இந்தியா

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி உயர் நீதிமன்றம் உத்தரவு

Added : அக் 12, 2021
Share
Advertisement
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும், 21ம் தேதிக்குதள்ளி வைத்துள்ளது.புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவரு மான சிவா, தாக்கல் செய்த மனு:பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 33.5; பழங்குடியினருக்கு, 0.5
 புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி  உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும், 21ம் தேதிக்குதள்ளி வைத்துள்ளது.

புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவரு மான சிவா, தாக்கல் செய்த மனு:பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 33.5; பழங்குடியினருக்கு, 0.5 சதவீதம் என, புதுச்சேரி நகராட்சி கவுன்சில் மற்றும் பஞ்சாயத்துக்களில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. தற்போது, பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையில், இந்த இடஒதுக்கீடு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது, சட்ட விரோதமானது.உள்ளாட்சி தேர்தலில், ஆதிதிராவிடர்களுக்கு வார்டுகளை ஒதுக்குவதில், சுழற்சி முறையை பின்பற்றுவதில் உள்ள முரண்பாடுகளை களைவதற்காக, தேர்தல் அறிவிப்பை வாபஸ் பெற, உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, புதிய அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை வாபஸ் பெற்றுள்ளனர். இது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.கடந்த, 2011 மக்கள் தொகை அடிப்படையில், இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது என, புதுச்சேரி அரசு கொள்கை முடிவை எடுத்தது.தற்போது, இடஒதுக்கீட்டை வாபஸ் பெற்றிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. மத்தியில் உள்ள ஆளும் கட்சிக்கு சாதகமாக, இடஒதுக்கீடு வாபஸ் பெறப்பட்டுள்ளது.எனவே, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, பிறப்பித்த அறிவிப்பாணையை, ரத்து செய்ய வேண்டும். அதுவரை, தேர்தல் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கி, உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனுவை அவசர வழக்காக, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்துாஸ் அடங்கிய அமர்வு, நேற்று விசாரித்தது.சிவா சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''இடஒதுக்கீடு வழங்குவது என, அமைச்சரவை முடிவு எடுத்தது; அரசின் கொள்கை முடிவும் கூட. அமைச்சரவையுடன் ஆலோசிக்காமல் இடஒதுக்கீடு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கட்சி பாகுபாடு இன்றி, இதற்கு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்,'' என்றார்.மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ''சட்டப்படி, இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். தற்போது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படாததால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அவர்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை. இடஒதுக்கீடு வழங்காததை எதிர்த்தே, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது,'' என்றார்.புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் சார்பில், வழக்கறிஞர் சந்திரசேகரன், மாநில அரசு சார்பில், அரசு பிளீடர் மாலா ஆஜராகி, 'புள்ளி விபரங்கள் இல்லாததால், இடஒதுக்கீடு வாபஸ் பெறப்பட்டது' என்றனர்.

இதையடுத்து, 'அரசியலமைப்பு சட்ட விதிகளை பின்பற்றாததால், தேர்தல் நடவடிக்கைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கு விசாரணையை, தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்புவதாகவும், விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படியும், நீதிபதிகள் தெரிவித்தனர்.அதைத்தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்த ரவில், 'அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில், இடஒதுக்கீட்டை வாபஸ் பெற்று, அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் நடவடிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிடப்படுகிறது. விசாரணையை, வரும், 21ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். தலைமை நீதிபதி அமர்வில், இந்த வழக்கை பட்டியலிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X