால் துாண்டி விடப்பட்டு நிகழும் தற்கொலைகளை தடுக்கவே முடியாதா என்ற கேள்வி எழுகிறது. தலைமை தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் மனது வைத்தால், தமிழகத்தில் எந்த அரசியல் தற்கொலைகளும் நிகழாமல் தடுக்க முடியும்.

அப்பாவிகளை தற்கொலைக்கு துாண்டும், துாண்டி விட்டு பலியான பின், பத்து லட்சம், இருபது லட்சம் ரூபாய் என நிதியுதவி செய்யும் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்குமாறு, தலைமை தேர்தல் ஆணையம், ஒரு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும்.அந்த வழக்கின் விசாரணை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன் நடக்க வேண்டும்.

தீர்ப்பில், தற்கொலைக்கு துாண்டும் அரசியல் கட்சிக்கு, பல கோடி ரூபாய் அபராதமும், எந்த தேர்தலிலும் போட்டியிட தடையும் விதிக்கலாம்.அப்படி செய்தால், 2022ல் இருந்தாவது, தமிழகத்தில் நிகழும், நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் தற்கொலைகளை நிரந்தரமாக தடுக்க முடியும்!

எஸ்.ராமசுப்ரமணியன்

எழுத்தாளர்

இ -- மெயில்: essorres@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X