ம.தி.மு.க., பொருளாளர் பதவியை, துரை வைகோவுக்கு வழங்க, கொங்கு மண்டல நிர்வாகிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ம.தி.மு.க., பொருளாளர் கணேசமூர்த்தி, லோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது எம்.பி., பதவிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. பொருளாளர் பதவியை கணேசமூர்த்தி ராஜினாமா செய்ததால், அப்பதவி காலியாக உள்ளது. உடல் நலக்குறைவால் மறைந்த நாசரேத் துரை, துரை பாலகிருஷ்ணன் ஆகியோரின், துணை பொதுச் செயலர் பதவிகளும் காலியாக உள்ளன.
இந்நிலையில், ம.தி.மு.க., உயர்நிலைக்குழு, மாவட்ட செயலர்கள் கூட்டம், வரும் 20ம் தேதி, சென்னை தாயகத்தில் நடைபெறுகிறது.அப்போது, காலியாக உள்ள பதவிகளுக்கான நியமனம் குறித்து ஆலோசனை நடக்க உள்ளது.காலியாக உள்ள மூன்று பதவிகளில், பொருளாளர் பதவியை வைகோ மகன் துரைக்கு வழங்க வேண்டும் என்று, அவரது ஆதரவு மாவட்ட செயலர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆனால், கொங்கு மண்டல நிர்வாகிகள், தங்கள் மண்டலத்தை சேர்ந்தவருக்கு பொருளாளர் பதவியை வழங்க வேண்டும் என்று போர்க்கொடி துாக்கி உள்ளனர்.மூத்த வழக்கறிஞர் ஒருவரும், கொங்கு மண்டலத்தை சேர்ந்த மூத்த மாநில நிர்வாகி ஒருவரும், துரைக்கு பதவி வழங்க பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இதனால், அக்கட்சியில் பிளவு ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.ஆதரவும், எதிர்ப்பும்! துரை வைகோவுக்கு பதவி வழங்க ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து, சமூக வலை தளங்களில் கருத்துகள் வேகமாக பரவி வருகின்றன.

அதன் விவரம்: ம.தி.மு.க., தியாகத்தில் வளர்த்த கட்சி. இதை மேலும் வளர்க்க, ஒரு குடையின் கீழ் பாதுகாப்பான முறையில் வழி நடத்த துரை வைகோவை வாழ்த்தி அனுமதிக்க வேண்டும் ம.தி.மு.க.,வின் எதிர்காலம் துரை வைகோ. வைகோவின் உடல் நலனை பாருங்கள். கட்டாயம் வைகோவுக்கு ஓய்வு தேவை. புதுரத்தம் ம.தி.மு.க., வுக்கு தேவை கலிங்கப்பட்டியில் ஓட்டு போட்டு விட்டு வைகோ நிருபர்களை சந்தித்தார். அவர் குரலில், பழைய கம்பீரம் காணவில்லை. வயது மூப்பு காரணமாக இருக்கலாம். தன் மகன் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என்று கூறிவிட்டு, அதற்கான காரணத்தை வைகோ சொன்னதை ஏற்க முடியவில்லை. ம.தி.மு.க.,வில் வாரிசு அரசியலா; அந்தோ பரிதாபம். குருவி குளம் ஒன்றியம், மூன்றாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, 1,000 ரூபாய் கொடுத்து ஓட்டு சேகரிப்பு; ஊர்மக்கள் வாங்க மறுப்பு; அதனால், வீட்டு வாசலில் வைத்து விட்டு செல்கின்றனர். அந்த பணத்தை ஊர்மக்கள், வேட்பாளர் வீட்டுக்கு சென்று திரும்பி கொடுக்கின்றனர். நேர்மை என்றால் வைகோ; அந்த பிம்பத்தை உடைக்கிறார் துரை வைகோ. இவ்வாறு பதிவிட்டுள்ளனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE