சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

எம்.ஜி.ஆர்., துரோகம் செய்தாரா?

Added : அக் 12, 2021
Share
Advertisement
எம்.ஜி.ஆர்., துரோகம் செய்தாரா?டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் நடவடிக்கை வித்தியாசமாகவே உள்ளது.வீட்டு வாசலில் துப்பாக்கி ஏந்தியபடி நிற்கும் பாதுகாவலரின் 'அட்டென்ஷன்' மரியாதை; தன் உத்தரவை ஏற்கும் அரசு அதிகாரிகள்; ஓடி வந்து கார் கதவை திறக்கும் அரசு பணியாளர்கள்;


எம்.ஜி.ஆர்., துரோகம் செய்தாரா?டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் நடவடிக்கை வித்தியாசமாகவே உள்ளது.வீட்டு வாசலில் துப்பாக்கி ஏந்தியபடி நிற்கும் பாதுகாவலரின் 'அட்டென்ஷன்' மரியாதை; தன் உத்தரவை ஏற்கும் அரசு அதிகாரிகள்; ஓடி வந்து கார் கதவை திறக்கும் அரசு பணியாளர்கள்; வி.ஐ.பி., 'எஸ்கார்டு' போலீஸ் வாகனம்... இதை எல்லாம் 10 ஆண்டுகளுக்கு பின் பார்த்தவுடன், அமைச்சர் துரைமுருகனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
'நான் சர்வ அதிகாரம் படைத்த அமைச்சர்' என, ஆணவத்தின் உச்சியில் பேசுகிறார்.இப்போது, 'தி.மு.க.,வுக்கு எம்.ஜி.ஆர்., துரோகம் செய்து விட்டார்' என்று பேசி, இன்னொரு சர்ச்சையை துவக்கி வைத்துள்ளார்.எம்.ஜி.ஆர்., தயாரித்து, இயக்கி, நடித்த நாடோடி மன்னன் படத்தில், தி.மு.க.,வின் கொடியை முதன் முதலாக திரையில் காட்டினார்.ஆணும், பெண்ணும் தி.மு.க., கொடியை ஏந்தியபடி திரும்பும், எம்.ஜி.ஆர்., பிக்சர்சின், 'லோகோ' படத்தின் துவக்கத்திலும், முடிவிலும் காட்டப்பட்டது.எம்.ஜி.ஆர்., நடித்த படங்களில் தி.மு.க.,வின் கொள்கை, அண்ணாதுரை புகழ் பரப்பப்பட்டன. துரைமுருகன் காட்பாடியில் கபடி ஆடிக் கொண்டிருந்த காலம் அது; இந்த வரலாறு எல்லாம் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.தி.மு.க., முன்னாள் பொதுச்செயலர் அண்ணாதுரை, எம்.ஜி.ஆரிடம், 'தேர்தல் நிதி ஏதும் தர வேண்டாம். நீங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தால், தி.மு.க.,வுக்கு 30 ஆயிரம் ஓட்டுகள் கிடைக்கும். உங்கள் பேச்சை கேட்டால், 10 லட்சம் பேர் மனம் திரும்புவர்' என்றார்.
கடந்த 1967ல் சட்டசபை தேர்தல் நேரத்தில், எம்.ஜி.ஆர்., சுடப்பட்ட போது தமிழகம் முழுதும் மக்களிடம் எழுந்த அனுதாப அலை, அண்ணாதுரையை முதல்வர் நாற்காலியில் அமர்த்தியது.அப்போது அண்ணாதுரை, தன் அமைச்சரவை பட்டியலை ரா.செழியனிடம் தந்து, இதை எம்.ஜி.ஆரிடம் போய் காண்பித்து வாருங்கள் என்றார். அப்போது, எம்.ஜி.ஆர்., குண்டடி பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.தான் சாதாரணமானவன், அண்ணாதுரை மிகப் பெரிய தலைவர். அவர் நம்மிடம் வந்து அமைச்சரவை பட்டியலை காண்பிக்க சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று எம்.ஜி.ஆர்., ஆச்சரியப்பட்டார்.
எம்.ஜி.ஆரை, 'என் இதயக்கனி' என, அண்ணாதுரை வாயார வாழ்த்தினார். அவரின் மறைவிற்கு பின், யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர்., ஆதரவுடன், கருணாநிதி முதல்வரானார்.அப்போது கருணாநிதி, எம்.ஜி.ஆரை மனதார வாழ்த்திய வாழ்த்து தான் இவை...குன்றனைய புகழ்கொண்ட குணக்குன்றே, முடியரசருக்கு இல்லாத செல்வாக்கு எல்லாம் முழுமையுடன் பெற்று விளங்கும் முழுமதியே!
வென்றாரும், வெல்வாரும் இல்லா வகையில் எந்நாளும் ஒளி வீசும் தன்மதியே! தென்னாடும், தென்னவரும் உள்ளவரை மன்னா! உன் திருநாமம் துலங்க வேண்டும். உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர் உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்.இப்போது சொல்லுங்க துரைமுருகன்... தி.மு.க.,வுக்கு எம்.ஜி.ஆரா துரோகம் செய்தார்?


ஒளியேற்றுமாதமிழக அரசு?அ.தர்மராஜா, சிவகாசியிலிருந்து எழுதுகிறார்:நான் ஆசிரியர் பயிற்சி முடித்து, 'டெட்' தேர்விலும் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் மன வேதனையில் உள்ளேன். தமிழகத்தில் என்னை போல் பல லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் துன்பப்
படுகின்றனர்.தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது, 58 ஆக இருந்தது. இது 59 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது 60 ஆக உயர்த்தி, கடந்த பிப்., 25-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இது மிகவும் தவறான முடிவு. அதுவும், 33 ஆண்டுகள் பணியாற்றிய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயல்.ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதால், தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்.சொத்தை விற்று, கடன் வாங்கி படித்து முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, அரசு வேலைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை, அரசின் அறிவிப்பு கேள்விக்
குறியாக்கி உள்ளது.வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர்கள் தவறான பாதையில் செல்லவும் வாய்ப்பு உண்டு. எனவே, ஓய்வு பெறும் வயது 58 என்ற நிலையே தொடர வேண்டும். இளைஞர்களின் வாழ்வில், தமிழக அரசு ஒளி ஏற்ற வேண்டும்.


லஞ்சத்தைஒழிக்க முடியும்!பொன்.கருணாநிதி, கோட்டூர், பொள்ளாச்சியிலிருந்து எழுதுகிறார்:அரசு ஊழியர்கள், தங்கள் கோரிக்கை தொடர்பாக முறையீடு செய்யும் போதெல்லாம், அது நியாயமா என்று பார்ப்பதை விடுத்து, சிலர் லஞ்சம் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர்.உண்மையிலேயே நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் இடையூறாக இருப்பது லஞ்சம் தான். இந்த கொடிய நோய், நம் தேசத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மனசாட்சி உள்ள எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.பெரியம்மையையும், போலியோவையும் ஒழித்துக் கட்டிய இந்தியாவில் லஞ்ச நோயை ஒழிக்க முடியாதா என்ன... முடியும். இதற்கான முயற்சிகளை அரசு ஏன் எடுக்கவில்லை என்பது தான், இங்கு எழுகிற மிகப் பெரிய கேள்வி.
லஞ்சம் வளர்வதற்கு அரசு ஊழியர்கள் மட்டும் காரணமல்ல; இதில் அரசியல்வாதிகளும் பங்குதாரர்களாக இருப்பதால் தான், லஞ்சத்தை இன்று வரை ஒழிக்க முடியவில்லை.'லஞ்சம் கொடுக்க மாட்டேன்' என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருந்தாலே படிப்படியாக குறைந்து, மறைந்து விடும்.ஆனால் சூழ்நிலைகளை காரணம் காட்டி லஞ்சத்தை வளர்த்து வருவதில், பொதுமக்களுக்கும் மிகப் பெரும் பங்குள்ளது என்பது தான், இங்குள்ள எதார்த்தமான, கசப்பான உண்மை.
மத்திய - மாநில அரசுகள் நினைத்தால் கடுமையான சட்டங்களை உருவாக்கி, லஞ்சத்தை ஒழிக்கலாம். அரேபியா போன்ற நாடுகளில் குற்றங்கள் குறைவதற்கு காரணம், அங்கு நடைமுறையில் உள்ள தண்டனைகள் தான்.லஞ்சம் என்பது நம் நாட்டில் காற்றை போல் எல்லா இடத்திலும் பரவியுள்ளது. அதை ஒழிக்க வேண்டும் என்றால், அதற்கான சிந்தனை அரசு நிர்வாகத்தில் உயர் பொறுப்பில்
இருப்போரிடம் உருவாக வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X