திருவனந்தபுரம்: ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல - மகர விளக்கு பூஜை விமர்சியாக நடைபெறும். கோவிட் தொற்றால் கடந்த ஆண்டு இந்த பூஜைக்கும், சுவாமி தரிசனத்துக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது: இந்த ஆண்டு மண்டல - மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நவ., 16ம் தேதி திறக்கப்படும். முதற்கட்டமாக வரும் 17ம் தேதி முதல், தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதற்கான ஆன்லைன் முன் பதிவு நேற்று (அக்., 11) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கோவிட் பரிசோதனை செய்து, 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கோவிட் தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கொண்டு வர வேண்டும். இது இல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE