எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

செயல்படாத திட்டத்திற்கு ரூ.6 கோடி: மாற்றுத்திறனாளிகள் துறையில் முறைகேடு

Updated : அக் 13, 2021 | Added : அக் 12, 2021
Share
Advertisement
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், பிறந்த குழந்தைகளுக்கான செவித்திறன் குறைபாடு கண்டறியும், 6 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் செயல்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்தியாவில் ஆயிரத்திற்கு ஐந்து குழந்தைகள், பிறக்கும் போதே செவித்திறன் குறைபாடு உடையதாக உள்ளன. இக்குழந்தைகளின் குறையை, ஒன்று முதல் மூன்று வயதிற்குள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 செயல்படாத திட்டத்திற்கு ரூ.6 கோடி: மாற்றுத்திறனாளிகள் துறையில் முறைகேடு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், பிறந்த குழந்தைகளுக்கான செவித்திறன் குறைபாடு கண்டறியும், 6 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் செயல்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவில் ஆயிரத்திற்கு ஐந்து குழந்தைகள், பிறக்கும் போதே செவித்திறன் குறைபாடு உடையதாக உள்ளன. இக்குழந்தைகளின் குறையை, ஒன்று முதல் மூன்று வயதிற்குள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சோதனைகுழந்தைகள் பிறந்த, 48 மணி நேரத்திற்கு உள்ளாகவே, 'பெரா' எனும் நவீன கருவியை பயன்படுத்தி, அவற்றின் செவித்திறனை மிகத் துல்லியமாக பரிசோதிக்கலாம்.

ஐந்து வயது வரையுள்ளவர்களில், செவித் திறன் குறைந்த குழந்தைகளை, ஆரம்ப நிலையில் கண்டறிந்து, அவர்களுக்கு ஆரம்ப நிலை பயிற்சியும், பரிசோதனைகளும் செய்ய, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டம், 2014- - 15ல் துவங்கப்பட்டது. இத்திட்டத்தில், அதிநவீனமருத்துவ ஆய்வு கருவிகள், குளிர் சாதன, தளவாடப் பொருட்கள் தலா, 21 லட்சம் ரூபாய் மதிப்பில், முதல் கட்டமாக 15 மாவட்டங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்டன.இத்திட்டம் மேலும், 13 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு, 6 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டது.

ஆனால், பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ ஆய்வு மேற்கொள்ளும் இத்திட்டத்திற்கான மையங்களை, அரசு பிரசவமருத்துவமனைகளில் துவக்காமல், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்களில் துவக்கினர். அதிலும், முதல்கட்டமாக துவக்கப்பட்ட 15 மையங்களும் செயல்படாத நிலையில், கூடுதலாக, 13 மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.

அதிநவீன மருத்துவ கருவிகள் வாயிலாக, செவித்திறனை பரிசோதிக்க வேண்டுமென்றால், குழந்தைகளுக்கு துாக்க மருந்து கொடுத்து, மருத்துவரின் கண்காணிப்பில் மட்டுமே சோதனையை செய்ய வேண்டும். அதற்கான மருத்துவ முதலுதவி வசதிகள், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் இல்லை. எனவே, பல கோடி ரூபாய் செலவழித்தும், இத்திட்டம்பயனற்று கிடக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டத்தில், ஊனத்தை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பணிகளை துவக்குவது என்ற அம்சம் இடம் பெற்றுள்ளது.இது, மருத்துவத் துறையின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டிய அம்சம்.

ஊனத்தை குழந்தை பருவத்திலேயே கண்டறிய, பல்வேறு பரிசோதனைகளை, பிரசவ மருத்துவமனைகளில் கையாளுகின்றனர்.அதுபோன்ற மருத்துவமனைகளில் செவித் திறனை கண்டறியும், இந்த நவீன கருவிகளுடன்கூடிய மையம் இயங்கினால் தான், பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள், 'டிஸ்சார்ஜ்' ஆகி செல்லும் முன்னரே செவித் திறனை பரிசோதித்து அறிய இயலும்.


அதிக கமிஷன்

அதை விடுத்து, மருத்துவமனையில் இருக்க வேண்டிய விலை உயர்ந்த அதிநவீன மருத்துவ உபகரணங்களை, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், எதற்காக வாங்கி வைத்து இருக்கின்றனர் என்ற சந்தேகம் எல்லாரிடமும் இருக்கிறது.இந்த திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள், அதிக விலை உடையவை. இக்கருவிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களும், போட்டி காரணமாக அதிக கமிஷன் தருகின்றன.

அதனடிப்படையில், அதிக கமிஷன் கிடைக்கக்கூடிய தரம் குறைந்த கருவிகளை கொள்முதல் செய்து, நல்ல கமிஷன் பார்க்க, அதிகாரி ஒருவர் தீட்டிய திட்டம் இது. இந்தத் திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்பட்ட கருவிகள் முற்றிலும் தரமற்றவை. இந்தக் கருவிகள் பழுதடைந்து, 'சர்வீஸ் சென்டருக்கு' சென்றால், தரம் குறைந்தவை என்ற 'குட்டு' வெளிப்பட்டு விடும்.

இத்திட்டத்தின் வாயிலாக பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை குறித்து, மாவட்ட அலுவலகங்களில் இருந்து மாதாந்திர அறிக்கை பெற வேண்டும். ஆனால், ஏழு ஆண்டுகளாக அவர் ஆர்வம் காட்டவில்லை. இம்மையங்களின் செயல்பாடு குறித்து அதிகாரியால் ஆய்வு எதுவும், இதுவரை நடத்தப்படவில்லை.


கோரிக்கை

இப்படி ஒரு மையம் இருப்பதாக, இணையதளத்தில் தகவல் இருப்பதோடு சரி. செயல்படாத இத்திட்டம் குறித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கவனத்திற்கே கொண்டு செல்லப்பட வில்லை.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.மாற்றுத் திறனாளிகள் நலத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், இத்திட்டம் குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும். இதில், மருத்துவ அலுவலர்கள் மற்றும் நிபுணர்களை கொண்டு விரிவான விசாரணை நடத்தி, ஊழல் நடத்திருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X