சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

குழந்தைக்கு பெயர் வைக்கும்போது... கவனிக்க வேண்டியவை

Added : அக் 12, 2021 | |
Advertisement
Question:குழந்தை பிறக்கும் நேரம், பிறக்கும் இடத்தைப் பொறுத்து, அதற்குப் பெயர் சூட்டுவதன் முக்கியத்துவம் என்ன?சத்குரு: சமஸ்கிருத எழுத்துக்கள் படைப்பை ஒன்றி, அதைப் பற்றிய புரிதலினால் உண்டானவை. அந்த மொழி, கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக யாரின் கற்பனையிலும் உருவாக்கப் பட்டதல்ல. இந்தப் படைப்பில் இருந்தே எடுக்கப்பட்டது. படைப்பை கூர்ந்து கவனித்ததனால் இம்மொழி
குழந்தைக்கு பெயர் வைக்கும்போது... கவனிக்க வேண்டியவை

Question:குழந்தை பிறக்கும் நேரம், பிறக்கும் இடத்தைப் பொறுத்து, அதற்குப் பெயர் சூட்டுவதன் முக்கியத்துவம் என்ன?
சத்குரு: சமஸ்கிருத எழுத்துக்கள் படைப்பை ஒன்றி, அதைப் பற்றிய புரிதலினால் உண்டானவை. அந்த மொழி, கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக யாரின் கற்பனையிலும் உருவாக்கப் பட்டதல்ல. இந்தப் படைப்பில் இருந்தே எடுக்கப்பட்டது. படைப்பை கூர்ந்து கவனித்ததனால் இம்மொழி உருவானது. நீங்கள் உச்சரிக்கும் சப்தமும், அந்த சப்தத்தால் நீங்கள் குறிக்கும் அந்த உருவமும் பல வழிகளில் தொடர்புடையவை. இதைத் தான் 'மந்திரம்' என்று சொல்வோம். 'மந்திரம்' என்றால் சப்தம். வெறும் சப்தம் மட்டுமே. 'யந்திரம்' என்றால் அந்த சப்தத்தை ஒத்த உருவம்.
இதை விஞ்ஞானப்பூர்வமாக சொல்ல வேண்டும் என்றால், பள்ளிக்கூடத்தில் பௌதீகவியல் பாடத்தில் சப்தம் பற்றி இரண்டு பக்கங்களேனும் பாடமாய் படித்திருப்பீர்கள். ஒரு சப்தத்தை, ஆஸில்லோஸ்கோப் என்ற கருவிக்குள் (சப்தத்தை அளக்கும் கருவி) அனுப்பினால், அது, அந்த சப்தத்தின் அலைவரிசை, அதன் வீச்சு மற்றும் அதன் வேறு சில பண்பினால், அந்த சப்தத்திற்கு ஏற்றவாறு ஒரு உருவத்தை அளிக்கும். எத்தனை முறை அந்த சப்தத்தை அதற்குள் செலுத்தினாலும், அத்தனை முறையும் அது ஒரே உருவத்தைத்தான் அளிக்கும். எனவே சப்தம் என்று ஒன்றிருந்தால் அதற்குரிய உருவமும் இருக்கும். அதேபோல் உருவம் என்று ஒன்றிருந்தால், அதற்குரிய சப்தமும் இருக்கும்.
ஒரு குழந்தை பிறக்கும் அந்நேரத்தில், இந்த சூரிய மண்டலத்தின் வடிவநிலையைக் கொண்டு, இந்த நேரத்தில், இந்த நாளில் பிறந்த குழந்தைக்கு, இந்த சப்தம் (பெயர்) தான், சிறப்பாகப் பொருந்தும் என்று முடிவு செய்தனர். இந்தப் பிரபஞ்ச நிலையைக் கொண்டும் சப்தத்தை நிர்ணயிக்க முடியும் என்றாலும், அது சிறிது கடினமாக இருக்கும் என்பதால், குறைந்தபட்சமாக இந்த சூரிய மண்டலத்தைப் பொருத்தேனும் இதை அமைத்துக் கொள்ள முடிவு செய்தனர். இதற்கு விஞ்ஞான அடிப்படையும் உண்டு. இப்படிப் பெயர் சூட்டுவது கனகச்சிதமாகப் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது என்றாலும், பெருமளவு பொருந்திவிடும்.

