ஊழல் அதிகாரிகள் பலர் மாறலை... ஊருக்குள்ள டுபாக்கூர்கள் தொல்லை தீரலை!

Updated : அக் 12, 2021 | Added : அக் 11, 2021 | |
Advertisement
மழை வலுத்து, பகலிலேயே இருட்டுக் கட்டியிருந்தது; இடியும் மின்னலுமாக வானம் மிரட்டியது. எல்லா ரோடுகளிலும் டிராபிக் ஜாம். எங்கேயும் போகாமல் வீட்டிற்குள் முடங்கியிருந்த சித்ரா, மித்ராவை அழைப்பதற்காக அலைபேசியை எடுத்தாள். அதற்குள் 'காலிங் பெல்' சத்தம் கேட்டு, கதவைத் திறக்க. நனைந்தபடி நின்று கொண்டிருந்தாள் மித்ரா.''ஏன்டி, மழை விட்டதும் வரமாட்டியா...உள்ளே வா!'' என்று
 ஊழல் அதிகாரிகள் பலர் மாறலை...  ஊருக்குள்ள டுபாக்கூர்கள் தொல்லை தீரலை!

மழை வலுத்து, பகலிலேயே இருட்டுக் கட்டியிருந்தது; இடியும் மின்னலுமாக வானம் மிரட்டியது. எல்லா ரோடுகளிலும் டிராபிக் ஜாம். எங்கேயும் போகாமல் வீட்டிற்குள் முடங்கியிருந்த சித்ரா, மித்ராவை அழைப்பதற்காக அலைபேசியை எடுத்தாள். அதற்குள் 'காலிங் பெல்' சத்தம் கேட்டு, கதவைத் திறக்க. நனைந்தபடி நின்று கொண்டிருந்தாள் மித்ரா.

''ஏன்டி, மழை விட்டதும் வரமாட்டியா...உள்ளே வா!'' என்று துண்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, காபி போட்டு வருவதாகச் சொல்லி சமையலறைக்குள் சென்றாள் சித்ரா.

அவள் பின்னாலேயே சென்ற மித்ரா, ''நீ காபி போடுறதாச் சொன்னதும், ஒரே ஒரு ஜெராக்ஸ் காப்பியை வச்சு, 10 லட்ச ரூபாய் பார்த்த நம்மூரு ஆபீசர் ஞாபகம் வந்துருச்சுக்கா!'' என்று தன் மேட்டருக்கு 'டிரைலர்' ஓட்டினாள் மித்ரா.

''லேசா ஞாபகம் வருது....சட்டுன்னு ஞாபகமும் வரமாட்டேங்குது. நீயே சொல்லு!'' என்றபடியே காபி போட ஆரம்பித்தாள் சித்ரா.

''போன கவர்மென்ட் இருந்தப்போ, மேட்டுப்பாளையத்துக்கு பை-பாஸ் ரோடு போடுறதுக்கு, முதல்ல என்.எச்.ஏ.ஐ.,சார்புல ப்ரப்போசல் ரெடி பண்ணி, எந்தெந்த நிலம் எடுக்குறோம்னு நோட்டிபிகேஷனும் கொடுத்துட்டாங்க. டோல்கேட் வருதுன்னு எதிர்ப்பு கிளம்பி அந்த ரோடு 'ட்ராப்' ஆயிடுச்சு. அதே பிளானை எடுத்து, ஸ்டேட் ஹைவேஸ் சார்புல கன்சல்டன்ஸிட்ட கொடுத்து ப்ளான் ரெடி பண்ணுனதாச் சொல்லி, 10 லட்ச ரூபா எடுத்தாரு ஒரு இன்ஜினியர்!'' என்றாள் மித்ரா.

''இப்போ லேசா ஞாபகம் வருது மித்து...வானத்துக்குப் பாலம் கட்டுன அதே இன்ஜினியர்தானே... இதுபத்தி விஜிலென்ஸ்க்கு புகார் போய், வழக்கும் பதிவு பண்ணுனாங்களே...அது என்னாச்சு?'' என்று காபியை ஆற்றியபடி ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.

''அக்கா! அவர்தான் சேலத்துக்காரருக்கு ரொம்பவும் நெருக்கமானவராச்சே...போன கவர்மென்ட்ல கோயம்புத்துார், சேலம்னு மாறி மாறி வலுவான போஸ்ட்டிங்ல உட்கார்ந்துட்டு, பாலங்களை இஷ்டத்துக்கு டிசைன்களை மாத்தி மாத்திக் கட்டிட்டு இருந்தாரு. இந்த கேசையும் அப்பவே ஊத்தி மூடிட்டாங்க போலிருக்கு. ஆட்சி மாறியும் இவரை மாத்தலை!'' என்றாள் மித்ரா.

''இவர் மட்டும் கிடையாது...சிட்டிக்குள்ள சின்ன பில்டிங்குக்கு அனுமதி கொடுக்குற முக்கிய லேடி ஆபீசரும் மாறலை. பெரிய பில்டிங்குகளைக் கட்டுறதுக்கு அனுமதி கொடுக்கக்கூடிய ஒரு ஆபீசர் நஞ்சப்பா ரோட்டுல இருக்காரே...அவரும் மாறலை...'' என்று சித்ரா சொல்லும்போதே குறுக்கே புகுந்தாள் மித்ரா...

''ஆமாக்கா...அவர்தான் இந்த ஊருக்கு வந்ததுல இருந்து, செமயா 'வாழ்ந்துட்டு' இருக்கார்னு சொல்றாங்க... போன வாரத்துல கோயம்புத்துார் மாஸ்டர் பிளான் பத்தி, தொழில்துறையினரோட ஒரு கூட்டத்தை அவருதான் நடத்திருக்காரு. தகவல் தெரிஞ்சு போன பத்திரிகைக்காரங்கள்ட்டயும் எதுவும் சொல்லலையாம்!''

''இதுல என்ன ரகசியம் வேண்டிக் கிடக்கு...அதான் நம்ம ஊருல இருந்து இந்திய தொழிற்கூட்டமைப்பு சார்புல, முதல்வர் ஸ்டாலினை நேத்து சென்னையில சந்திச்சு, மாஸ்டர் பிளான் பத்தி விரிவான அறிக்கையோட மனு கொடுத்திருக்காங்களே...!''

''ஆமாக்கா...அவுங்க போட்டிருந்த 'டிராப்ட்' பார்த்தேன்... தமிழ்நாட்டோட மொத்த உற்பத்தியில கோயம்புத்துாரோட பங்களிப்பு என்னன்னு தெளிவாச் சொல்லிருந்தாங்க. முதல்வரும், 'கோயம்புத்துாருக்கு வேண்டியதை நாங்க கண்டிப்பாச் செய்வோம்'னு ரொம்பவே நம்பிக்கையாச் சொல்லிருக்காரு...அதுக்கு முதல்ல நம்ம ஊருக்கு நல்ல ஆபீசர்களைப் போடணும். ஆனா ஹவுசிங் மினிஸ்டர்ட்ட மாஸ்டர் பிளான்னாலே முழிக்கிறாரே!''

''அவருக்கு இந்த டிபார்ட்மென்ட் விவகாரங்கள் இன்னும் பிடிபடவே இல்லைங்கிறதை, கோயம்புத்துார்ல ஒவ்வொரு முறை பிரஸ்மீட் கொடுக்குறப்பவும் அவரே நிரூபிக்கிறாரு...ஹவுசிங் போர்டுல கமர்சியல் சைட்களை ஏலம் விட்டதுல, இங்க இருக்குற அதிகாரிகளும், மதுரையில இருக்குற ஒரு மேலதிகாரியும் சேர்ந்து சிண்டிகேட் போட்டு, வாரிய இடத்தை அடிமாட்டு விலைக்கு விக்கப் பாத்திருக்காங்க!'''ஓ... பேப்பர்ல டீட்டெய்லா போட்டிருந்தாங்களே...!''

''ஊரே பாத்திருக்கு...ஆனா டிபார்ட்மென்ட் மினிஸ்டருக்கு அதைப் பத்தி ஒண்ணுமே தெரியலை. நிருபர்கள் கேட்டதுக்கு, ஒரு விபரமும் தெரியாமல் அதிகாரிகள் சொன்னதை அப்படியே கேட்டுட்டு, 'எந்த முறைகேடும் நடக்கலையே'ன்னு கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பிச்சிருக்காரு!'' என்றாள் சித்ரா.

'டிவி'யைப் போட்டு சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தாள் மித்ரா. கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தவர்கள் பற்றிய செய்தியைப் பார்த்ததும் சித்ராவைப் பார்த்துக் கேட்டாள்...

''அக்கா! போன வாரத்துல நம்ம கலெக்டர் ஆபீஸ்ல கம்யூனிஸ்ட் சார்புள்ள ஒரு சங்கத்துக்காரங்க ஒரு அதிகாரியை மாத்தணும்னு, திடீர்னு போராட்டம் நடத்துனாங்களே...கொடுமை என்னன்னா அந்த அதிகாரி இன்னொரு கம்யூனிஸ்ட் சார்பு சங்கத்தோட தலைவரா இருக்காரு. ரெண்டு தோழர்களுக்கும் இடையில இருக்குற ஒற்றுமையைப் பாத்து கலெக்டராபீசே சிரிக்குது!''

''காங்கிரஸ் காமெடி ஒண்ணு கேக்குறியா?'' என்று சிரித்தபடி கேட்டாள் சித்ரா.

''தமிழக காங்கிரஸ்னா அவ்வளவு காமெடியாப் போச்சுல்ல...சொல்லுங்க கேக்குறேன்!'' என்றாள் மித்ரா.

''போன வாரம் கோயம்புத்துார் காங்கிரஸ் கட்சி ஆபீசுக்கு மாநிலத் தலைவர் அழகிரியும், தெலங்கானா எம்.பி., உத்தம்குமார் ரெட்டியும் வந்தாங்க...அழகிரி முதல்ல வந்துட்டாரு. அவரு வந்தப்போ பட்டாசு வெடிச்சு, பேண்டு வாத்தியமெல்லாம் முழங்க வரவேற்று உள்ளே கூட்டிட்டுப் போயிட்டாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு, ரெட்டி வந்தப்போ வரவேற்க ஒருத்தரும் இல்லை. அவர் வந்து பரிதாபத்தோட நிக்கிறதைப் பாத்து, தொண்டர்கள் சில பேரு பொன்னாடை போர்த்தி கூப்பிட்டுப் போயிருக்காங்க...கேட்டா காங்கிரஸ்ல இதெல்லாம் சாதாரணமப்பாங்கிறாங்க!'' என்றாள் சித்ரா.

போலீஸ் சீருடையில் விஜயகாந்த் கம்பீர வசனம் பேசுகிற ஏதோ ஒரு காட்சியைப் பார்த்துக் கொண்டே, அடுத்த 'டாபிக்'கிற்கு மாறினாள் மித்ரா...

''நம்ம ஊருல இருக்குற பெரிய போலீஸ் ஆபீசர்களும் இப்பிடித்தான்...டயலாக் எல்லாம் நல்லாப் பேசுறாங்க. ஆனா தப்பு செய்யுற கீழ் அதிகாரிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ மாட்டேங்கிறாங்க!''

''யாரோ ஒருத்தரைப் பத்தி வலுவான தகவல் வச்சிருக்கேன்னு தெரியுது...யார்ன்னு நீயே சொல்லு!''
''கந்து வட்டியில பாதிக்கப்பட்டா எங்களுக்கு கூப்பிடுங்கன்னு, சிட்டி போலீஸ்ல ஒரு ஸ்பெஷல் நம்பர் கொடுத்திருக்காங்க. ஆனா அதே கமிஷனர் ஆபீசுல க்ரைம் பிராஞ்ச்சுல இருக்குற ஒரு ஆபீசர், ரெண்டு பேருக்கு இடையில நடந்த பார்ட்னர்ஷிப் பிரச்னையில, ஒரு தரப்பை ராத்திரியில அங்கேயே உட்கார வச்சு மெரட்டி எழுதி வாங்கிருக்காரு. அதுல கொடுமை என்னன்னா, தர வேண்டிய பணத்துக்கு மூணு ரூபா வட்டியும் தர்றதா எழுதிருக்காங்களாம். போலீஸ் ஆபீசரே இப்படி மெரட்டி எழுதி வாங்குனா அப்புறம் கந்துவட்டிக்காரங்க எப்படித் திருந்துவாங்க...சிஎம் செல்லுக்கே இது பெட்டிஷனா போயிருக்காம்!''

''கோயம்புத்துார்ல ஆபீசரா இருக்கிறவுங்க மட்டுமில்லை...ஆபீஸ் பாய் கூடத்தான் நல்லா சம்பாதிக்கிறாங்க!'' என்று கொக்கி போட்டாள் சித்ரா.

''ம்...தெரியுமே...நீங்க சொல்றது எந்த ஆபீஸ்ல?''

''கோயமுத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்துலதான்... அந்த சொசைட்டிக்குக் கீழ 140 ரேஷன் கடை இருக்குது...தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஒரே இடத்துல மூணு வருஷமா இருந்தவுங்கன்னு மொத்தமா எல்லாரையும் மாத்துனாங்க. இப்போ பொறுமையா ஒவ்வொருத்தர்கிட்டயும் எந்தக் கடை வேணும்னு கேட்டு ரேட் பேசி டிரான்ஸ்பர் போடுறாங்களாம். அதுல வெயிட்டா துட்டு கொடுத்தவுங்க, பழைய கடைகளுக்கே வந்துட்டாங்களாம்!''

