சென்னை-சென்னை, காஞ்சிபுரம், வேலுார் மாவட்டங்களில், தனியார் ஜவுளி மற்றும் நிதி நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 500 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக, வருமான வரித்துறை தெரிவித்துஉள்ளது.

காஞ்சிபுரத்தை தலைமையிடமாக வைத்து, பிரபல ஜவுளி நிறுவனம் செயல்படுகிறது. இதே பகுதியில், நிதி நிறுவனம் ஒன்றும் உள்ளது. வரி ஏய்ப்பு புகாரில், இந்த நிறுவனங்கள் மற்றும் அவற்றை சார்ந்த 34 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அக்., 5ல் சோதனை நடத்தினர். பல இடங்களில் இரண்டாவது நாளாகவும் சோதனை நீடித்தது. அதுபற்றிய விபரங்களை வருமான வரித்துறை நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம், சில ஆண்டுகளில் கணக்கில் காட்டாமல், 400 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்க பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவன அலுவலகங்களில் கணக்கில் வராத, 1.35 கோடி ரூபாய், 7.5 கிலோ தங்க நகைகள் இருந்ததும், கணக்கில் காட்டப்படாத 150 கோடி ரூபாய் வருவாயும் கண்டுபிடிக்கப்பட்டது.ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில், தவறான விற்பனை விபரங்கள், கணக்குகள் பராமரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தன.இந்நிறுவனத்தினர், ஆடம்பர வாழ்க்கைக்காக அதிக தொகை செலவு செய்ததும் தெரியவந்துள்ளது.

கணக்கில் வராத 44 லட்சம் ரூபாய், 9.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை நடந்த ஆய்வில், 100 கோடி ரூபாய் அளவுக்கான வருவாயை கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது. இந்த இரு நிறுவனங்களிலும் சேர்த்து, 500 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது. அது தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்கின்றன. இவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE