2 -18 வயதினருக்கு விரைவில் தடுப்பூசி போட அனுமதி! அவசர பயன்பாட்டுக்கு தயாரானது கோவாக்சின்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

2 -18 வயதினருக்கு விரைவில் தடுப்பூசி போட அனுமதி! அவசர பயன்பாட்டுக்கு தயாரானது கோவாக்சின்

Updated : அக் 14, 2021 | Added : அக் 12, 2021
Share
புதுடில்லி,: 'நாடு முழுதும் உள்ள 2 -18 வயதினருக்கு அவசரகால பயன்பாடாக, 'கோவாக்சின்' தடுப்பூசி போட அனுமதி அளிக்கலாம்' என, மத்திய மருந்து ஆணையத்தின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.நம் நாட்டில் சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்
2 - 18 வயதினர்.தடுப்பூசி, அனுமதி, பயன்பாடு, கோவாக்சின்

புதுடில்லி,: 'நாடு முழுதும் உள்ள 2 -18 வயதினருக்கு அவசரகால பயன்பாடாக, 'கோவாக்சின்' தடுப்பூசி போட அனுமதி அளிக்கலாம்' என, மத்திய மருந்து ஆணையத்தின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம் நாட்டில் சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் ஜனவரியில் பயன்பாட்டுக்கு வந்தன. டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்டன. பின், 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்
என, படிப்படியாக தடுப்பூசி போடப்பட்டன. இதன்பின், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் பணி துவங்கியது. தடுப்பூசி போடும் பணி வேகமெடுத்தது. இதுவரை 96 கோடிக்கும் அதிகமான, 'டோஸ்' போடப்பட்டுள்ளன.


பரிசோதனை'சைடஸ் கடிலா' நிறுவனம் 12 - 18 வயது வரையிலான சிறார்களுக்கு, 'சைகோவ் - டி' என்ற ஊசியில்லா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இதன் அவசரகால பயன்பாட்டுக்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம் சமீபத்தில் அனுமதி அளித்தது. இதையடுத்து, இந்த தடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம்,

தங்கள் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை 2 - 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்தது.இதன் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடிந்ததை அடுத்து, அதன் தரவுகளை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் சமீபத்தில் சமர்ப்பித்தது. மேலும், அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி கோரியும் விண்ணப்பித்தது. பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்த மத்திய மருந்து ஆணையத்தின்
நிபுணர் குழு, 'கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாடாக 2 - 18 வயதினருக்கு செலுத்த, சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கலாம்' என, பரிந்துரை செய்துள்ளது.


எதிர்பார்ப்புஇந்த பரிந்துரைக்கு டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம் ஒப்புதல் அளித்த உடன், குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். டி.சி.ஜி.ஐ., அனுமதி கிடைப்பதில் சிக்கல் எதுவும் இருக்காது என கூறப்படுகிறது. எனவே, குழந்தைகளுக்கான
தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி பரிசோதனை நெறிமுறைகளின் படி, அவசரகால பயன்பாட்டுக்கு கோவாக்சின் வந்த பின்னும் ஆய்வுகளை தொடர வேண்டும் என்றும், தடுப்பூசியின் பாதுகாப்பு, அது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து 15 நாட்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்யும்படியும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.ஐதராபாதைச் சேர்ந்த, 'பயோலாஜிக்கல் - இ' மற்றும் சீரம் இந்தியா ஆகிய நிறுவனங்கள், குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கும் விரைவில் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் கிடைக்கும்பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உலக அளவில் 2 - 18 வயதினருக்கு தடுப்பூசி போடுவதற்கான முதல் அனுமதி கோவாக்சினுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகத்திற்கும், நிபுணர் குழுவுக்கும், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு நன்றி. மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் இருந்து மேலும் சில ஒழுங்குமுறை அனுமதிகள் கிடைக்க வேண்டி உள்ளது. அவை கிடைத்ததும் குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X