மிகக் கச்சிதமான பொருத்தம் வேண்டும் என்றால், சிற்சிறு ஒலி மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். சமஸ்கிருத மொழியில் 54 அடிப்படை எழுத்துக்கள் உள்ளன. இந்த 54 அடிப்படை எழுத்துக்களை, சிலநூறு சிற்சிறு ஒலிகளாகப் பிரிக்கலாம். இந்த சிற்சிறு ஒலிகளைக் கொண்டு ஒருவருக்கு பெயர் சூட்டுவது மிகக் கடினமாகி விடக்கூடும். அதனால்தான் சிறு பிசகல் இருப்பினும் பரவாயில்லை என்று இவ்வழியை பின்பற்றினர்.

சில சமயம் சிலருக்கு பெயர் மாற்றம் செய்யும்போது, பிரம்மச்சரியம் அல்லது சந்நியாசியாக அவர் தீட்சை பெறும்போது, இன்னும் சிறிது அதிகமாக கவனம் எடுத்து நான் அவருக்கு பெயர் சூட்டுகிறேன். அவர் பிறந்ததைப் பொறுத்து அல்லாமல், அவர் தற்போது எப்படி இருக்கிறார், தீட்சையை எப்படி உள்வாங்கிக் கொண்டார் என்பவற்றைப் பொறுத்து, ஒலியிலே சிற்சிறு மாற்றங்கள் செய்து, அந்தப் பெயர் அல்லது அந்த சப்தம் அவர்களின் தன்மையை மிக பொருத்தமாக பிரதிபலிக்கும் வகையில் பெயர் சூட்டுவேன். அந்தப் பெயருக்கு என்ன அர்த்தம் என்பது முக்கியமல்ல. பெயரின் அர்த்தம் இதில் அர்த்தமற்றது. நீங்கள் விரும்பியதுபோல், ஏதோ ஒரு அர்த்தத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.
இப்போது உங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டும் பொழுது, நீங்கள் கவனிக்க வேண்டியது, ஒவ்வொரு முறை அக்குழந்தையை அப்பெயர் சொல்லி நீங்கள் அழைக்கும் போதும், அக்குழந்தைக்குள் ஏதோ ஒன்று இளக வேண்டும், தளர வேண்டும். இதுபோல் எல்லாவற்றையும் கவனித்து, உங்கள் குழந்தைக்கு, 'அனிருத்' என்று நீங்கள் பெயர் சூட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் வெளிநாட்டிற்கு போகிறார், அவ்வளவு ஏன், நம் நாட்டிலேயே இன்று பெங்களூருக்குச் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அங்கு பெயர் சுருக்கம் செய்து, அவரை 'Andy' என்று அழைப்பார்கள். இதுவே அவருக்கு, 'ஜனக்' என்று பெயர் சூட்டினால், அவரை 'ஜாக்' என்று அழைப்பார்கள். என்ன பெயர் வைத்தாலும், அதை எப்படியெல்லாம் சுருக்கி பெயர்மாற்றம் செய்வார்கள் என்று சொல்வதற்கில்லை.

பெயர் சூட்டுவது என்பது ஓரளவிற்கு முக்கியம்தான். அதிலும் குறிப்பாக, நீங்கள் முக்தியடைய வேண்டும் என்ற எண்ணத்தில் முனைப்பாக செயல்படுபவராய் இருந்தால், நீங்கள் என்ன பெயர் உச்சரிக்கிறீர்கள், என்ன சப்தம் உச்சரிக்கிறீர்கள் என்பது முக்கியமாகிறது.
இந்தியக் கலாச்சாரத்தில், பெண்களை விட ஆண்களுக்கு பெயர் சூட்டுவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வந்தது. ஏதோ ஆண்பெண் பேதம், ஏற்றத்தாழ்வு என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். இப்படி உருவாக்கப்பட்டதற்கான காரணம், அவர்கள் காலம் முழுவதும் பெற்றவர்களுடனேயே வாழ்ந்திருக்கப் போகிறார்கள். பெண்ணோ வேறொருவருடைய பிரச்சனை அல்லவா? (சிரிக்கிறார்) ஆண் பிள்ளை நீங்கள் இறக்கும் வரை உங்களுடன் இருக்கப் போகிறவன் ஆயிற்றே! நீங்கள் இறக்கும் அத்தருணத்தில், உங்கள் மகனை 'சிவா' என்றழைக்க முடிந்தால்... எவ்வளவு நன்றாக இருக்கும்? அவ்வாறில்லாமல், 'சாம்' என்பது பெயராகி விட்டால் என்ன செய்வது? அதனாலேயே பெற்றோர், தங்கள் மகனுக்கு பெயர் சூட்டுவதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டனர்.
அப்பெயரை ஏற்கும் மகன், தன் பெயரை தானே அத்துணை முறை சொல்லிக் கொள்ள மாட்டார் என்றாலும், அவரை சுற்றி உள்ள நாம் மீண்டும் மீண்டும் அதே பெயரை உச்சரிப்போம் என்பதால், குடும்பத்தின் அப்போதைய நிலைக்கு எந்தச் சப்தம் ஏதுவாக இருக்குமோ அதையே பெயராக வைத்தார்கள். ஆனால் ஒரு பெண்ணிற்கோ, எப்படி பெயர் சூட்டுவது என்பதை அவர்களால் முடிவு செய்ய முடியவில்லை. ஏனெனில், அவள் யாரை மணப்பாள், எப்படிப்பட்ட குடும்பத்தில் வாழ்வாள், அந்த குடும்பத்தாருக்கு எவ்விதமான சப்தம் ஏதுவாக இருக்கும் என்று எதுவுமே இவர்களுக்கு தெரிந்திருக்காது அல்லவா? அதனால் சாதாரணமாக, திருமணத்தன்று அப்பெண்ணிற்கு பெயர் மாற்றம் செய்து வந்தார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, ஒரு பெண்ணிற்கு அவளது திருமண நாளன்று, அவளது கணவனின் பெயர், கோள்களின் நிலை, ஆகியவற்றைப் பார்த்து, அதற்குப் பொருந்தும் வகையில் ஒரு பெயரை முடிவு செய்து, பெயர் மாற்றம் செய்தனர். ஆனால் இன்று அதெல்லாம் அவமரியாதையாகக் கருதப்படுகிறது. நான் ஏன் என் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது. மாற்றிக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் பழக்கத்தில் இருந்த ஒவ்வொரு நடைமுறையும் சுயநலத்திற்காக, அகம்பாவத்திற்காக, சுயலாபத்திற்காக திரிக்கப்பட்டதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையே சரியான முறையில் செயல்படுத்தினால், அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும். சரியான வகையில் நேர்மையான முறையில் செய்யப்படாவிட்டால், இதெல்லாம் பிரச்சனையில்தான் போய் நிற்கும்.

வாழ்க்கை முழுவதும் ஆண்பிள்ளையுடனேயே வாழ்வீர்கள் என்பதால், அவனுக்கு சரியாக பெயர் சூட்டுவது மிக முக்கியமாக இருந்தது. இக்காலத்தில் மகன்கள் எல்லாம் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு தனியாக போய்விடுவதால் இப்போது இது ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் அந்தக் காலக்கட்டத்தில், நீங்கள் இறக்கும் வரை மகன்கள் உங்களுடனேயே இருப்பார்கள். அதனால் நீங்கள் உச்சரிக்கும் அப்பெயர் உங்களுக்கும் உங்கள் குடும்ப சூழ்நிலைக்கும் ஏற்றவாறு இருக்க வேண்டியது அவசியமாயிற்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X