சில வரி செய்திகள்

Added : அக் 10, 2021
Share
Advertisement
தைவான் அதிபர் ஆவேசம்தைபே: கிழக்காசியாவில் உள்ள தைவானை, நம் அண்டை நாடான சீனா, தொடர்ந்து உரிமைக் கொண்டாடி வருகிறது. எனினும் தைவான் நாட்டு தலைமை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த தைவான் நாட்டின் தேசிய தின விழாவில், அதிபர் சாய் இங்வென் கூறுகையில், “தைவானில் தற்போது இருக்கும் சூழல் தொடர்ந்து நீடிக்கும். எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

தைவான் அதிபர் ஆவேசம்

தைபே: கிழக்காசியாவில் உள்ள தைவானை, நம் அண்டை நாடான சீனா, தொடர்ந்து உரிமைக் கொண்டாடி வருகிறது. எனினும் தைவான் நாட்டு தலைமை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த தைவான் நாட்டின் தேசிய தின விழாவில், அதிபர் சாய் இங்வென் கூறுகையில், “தைவானில் தற்போது இருக்கும் சூழல் தொடர்ந்து நீடிக்கும். எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. எங்கள் நாட்டை பாதுகாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம்,” என்றார்.

ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை

பால்டிமோர்: கடந்த 1987ல் மலேரியாவுக்காக, 'மாஸ்குயிரிக்ஸ்' என்ற தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. பின் அதை மேம்படுத்தி பரிசோதிக்கும் பணிகள் நடந்தன. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், இந்த மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றும், மலேரியாவால் அதிகம் பாதிக்கப்படும் ஆப்ரிக்க குழந்தைகளுக்கு, இந்த தடுப்பூசி பேருதவியாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஈராக்கில் பார்லி., தேர்தல்

பாக்தாத்: மேற்காசிய நாடான ஈராக்கில் அடுத்த ஆண்டு பார்லிமென்ட் பொதுத் தேர்தல் நடப்பதாக இருந்தது. எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் கிளர்ச்சி அதிகரித்ததால், அதை கருத்தில் வைத்து, தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பார்லி., பொதுத் தேர்தல் நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்தது. இன்று தேர்தலின் முதற்கட்ட முடிவுகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கலிபோர்னியாவில் சட்டம்

சாக்ரமென்டோ: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், ஓரின சேர்க்கையாளருக்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி பெரிய அளவிலான பல்பொருள் அங்காடிகளில், பொம்மைகள், 'டூத் பிரஷ்' உள்ளிட்ட பொருட்கள், ஆண் மற்றும் பெண்களுக்காக மட்டு மல்லாமல், வேறு பாலின இயல்புகளுடன் இருப்போருக்கும் ஏதுவான வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனித் தனியாக இல்லாமல், அனைவருக்கும் ஒரே பிரிவில் பொருட்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாஸ்திரி விடுவிப்பு

பமாகோ: ஆப்ரிக்க நாடான மாலியில் 2017ல் கொலம்பியாவைச் சேர்ந்த குலோரியா நர்வேஸ் என்ற கன்னியாஸ்திரியை, அல் - குவைதா பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். இந்நிலையில் நான்கரை ஆண்டுகளுக்குப் பின் அந்த கன்னியாஸ்திரியை, பயங்கரவாதிகள் நேற்று விடுவித்தனர். அவர் விடுவிக்கப்பட்டதற்கான காரணம் எதுவும், பயங்கரவாதிகள் தரப்பில் இருந்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

பாக்., அணு விஞ்ஞானி காலமானார்

இஸ்லாமாபாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தானில் அணு சக்தி திட்டத்தின் தந்தையாக கருதப்படுபவர் ஏ.கியூ.கான். 85 வயதான இவர், நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து இஸ்லாமாபாதில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பிரதமரின் கட்சி படுதோல்வி

பிராக்: ஐரோப்பிய நாடான செக் குடியரசில் பார்லிமென்ட் பொதுத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இதில் பிரதமர் ஆண்டிரெஜ் பாபிசின், 'அனோ 2011' கட்சி, தோல்வி அடைந்துள்ளது. இவரின் கட்சி, 27.1 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. கூட்டணி அமைத்து களமிறங்கிய மூன்று பிரதான எதிர்க்கட்சிகள் சேர்ந்து, 27.8 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளன. இதன் வாயிலாக கோடீஸ்வரரான பாபிசின் ஆட்சி முடிவுக்கு வருவது உறுதியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X