சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ஜனநாயகம் என்றால் என்ன?

Updated : அக் 12, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
க.விஸ்வநாதன், கங்கை கொண்டான், நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'உலகில் பல கொடூரமான ஆட்சியாளர்கள் இருந்து உள்ளனர். எனினும், நம் நாட்டில் உள்ள மத்திய பா.ஜ., அரசு, அதை விட மோசமாக ஆட்சி புரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசின் கீழ், ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படுகிறது' என்கிறார், உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான
 இது உங்கள் இடம்

க.விஸ்வநாதன், கங்கை கொண்டான், நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'உலகில் பல கொடூரமான ஆட்சியாளர்கள் இருந்து உள்ளனர். எனினும், நம் நாட்டில் உள்ள மத்திய பா.ஜ., அரசு, அதை விட மோசமாக ஆட்சி புரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசின் கீழ், ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படுகிறது' என்கிறார், உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ்.

ஜனநாயகம் என்றால் என்னவென்று அவருக்கு தெரியுமா?நாட்டில் ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்பட்டிருந்தால், இந்த அகிலேஷ் இப்படி கருத்து கூறியபடி வெளியில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்க முடியுமா? இந்நேரம் சிறையில் கம்பி எண்ணிஇருப்பார்.குஜராத்தில் சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஆளும் பா.ஜ., பெரும்பாலான வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஜனநாயகத்தின் குரல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நிர்வாகத்தால் நசுக்கப்பட்டிருந்தால், குஜராத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., தோல்வியை அல்லவா தழுவி இருக்கும்?அதிகார மமதையில் அரசு நிர்வாகத்தை ஆட்டிப் படைப்பதும், ஊழல் புரிவதும், அதன் மூலம் குவித்த பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைப்பதும் தான் ஜனநாயகம் என்று, உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் நினைக்கிறாரோ?


'பண்டோரா' போட்ட தண்டோரா!அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகம் முழுதும் உள்ள 91 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் முறைகேடாக குவித்த சொத்துக்கள், முதலீடு தொடர்பான ஆவணங்களை, சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பான, 'பண்டோரா பேப்பர்ஸ்' சமீபத்தில் வெளியிட்டு உள்ளது.

உலக அளவில் உள்ள 150 சர்வதேச செய்தி நிறுவனங்கள் இணைந்து, 600 புலனாய்வு செய்தியாளர்களை பயன்படுத்தி ரகசியமாக திரட்டிய ஆவணங்களை பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ளது.முக்கிய பிரபலங்கள் வரி ஏய்ப்பு, ஊழல் செய்து, பிரிட்டீஷ் வெர்ஜின் தீவுகள், பனாமா, ஹாங்காங், சிசல்ஸ், சைப்ரஸ் போன்ற இடங்களில் முதலீடு செய்திருப்பது, அதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உள்நாட்டில் மிக அதிகமாக பணம் சம்பாதிப்போர், வெளிநாட்டில் ஓர் அறக்கட்டளையை துவக்கி, அதில் முதலீடு செய்யலாம். சட்டரீதியாக பார்த்தால் அதில் தவறு இல்லை.அதே நபர் ஊழல் அல்லது வரி ஏய்ப்பு செய்திருந்து, நீதிமன்ற தண்டனைக்கு ஆளாக்கப்பட்டு, சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டாலும் கூட, அந்த அறக்கட்டளையின் மீது கை வைக்க முடியாது என்பது தற்போது விதியாக உள்ளது.

இது அவர்களுக்கு மிகவும் சாதகமாகும்.இந்த சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி தான், மோசடி பேர்வழிகள் வெளிநாட்டில் அறக்கட்டளையை துவக்கி உள்ளனர் என்பது, இந்த பண்டோரா பேப்பர்சின் வாயிலாக அம்பலமாகிஉள்ளது.ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், இப்படிப்பட்ட அறக்கட்டளை சட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால், அதன் நோக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படுகிற, 'குள்ளநரித்தனம்' செய்கிற கயவர் கூட்டத்தை உடனடியாக கூண்டில் ஏற்ற வேண்டும்.அவர்களின் சொத்து அனைத்தையும் பறிமுதல் செய்கிற அளவிற்கு சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.lll


சிறப்பு நீதிமன்றங்கள் வேண்டும்!


வழக்கறிஞர் குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில் பசிக்காக ரொட்டித் துண்டை திருடுபவர் உடனடியாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுகிறார். ஆனால், கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்த, செல்வாக்கு மிகுந்தவர் தண்டிக்கப்படுவது அரிதிலும் அரிதாக உள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், தற்போது வரை அரசு தரும் விலையில்லா பொருட்களை வாங்க ஏழை, எளிய மக்கள் ஏங்கும் நிலை தான் உள்ளது.மக்களின் உழைப்பை சுரண்டி, அவர்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் இந்த ஆட்சியாளர்களும், அவர்களுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளும் ராஜபோக வாழ்க்கை வாழ்கின்றனர்.

ஊழல்வாதிகளின் சொத்துக்களை கையகப்படுத்தினால், நாட்டின் மொத்த கடனையும் அடைத்து விடலாம். ஆனால், நாம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திருடர்களை இடம் மாற்றி, அவர்கள் கையில் அரசு கஜானாவை ஒப்படைக்கிறோம்.ஊழல் செய்வோரை கைது செய்ய அதிகாரம் படைத்த காவல் துறை, ஆட்சியாளர்களின் கையில் இருந்தால், போலீசார் எப்படி சுதந்திரமாக செயல்பட முடியும்?

குற்றப் பின்னணி உடைய எம்.எல்.ஏ., - எம்.பி., மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க, நாடு முழுதும் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. அதில் ஒன்றாக, 2018ல் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு நீதிமன்றம் துவக்கப்பட்டது. அதில், 265 வழக்குகள் விசாரணையில் உள்ளன. கொலை, கற்பழிப்பு வழக்குகளை விட கொடியது, இந்த ஊழல். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கே தீங்கு விளைவித்து விடுகிறது. இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கு எதிரான வழக்குகள், மகளிர் நீதிமன்றம் மூலமும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள், 'போக்சோ' நீதிமன்றம் மூலமாகவும் விரைவாக விசாரணை நடத்தி, தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.அதே போல, இந்த ஊழல்வாதிகளும் விரைவாக தண்டிக்கப்பட வேண்டும். இப்போது இருக்கும் ஒரு நீதிபதி முன், தமிழகத்தில் உள்ள 265 வழக்குகள் உள்ளது என்றால், அந்த வழக்குகளை முடிப்பதற்குள் தலை சுற்றி விடும். இவற்றில் புதிதாக ஊழல் வழக்குகளும் சேரும்.அதனால் தான் இந்திர குமாரி போன்ற செல்வாக்கு மிகுந்தோர், தங்கள் மீதான வழக்கை 24 ஆண்டுகள் இழுத்தடிக்க முடிகிறது.கடந்த 1991 - 19-96 ஆட்சியில் நடந்த ஊழல் வழக்குகளை விசாரணை செய்ய, கருணாநிதி தலைமையிலான தி.மு.க., அரசு ஒன்பது சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தது. அதில் இன்று ஒரே ஒரு நீதிமன்றம் சென்னையில் மட்டும் செயல்படுகிறது.தற்போது நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் விரைவாக முடிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் பல உடனடியாக துவக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.பரிந்துரை செய்யுமா தமிழக அரசு?lll


'டிபாசிட்' இழக்க செய்யுங்க!ந.தேவதாஸ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: பொது சொத்துக்கள் சேத தடுப்பு சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கட்சி சார்பில் நடத்தப்படும் போராட்டத்தின் போது தொண்டர்களிடம் கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் உறுதி செய்ய வேண்டிய கடமை தலைவர்களுக்கு உள்ளது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் அரசியல் கட்சி, தங்கள் கூட்டணியில் இருக்கும் பட்சத்தில் ஆளுங்கட்சி அதை கண்டும் காணாமல் இருந்து விடுகிறது.சேதத்தை விளைவித்தோர் ஆளுங்கட்சியில் இருந்தாலும், அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

உயர் நீதிமன்றம் எவ்வளவு குட்டு வைத்தாலும், பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் குறிப்பிட்ட கட்சிகள் திருந்தப் போவதில்லை. அது எந்தெந்த கட்சிகள் என்பது மக்களுக்கும் தெரியும்.ஜாதி மற்றும் ரவுடியிசத்தை வளர்க்கும் கட்சிகள் தான், போராட்டத்தின் போது பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கின்றன.

இன்னும் சொல்வதென்றால், அதற்காக தான் போராட்டமே நடத்தப்படுகிறது.மக்களின் வரிப் பணத்தில் தான், அரசு சொத்துக்கள் வாங்கப்படுகின்றன. அதற்கு ஏற்படும் இழப்பிற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை, அரசுக்கு உள்ளது.

ஆனால், ஓட்டு வங்கி கணக்கு பார்க்கும் ஆளுங்கட்சி, ஒருபோதும் அராஜகத்தில் ஈடுபடும் கட்சி மீது நடவடிக்கை எடுக்காது. எனவே, பொது சொத்தை சேதப்படுத்திய கட்சிக்கு தண்டனை வழங்க வேண்டிய கடமை, மக்களுக்கு தான் உள்ளது.அடுத்து வரும் தேர்தல்களில், அந்த கட்சிகளுக்கு ஓட்டு போடாமல், 'டிபாசிட்' இழக்கச் செய்து தக்க பாடம் புகட்டினால் தான், அதன் தலைவர்களுக்கு புத்தி வரும்; பொது சொத்துக்களும் காப்பாற்றப்படும்!


அதை மறக்க கூடாது!ஸ்ரீ.சாரங்கா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆதார்' அட்டையை தனிநபர் அடையாளமாக மாற்ற மத்திய அரசு முயற்சித்த போது, எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.ஆதார் முறையால் தனிநபர் உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும், தகவல் பாதுகாப்பு கேள்விக்குறி ஆவதாகவும் கூறி, கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு தடைகளை மீறி பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, ஆதார் அட்டையை நாடு முழுதும் நடைமுறைப்படுத்தியது.'டிஜிட்டல்' பரிவர்த்தனை, மக்கள் நலத்திட்டம் செயல்படுத்துவது உட்பட பல்வேறு விஷயங்களுக்கு அரசுக்கு இன்று மிகப் பெரிய உதவியாக இருப்பது ஆதார் தான். போலி பயனாளிகளின் கணக்குகளை முடக்குவதும், இந்த ஆதாரால் எளிமையாகிறது.

சில மாதங்களுக்கு முன், 'பிரதம மந்திரி கிசான்' திட்டத்தில், போலியாக விவசாயி என பதிவு செய்து, 110 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்தில் ஊழல் நடந்தது.இதில், துறை ரீதியான நடவடிக்கையாக, 80 அதிகாரிகள் பணி நீக்கம் மற்றும், 34 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஊழலை கண்டுபிடித்ததற்கு ஆதார் மட்டுமே காரணம்.

கூட்டுறவு வங்கிகளின் நகைக் கடன் தள்ளுபடியில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பலர் கடன் பெற்று தள்ளுபடி சலுகை பெற்ற ஊழல் வெளிவந்ததற்கும் ஆதார் தான் காரணம்.கேரள மாநிலத்தில், 'தண்டபேர்' எனக் குறிக்கப்படும் நில ஆர்ஜித பதிவை, ஆதார் எண்ணுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பினாமி சொத்துக்களை கண்டறிய இந்த ஆதார் இணைப்பு முறை தேவை என, கேரள மாநில அரசு, மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.

இதுபோல, தொலைந்த உறவுகள், சொத்துக்கள் ஆகியவற்றை கண்டுபிடிக்க, தனிநபர்களுக்கும் ஆதார் பேருதவி செய்கிறது.இடைத்தரகர் முறை இல்லாத காரணத்தால், மானியங்கள் நேரடியாக தகுதியான நபர்களிடம் சென்று சேர்கின்றன.ஊரடங்கின் போது, இந்திய விவசாயத் துறை, 3 சதவீதம் அளவிற்கு உயர்ந்ததற்கு, இந்த நேரடி பரிவர்த்தனை தான் காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. பயங்கரவாதத்தை தடுப்பது முதல், எளியோருக்கு நலத் திட்டங்கள் கிடைப்பது வரை, ஆதார் பல வகையில் உதவி செய்கிறது. இதை தான், அன்று எதிர்க்கட்சிகள் எதிர்த்தன என்பதை நாம் மறக்கக் கூடாது.


மத்தளம் போல மாணவர்கள்!


வி.மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில் தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் தான், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

'தமிழக மாணவர்கள் தரமான கல்வியை பெறுகின்றனரா என்பது கேள்விக்குறி. போட்டித் திறனும், வேலை வாய்ப்பு திறனும் உடைய பட்டதாரிகளின் தரவரிசையில் தமிழகம் மிகவும் கீழே உள்ளது.'புதிய தேசிய கல்விக் கொள்கையில் தேவைப்படும் மாற்றங்கள் செய்து, தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும்.

அப்போது தான் தமிழக மாணவர்கள், பிற மாநில மாணவர்களை விட பின் தங்காமல், முன்னேறி செல்வர்' என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெளிவாக அறிவுறுத்தி உள்ளார்.தமிழக அரசு ஏன் மவுனம் சாதிக்கிறது என தெரியவில்லை. எதிர்க்கட்சியாக இருப்பதால், எதற்கெடுத்தாலும் மத்திய அரசை எதிர்த்தே நிற்க வேண்டும் என்ற அவசியமில்லை.

மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராக மாநில அரசு செயல்படுவதால், தமிழக மாணவர்களுக்கு தான் திண்டாட்டம். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. அரசியல் காரணங்களுக்காக, மாணவர்கள் எவ்வகையிலும் பாதிக்கப்படக் கூடாது.மத்திய அரசும், மாநில அரசும் மோதிக் கொள்வதால் மத்தளம் போல நடுவில் கஷ்டப்படுவது, நம் மாணவர் சமுதாயமே.

அதை நினைத்து, இரு அரசுகளும் முடிவு எடுக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்திற்காக மத்திய, மாநில அரசுகள் கொஞ்சம் இறங்கி வருவதில் தவறில்லை.ஏற்கனவே நம் மாணவர்கள், 'ஆன்லைன்' வழியே என்ன படிக்கின்றனர் என்றே புரியவில்லை. அவர்கள், உடற்பயிற்சியும் செய்வது கிடையாது. சத்தான உணவும் சாப்பிடுவது இல்லை.எவ்வகையில் பார்த்தாலும், நம் இளைஞர்களின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக் குறியோடு தான் நிற்கிறது! lll

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vandavasi Raja De Singu - Vandavasi,இந்தியா
11-அக்-202109:00:29 IST Report Abuse
Vandavasi Raja De Singu ஆளும் பா.ஜ., பெரும்பாலான வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது ஆம் ஆத்மி ... ஜி யின் பி டீம் உள்ளே பூந்து வோட்டுக்களைப் பிரித்து விட்டது . தமிழகத்தில் கூட டி எம் கே ஆட்சி புடிக்காதவன் கூட ஊராட்சி தேர்தலில் அதுக்குத்தான் போடுவான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X