ரூ.1,200 கோடியில் மப்பேட்டில் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.1,200 கோடியில் மப்பேட்டில்

Added : அக் 12, 2021
Share
சென்னை:திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில், 1,200 கோடி ரூபாய் முதலீட்டில், 'பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா' துவங்குவதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர்
 ரூ.1,200 கோடியில் மப்பேட்டில்

சென்னை:திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில், 1,200 கோடி ரூபாய் முதலீட்டில், 'பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா' துவங்குவதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி, தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம், சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், மப்பேட்டில் 1,200 கோடி ரூபாய் முதலீட்டில், 'பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா' துவக்க உள்ளன.

நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தமிழக அரசுடன் இணைந்து, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை, மத்திய அரசு, தமிழகத்தில் துவங்குவது மகிழ்ச்சி. தமிழகத்தில் அமையும், முதலாவது பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவாக, இது அமைந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், 158 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.ரயில் மற்றும் சாலை இணைப்புகளுடன், சரக்கு முனையம், சேமிப்பு கிடங்கு, குளிர்பதன சேமிப்பு கிடங்கு, இயந்திரங்கள் வழியே சரக்குகளைக் கையாளுதல், மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளான சுங்க அனுமதி பெறுதல், சோதனை வசதிகள் போன்ற, உலகத் தரம் வாய்ந்த வசதிகள் அனைத்தும், இப்பூங்காவில் அமைக்கப்பட உள்ளன.இதன் வழியாக, சரக்கு போக்குவரத்துக்கான செலவு, கணிசமான முறையில் குறையும் என்பது, இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

சரக்கு போக்குவரத்து செலவை குறைக்கும் வகையில், மாநில சரக்கு போக்குவரத்திற்கான திட்டத்தை தயாரிக்கும் முயற்சிகளை, அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கென, 'டிட்கோ' சார்பில், ஒரு ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் இத்திட்டத்தை, தமிழக அரசு வெளியிட உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்டு வரும், பெங்களூரு - சென்னை விரைவு சாலை, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் முடிவடையும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை சென்னை சர்வதேச விமான நிலையம் வரை நீட்டிக்க வேண்டும்.கோவை மற்றும் துாத்துக்குடியில், பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும்.இதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு தரும்.

இப்போது அமைய உள்ள, பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவில், ரயில்வே துறையின் பங்களிப்பையும் பெற்றுத் தர வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் இறையன்பு, தொழில் துறை செயலர் முருகானந்தம் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X