நாகர்கோவில்: -பாம்பை கடிக்க வைத்து மனைவி உத்ராவை 25, கொன்ற வழக்கில் கணவன் சூரஜ் 27, குற்றவாளி, தண்டனை நாளை அறிவிக்கப்படும் என்று கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் உத்ரா. கணவர் சூரஜ் அடூரை சேர்ந்தவர். 7.5.2020 அன்று தாய் வீட்டில் மாடி ஏ.சி., அறையில் துாங்கி கொண்டிருந்த உத்ரா பாம்பு கடித்து இறந்தார். அறையில் இருந்த பாம்பை உறவினர்கள் அடித்து கொன்றனர். இதற்கு முன்னரும் ஒரு முறை கணவர் வீட்டில் உத்ராவை பாம்பு கடித்து சிகிச்சையில் உயிர் பிழைத்தார். 'சர்ப்ப சாபம்' என்று கதை கிளப்பப்பட்டது. ஆனால் உறவினர்களுக்கு இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் சூரஜ்ஜிடம் விசாரித்த போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதை தொடர்ந்து சூரஜ், பாம்பு வழங்கிய சுரேஷ் கைது செய்யப்பட்டனர். தனித்துவம் வாய்ந்த இந்த வழக்கில் அறிவியல்பூர்வமாகவும் போலீசார் விசாரித்தனர்.
கோழி மூலம் உறுதி
பாம்பு சாதாரணமாக கடித்தால் பற்களுக்கிடையிலான இடைவெளி 1.7 செ.மீ.மட்டுமே இருக்கும். ஆனால் உத்ராவை கடித்த பாம்புகளின் பல் இடைவெளி 2.5 மற்றும் 2.7 செ.மீ. இருந்தது. பாம்பின் தலையில் பிடித்து கடிக்க வைத்தால்தான் இந்த இடைவெளி வரும் என்பதை அரசு தரப்பில் எடுத்துரைத்தனர். இதற்காக கோழி இறைச்சியில் பாம்பின் தலையை பிடித்து கடிக்க வைத்து அதன் அளவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய சுரேஷ், மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியை கொல்ல வேண்டும் என்று கூறி சூரஜ் பாம்பை வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்தார்.பாம்பு வேகமாக கடிப்பதற்காக அதை ஏழு நாள் பட்டினி போட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை உட்பட 288 ஆதாரங்கள், 40 பொருட்கள், 87 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் சூரஜ் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று நீதிபதி கேட்ட போது ஒன்றும் சொல்வதற்கில்லை என்று விரக்தியில் கூறினார்.
பின்னர் நீதிபதி மனோஜ் தீர்ப்பளித்தார்.சூரஜ் குற்றவாளி என அறிவித்த அவர் தண்டனை நாளை (அக்.13) அறிவிக்கப்படும் என்றார். தீர்ப்பை கேட்க உத்ரா குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE