கோவை:கோவையில் நேற்று நடந்த சிவில் சர்வீசஸ் முதல் நிலைத்தேர்வில் 56 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலைத்தேர்வு நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் 25 மையங்களில் தேர்வு நடந்தது. மொத்தம் 10,953 பேருக்கு தேர்வு எழுத அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது.இவர்களில் 4,829 பேர் மட்டுமே நேற்றைய தேர்வுக்கு வந்திருந்தனர். இது, 44 சதவீதம் ஆகும். அனுமதிச்சீட்டு பெற்றிருந்த 56 சதவீதம் விண்ணப்பதாரர்கள், அதாவது 6124 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வு மையங்களை கலெக்டர் சமீரன், கருவூல கணக்குத்துறை ஆணையர் வெங்கடேஷ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.மாவட்டத்தில் 8 துணை கலெக்டர்கள், 25 தாசில்தார்கள், 46 துணை தாசில்தார்கள், 931 அறை கண்காணிப்பாளர்கள் கொண்ட குழுவினர் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மின்னணு சாதனங்களின் உதவியுடன் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க, தேர்வு மைய வளாகங்களில் ஜாமர்கள் நிறுவப்பட்டிருந்தன. மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE