நல்லவை அனைத்தும் நல்கும் நவராத்திரி
ராமர் வணங்கி தவமிருந்த நவராத்திரி
நாளை
6ம் நாள் பண்டிகை
லட்சுமிதேவி, அலர்மேல் மங்கை என்ற பெயருடன் பிறந்து, திருப்பதி வேங்கடேச பெருமானை திருக்கல்யாணம் செய்யும் பொருட்டு, நவராத்திரி 9 நாட்கள் விரதமிருந்ததாக ஒரு புராணக்கதை உண்டு. அதனால் திருமலை திருப்பதியில், நவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
அதேபோல், ராமர் போரில் ராவணனை வெற்றி கொள்ள, புரட்டாசி மாதம் சுக்லபட்ச
பிரதமையில் துவங்கி 9 நாட்கள் நவராத்திரி விரதம் இருந்து, ஸ்ரீதேவியை
பூஜித்ததாக ஐதீகம். ராவணனுடைய வலிமை, அவன் பெற்றிருந்த அளப்பரிய வரங்கள் ஆகியவற்றை உணர்ந்த ஸ்ரீராமன், அவனை வெற்றி கொள்வதற்கான உபாயங்கள் பற்றி யோசித்திருக்கும்போது, அகத்திய முனிவர் வழிகாட்டினார்.
அதாவது ராவணனை வெல்லக் கூடிய வலிமையை தரும், 'ஸ்ரீபஞ்சதசாட்ஷரி' எனும் ஸ்ரீவித்யா மகாமந்திரத்தை ராமனுக்கு அகத்திய முனிவர் உபதேசித்தார். அதையடுத்து நவராத்திரி 9 நாட்கள் ராமர் நியம நிஷ்டையுடன் இரவில் அம்பிகையை தியானித்து, ராவணனை வெல்லும் வல்லமை கிடைக்கப் பெற்றார்.ராவண யுத்தத்தின் போது, ஒரு கட்டத்தில் ராவணன் ஆயுதங்களை இழந்து நிராயுதபாணியாக இருந்தான்.
அப்போது ராமன், 'ஒன்று - தோல்வியை ஒப்பு கொண்டு சீதையை என்னிடம் ஒப்படைத்து விடு அல்லது இலங்கை சென்று ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வா; நான் காத்திருக்கிறேன். போரில் யார் வெல்கின்றனர் என்று பார்ப்போம்...' என்று சொல்ல, தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பாத ராவணன், மீண்டும் இலங்கை சென்று, ஆயுதங்களுடன் வந்து போரைத் தொடர்ந்து தோல்வியுற்றான் என்கிறது ராமாயணம்.
வட இந்தியாவில் நவராத்திரியில் ராமாயணக்கதை 'ராம்லீலா' என்று விமரிசையாகக் கொண்டாடப்படும். ராவணனின் உருவ பொம்மைகளை, விஜயதசமி தினத்தன்று சொக்கபனை கொளுத்தி மகிழ்வர்.
கோலம்
கடலைமாவால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.
நைவேத்தியம்
தேங்காய் சாதம், தேங்காய் பால் பாயசம், ஆரஞ்சு பழம், மாதுளை, நவதானிய சுண்டல்,
நட்ஸ் உருண்டை.
தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள்
உதிர் உதிராக வடித்த பச்சரிசி சாதம் - 1 கப்
தேங்காய்த் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
முந்திரி - 10
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி தாளித்து, அத்துடன் தேங்காய் துருவல் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அத்துடன் தேவையான உப்பு மற்றும் சாதம் சேர்த்து கலக்கவும். தேங்காய் சாதம் தயார்.
டிரை புரூட்ஸ் உருண்டை
தேவையான பொருட்கள்
உலர்ந்த திராட்சை - 1 கப்
உலர் அத்திப்பழம் - -5
பேரீச்சம்பழம் - -10
முந்திரி, பாதாம், வால்நட்,
வெள்ளரி விதை - தலா 1 கப்
ஏலக்காய்த்துாள் - 1 சிட்டிகை
தேன், நெய் - தலா 1டேபிள் ஸ்பூன்
செய்முறை
அத்திப்பழம் மற்றும் பேரீச்சம் பழங்களை மிக்சியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளை ஒன்றிரண்டாக உடைத்து, லேசாக நெய்யில் வறுத்து ஆறியதும், பழக்கலவையில் சேர்க்கவும். அத்துடன் தேன், நெய் விட்டுக் கலந்து, உருண்டைகளாகப் பிடிக்கவும். கையில், 'பிசுபிசு'வென்று ஒட்டாமல் இருக்க நெய் தடவிக் கொள்ளவும்.
மலர்கள்
பாரிஜாதம், விபூதிப்பச்சை, செம்பருத்தி, சம்பங்கி.
ராகம்
நீலாம்பரி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE