சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

ஆராயப்பட அனேகம் உள்ளது!

Updated : அக் 12, 2021 | Added : அக் 11, 2021
Share
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழர் நாகரிக எச்சங்கள் ஏராளமாக உள்ளன என்கிறார், அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செங்குட்டுவன்:பொதுவாக மரங்கள் மண்ணுக்குள் புதைந்து மக்கிப் போகும். ஆனால், பிரத்யேக வேதியியல் மாற்றத்தால், சில மரங்கள் மக்கிப் போவதில்லை; மண்ணுக்குள் கல் ஆகின்றன. இது ஓர் அறிவியல் அதிசயம். இத்தகைய தொல்லுயிர் மரங்கள் உலகின் எங்கோ சில இடங்களில் மட்டுமே
சொல்கிறார்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழர் நாகரிக எச்சங்கள் ஏராளமாக உள்ளன என்கிறார், அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செங்குட்டுவன்:
பொதுவாக மரங்கள் மண்ணுக்குள் புதைந்து மக்கிப் போகும். ஆனால், பிரத்யேக வேதியியல் மாற்றத்தால், சில மரங்கள் மக்கிப் போவதில்லை; மண்ணுக்குள் கல் ஆகின்றன. இது ஓர் அறிவியல் அதிசயம். இத்தகைய தொல்லுயிர் மரங்கள் உலகின் எங்கோ சில இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன.

இத்தகைய தொல்லுயிர் மரங்கள், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை மற்றும் பெரம்பலுார் மாவட்டம் சாத்தனுார் ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன. திருவக்கரை பகுதியில் அதிக அளவிலான கல் மரங்கள் மண்ணுக்குள் புதையுண்டு இருக்கின்றன. இவை, கி.பி., 1781ல் ஐரோப்பிய விஞ்ஞானி சோனரார்ட் என்பவரால் ெவளி உலகிற்கு தெரிய வந்தவை. கல் மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை.

இவற்றை பாதுகாக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினோம். அதன் விளைவாக, திருவக்கரையில் கல் மரங்களை பாதுகாக்க தமிழக அரசின் புவியியல் சுரங்கத் துறை, 'ஜியோ பார்க்' அமைக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுள்ளது.அதுபோல, விழுப்புரம் அருகே உள்ள கல்யாணம்பூண்டி கிராமத்தில் சிறிய குன்றுகள் காணப்படுகின்றன. அங்குள்ள எழுத்துப் பாறையை ஆய்வு செய்த போது விலங்கு, மனிதன் போன்ற குறியீடுகளை கொண்ட பாறை ஓவியங்கள் இருப்பதைப் பார்த்தோம்.

இவை, 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இந்த பாறைகளுக்கு அருகில் இருக்கும் பாறைகள், கற்களுக்காக உடைக்கப்பட்டு வருகின்றன. மிச்சம் இருக்கும் பாறைகளையும் உடைத்து தீர்த்து விட்டால், அடுத்த இலக்கு, ஓவியங்களை தாங்கி நிற்கும் பாறைகள் தான் என்பதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் பரவலாக காணப்படும் சிற்பம் மூத்த தேவி என்பதாகும். தமிழகத்தின் பெண் தெய்வ வழிபாட்டில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றிருந்தவர் மூத்ததேவி. இவர் பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இலக்கியங்களில், 'தவ்வை' என இவர் குறிப்பிடப்படுகிறார். இவரை வட மொழியில், ஜேஷ்டா என அழைக்கின்றனர். இந்த பெண் தெய்வம் விளைச்சல், செல்வம், தாய்மை, துாய்மை ஆகியவற்றின் அடையாளமாக வணங்கப்பட்டு வந்தவர். காக்கை கொடியுடன் இருக்கும் மூத்ததேவியின் வாகனம் கழுதை.
பெருத்த வயிற்றுடன் கால்களை அகட்டிய நிலையில் காணப்படும் மூத்ததேவியுடன் அவரது குழந்தைகளான மாந்தன், மாந்தி ஆகியோரும் சிற்பங்களில் உடன் இருப்பர்.அவர் துாய்மைக்கான தெய்வம் என்பதால், சிற்பங்களில் துடைப்பம் செதுக்கப்பட்டிருக்கும். செல்வத்திற்கு உரியவள் என்பதால், பணப்பெட்டியும் பக்கத்தில் இருக்கும்.இதுபோல ஏராளமான வரலாற்று எச்சங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளன. இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டியவை ஏராளமாக உள்ளன!


ஆரம்ப நிலையிலேயே பார்ப்பது நல்லது!


சிறுநீர் பாதை தொற்று தொடர்பாக கூறும், சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் அனு ரமேஷ்: பெண்களை பாதிக்கும் தொற்றுகளில் ஒன்று, சிறுநீர்ப் பாதைத் தொற்று. பெண்களில் 50- - 60 சதவீதம் பேர், ஒருமுறையாவது இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவதாக கூறுகிறது, உலக சுகாதார நிறுவனம்.
ஒரு மி.லி., சிறுநீரில் ஒரு லட்சத்துக்கும் மேலாக, குறிப்பிட்ட பாக்டீரியா காணப்பட்டால் அதை சிறுநீர்ப்பாதைத் தொற்று என்று உறுதி செய்கின்றனர், மருத்துவர்கள்.சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பாதை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம் என, சிறுநீரக மண்டலத்தின் எந்தப் பகுதியில் தொற்று ஏற்பட்டாலும், அது சிறுநீர்ப்பாதைத் தொற்று என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.

பெண்களின் சிறுநீர்க்குழாய் சிறியது என்றாலும், சிறுநீர் வெளியேறும் இடம், 'வெஜைனா' மற்றும் ஆசனவாய் மூன்றும் அருகருகில் இருப்பதால், ஆண்களை விட பெண்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.பொதுக் கழிப்பறைகளை அதிகம் பயன்படுத்துதல் மற்றும் 'மெனோபாஸ்' நிலையை அடைந்தவர்களுக்கு 'ஈஸ்ட்ரோ ஜென் ஹார்மோன்' சுரப்பு குறைவாலும் இப்பிரச்னையை உருவாக்கலாம்.

இதுதவிர, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது; நீரிழிவு; 'ஸ்டீராய்டு' அல்லது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகள்; ஏற்கனவே இதே தொற்று ஏற்பட்டவர்கள்.தொற்று ஏற்பட்டு முழுமையான மற்றும் முறையான சிகிச்சை எடுக்காதவர்கள்; சிறுநீரகக் கல் பாதிப்பு; சிறுநீர் வெளியேற நீண்ட நாட்கள் 'கத்தீட்டர்' பொருத்திக் கொண்டவர்கள்; பிறவியிலேயே சிறுநீர் மண்டலத்தில் பிரச்னை இருந்தாலும் தொற்று ஏற்படலாம்.

சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல்; அடிவயிற்றில் வலி; குளிர் காய்ச்சல்; அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு; சிறுநீர் கழித்த பின்னரும் முழுமையாக வெளியேறாதது போன்ற உணர்வு.சீராகப் பிரியாமல் சிறுநீர் விட்டுவிட்டு வருதல்; கலங்கியது போன்ற சிறுநீரின் நிறம் போன்ற அறிகுறிகள், ஓரிரு நாட்களுக்கு மேல் நீடித்தால் அது சிறுநீர்ப்பாதைத் தொற்றாக இருக்கலாம்.சீழுடன் அல்லது அடர் சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், சிறுநீர் வெளியேறும் இடத்தில் ஏற்பட்டிருக்கிறதா அல்லது வெஜைனாவில் தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

வெஜைனாவில் ஏற்பட்டால் அது அந்தப் பகுதியைச் சார்ந்த தொற்றாக இருக்கலாம். அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால், தொற்று தீவிரமாகி பல உறுப்புகளை பாதிக்கும். சிறுநீரில் காணப்படும் பாக்டீரியா, ரத்தத்துக்குள் கலந்து விட்டால் நச்சேற்றம் ஏற்பட்டு உயிரிழப்புகூட ஏற்படலாம். எனவே, ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகினால் மருந்துகளிலேயே சரி செய்யலாம்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X