''இதுக்கும் ஆபீஸ்பாய்க்கும் என்னக்கா சம்பந்தம்?'' என்று அவசரப்பட்டாள் மித்ரா.''முழுசாக் கேளுடி...ஆளுக்கு 10 ஆயிரம், 20 ஆயிரம்னு வாங்கிட்டுதான் டிரான்ஸ்பர் போட்ருக்காங்க. இதை கலெக் ஷன் பண்ணித்தர்றதே அங்க இருக்குற ஆபீஸ் பாய்தான்!'' என்றாள் சித்ரா.

'டிவி'யில் தீபாவளி விளம்பரத்தைப் பார்த்ததும் அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள் மித்ரா...

''தீபாவளிக்கு தற்காலிக பட்டாசுக் கடை போடுறதுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்களைப் போடுறீங்களேன்னு கலெக்டர்ட்ட கோவையோட முக்கியப் பிரமுகர் ஒருத்தர் கம்பிளைன்ட் பண்ணிருக்காரு. நீங்க போடுற ரூல்ஸ் எல்லாம் நிரந்தரமா கடை போடுறவுங்களுக்குக் கிடையாதான்னு கேட்ருக்காரு.

உடனே கலெக்டர், எல்லா டிபார்ட்மென்ட் ஆபீசர்களையும் கூப்பிட்டு, பர்மனெண்ட் லைசென்ஸ் இருக்குற பட்டாசுக்கடைகளை ஆய்வு பண்ணச் சொல்லிருக்காரு. அதுக்குள்ள நம்ம ஊர்ல இருக்குற எக்ஸ் எம்.எல்.ஏ.,ஒருத்தரைப் பார்த்த பட்டாசுக்கடைக்காரங்க சரிக்கட்டீட்டாங்களாம்!''

''கலெக்டர்ன்னதும் ஞாபகம் வந்துச்சு...ஸ்கூல் வண்டிகளை பி.ஆர்.எஸ்., கிரவுண்ட்ல வச்சு ஆய்வு பண்ணிட்டு கலெக்டர், சி.இ.ஓ., எல்லாம் பிரஸ்மீட் கொடுத்திருக்காங்க. அதுக்கு ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல இருந்து ரிப்போர்ட்டர்ஸ்க்கு தலைக்கு ஆயிரம்னு போட்டு 'கவர்' கொடுத்திருக்காங்க.

ஆர்.டி.ஓ., ஆபீஸ் அலுவலர் ஒருத்தரு இதைக் கொடுத்துட்டு இருக்குறப்போ அங்க போன டுபாக்கூர் ரிப்போர்ட்டர் ஒருத்தரு, 'நீங்க ஏன் சார் கஷ்டப்படுறீங்க...கொடுங்க நானே கொடுத்துர்றேன்'னு சொல்லி, மொத்த கவரையும் வாங்கிட்டு, அஞ்சே நிமிஷத்துல எஸ்கேப் ஆயிட்டாராம்!''

''அடக்கொடுமையே...அப்புறம்?''
''வேற வழியில்லாம அப்புறம் வந்தவுங்களுக்கு மறுபடியும் 'கவர்' போட்டுக் கொடுத்திருக்காங்க!''

'டிவி'யில் டாக்டர் பட பாட்டைப் பார்த்ததும் சித்ரா தொடர்ந்தாள்...

''மித்து! மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல்கள்ல வேலை பாக்குற டாக்டர்களுக்கு பேராசிரியர்களா பதவி உயர்வு கொடுக்குறதுக்கு ஒரு பயிற்சி கொடுப்பாங்க. செலவு எல்லாம் கவர்மென்ட்தான் ஏத்துக்கும். ஆனா நம்ம இ.எஸ்.ஐ.,ஹாஸ்பிடல்ல நடக்குற பயிற்சிக்கு, ஒரு டாக்டருக்கு தலைக்கு 5 ஆயிரம் வாங்குறாங்களாம்!''வீட்டுக்குக் கிளம்புவதாகச் சொன்ன மித்ரா, கடைசியாய் ஒரு தகவலை உதிர்த்தாள்...

''அக்கா! இப்பவும் நம்ம ஊருல இரட்டை இலைதான் ஜெயிக்கும் போலிருக்கு...மாதம்பட்டி ஊராட்சி உறுப்பினர் இடைத்தேர்தல்ல தி.மு.க., சார்புல ஓட்டுக்கு ஆயிரம் ரூபா கொடுத்திருக்காங்க. அ.தி.மு.க., சார்புல ஆயிரம் ரூபாயோட வேட்டி, சேலையும் கொடுத்திருக்காங்க!'''பை' சொல்லிவிட்டு, வேகமாக வண்டியைக் கிளப்பினாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X