ஏற்கனவே தரப்பட்டிருக்க வேண்டிய 26 டி.எம்.சி., இந்த மாதம் தர வேண்டிய 14 டி.எம்.சி,யையும் சேர்த்து, தமிழகத்துக்கு மொத்தம் 40 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விடும்படி, கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்குமுறை குழு உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் சமீபத்தில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14வது கூட்டத்தில் தமிழகத்துக்கு தர வேண்டிய நிலுவைத் தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடகாவுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவின் ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் டில்லியில் நேற்று நடந்தது. கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித்துறை செயலர் சந்தீப் சக்சேனா பங்கேற்றார்.திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன், செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோரும் தமிழக அரசு சார்பில் பங்கேற்றனர்.
அப்போது தமிழகத்துக்கு என கடந்த மாதம் வரை தரப்பட்டிருக்க வேண்டிய 25.84 டி.எம்.சி., அளவிலான நிலுவைத் தண்ணீர் குறித்து, தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தங்கள் மாநிலங்களில் நிலவும் பருவ சூழ்நிலை, மழை பொழிவு அளவு, அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு, அணைகளில் தண்ணீர் கையிருப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப விபரங்களை, ஒவ்வொரு மாநிலங்களின் பிரதிநிதிகளும் தனித்தனியே சமர்ப்பித்தனர்.
இந்த புள்ளிவிபரங்கள் மீதான ஆலோசனைகள் மற்றும் திருத்தங்கள் பற்றியும், இதன் மீது மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இறுதியாக ஏற்கனவே தரப்பட்டிருக்க வேண்டிய நிலுவைத் தண்ணீரான 25.84 டி.எம்.சி.,யுடன், இந்த அக்., இறுதி வரை தரப்பட வேண்டிய 14 டி.எம்.சி., தண்ணீரையும் சேர்த்து, தமிழகத்துக்கு, 40 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விடும்படி, கர்நாடகாவுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்த உத்தரவு கர்நாடக அரசுக்கு வழங்கப்பட்டதாகவும், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விபரங்கள் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவின் தலைவர் நவீன்குமார் தெரிவித்தார்.- - நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE