திருப்பூர்:தீபாவளி நெருங்குவதையடுத்து, பின்னலாடை தயாரிப்பில் திருப்பூர் நிறுவனங்கள் வேகம்காட்டி வருகின்றன.கொரோனாவால் இந்தியாவிலும், உலகளாவிய நாடுகளிலும் ஆடை வர்த்தகத்தில் ஏற்பட்ட மந்தநிலை மாறியுள்ளது. ஆயத்த ஆடை ரகங்கள் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்; இதையடுத்து, சர்வதேச அளவில் ஆடை தேவை அதிகரித்துள்ளது.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, வெளிநாடுகளில் இருந்தும்; உள்நாட்டு சந்தைக்கு ஆடை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, நாடு முழுவதும் பல மாநிலங்களில் இருந்தும், ஆர்டர்கள் அதிகரித்துள்ளன.வரும் நவ., 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகைக்கு பத்து நாட்களுக்கு மேல் விடுப்பு எடுப்பது தொழிலாளர்களின் வழக்கம். பண்டிகை நெருங்குவதையடுத்து, கையிருப்பு ஆர்டர்கள் மீது ஆடை தயாரித்து, குறித்த காலத்துக்குள் வர்த்தகருக்கு அனுப்பி வைப்பதில் பின்னலாடை நிறுவனங்கள் வேகம்காட்டிவருகின்றன.
பின்னலாடை துறை ஆலோ சகர் சபரிகிரீஷ் கூறியதாவது:திருப்பூரில் உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் வசம் அதிகளவு ஆர்டர்கள் உள்ளன. தீபாவளி நெருங்குவதால், நிறுவனங்களின் ஆடை தயாரிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.ஏற்றுமதி நிறுவனங்களில் கோடைக்கால ஆடை தயாரிப்பு நடந்துவருகிறது. குறித்த காலத்தில் உற்பத்தி முடிந்தாலும் கூட, கன்டெய்னர் தட்டுப்பாடு, கப்பல் இயக்கம் பாதிப்பால், ஆடைகளை, வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது.
தீபாவளிக்கு தொழிலாளர் அதிக நாட்கள் விடுப்பு எடுத்தால், ஆடை உற்பத்தியும் பாதிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் மேலும் காலதாமதம் ஏற்பட்டுவிடும்.கொரோனாவுக்குப் பின், தொழிலாளர்கள் அதிக நாட்கள் விடுப்பு எடுக்க விரும்புவதில்லை. பெரும்பாலான நிறுவனங்களில், வெளிமாநில தொழிலாளர் அதிகம் உள்ளனர். ஹாஸ்டலில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள், பண்டிகைக்கு அதிக நாட்கள் விடுப்பு எடுப்பதில்லை.நிறுவனங்கள், அதற்கேற்ப திட்டமிட்டு, ஆடை தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE